ச
மீபத்தில் நண்பர் ரோஹினுடன் மிஷ்கினின் ‘துப்பறிவாளன்’ திரைப்படம் பார்த்தபோது, திரையில் அரையிருட்டில் யாரார் எங்கிருக்கிறார்கள் என்று ரோஹின் கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தார். எனக்கு ‘அரையிருட்டிலும் இளம் பெண்கள் மட்டும் பளிச்சென்று தெரியும்’ அபூர்வத் திறன் பிறவியிலிருந்தே இருப்பதால், ஒரு காட்சியில் அனுவின் தலையில், பல ஆண்டுகள் கழித்துக் கனகாம்பரத்தைப் பார்த்தவுடன் உணர்ச்சிவசப்பட்டு, “ரோஹின்…. கனகாம்பரம்” என்று கிட்டத்தட்ட கத்திவிட்டேன். ரோஹின் திரும்பி, “டேய்…. ஆளையே நான் தேடிகிட்டிருக்கேன். நீ எங்கருந்துடா பூவப் பாத்த?” என்பதுபோல் என்னை முறைத்துவிட்டு முகத்தைத் திருப்பிக்கொள்ள, மனம் படத்திலிருந்து விலகி, கனகாம்பரத்துக்குத் தாவிவிட்டது.
ஊரில் அக்கம்பக்கத்து வீட்டு இளம் பெண்களின் மடியில் உதிரிக் கனகாம்பரத்தைப் பார்த்த நினைவுதான் முதலில் வந்தது. அவர்கள் தங்கள் கால்களை மடக்கி அமர்ந்து, குழிபோல் தாழ்ந்திருக்கும் தங்கள் பாவாடையில் உதிரிக் கனகாம்பரப் பூக்களைப் போட்டுக்கொண்டு, “புன்னகை மன்னன் படம் பாத்துட்டியா சுரேந்த்ரு?” என்று கேட்டபடியே கனகாம்பரத்தை நாரில் வைத்து, இன்று வரையிலும் எனக்குப் புரிபடாத ஏதோ மாயாஜாலத்தை விரல்களால் செய்து, பூவை முடிச்சிட்டுவிட்டு, அடுத்த பூவை எடுக்கும்போது அடுத்த கேள்விக்குச் சென்றிருப்பார்கள். கனகாம்பரம் பெண்களின் மடியிலிருந்து, கைக்குச் சென்று, பின்னர் தலைக்குச் செல்லும்போது ஊருக்கு நூறு புதுக் கவிஞர்கள் முளைப்பார்கள்.
கனகாம்பரம் ஏகப்பட்ட விதங்களில் பெண்களின் தலையில் வைக்கப்படுவதை என்னைப் போன்ற கனகாம்பர ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளோம். சிலர் ஒற்றைக் கொண்டை ஊசியைச் செருகி ‘V’-ஐ தலைகீழாக போட்டதுபோல் தொங்கவிட்டிருப்பார்கள். சிலர் இரண்டு கொண்டை ஊசிகளைப் பயன்படுத்தி ‘ப’வை தலைகீழாக போட்டதுபோல் தொங்க விட்டிருப்பார்கள். ஆச்சா? சில பெண்கள் கனகாம்பரம், மல்லிகை ஆகிய இரண்டு பூக்களையும் சேர்ந்தாற்போல் தலையில் வைத்திருப்பார்கள்… இது கமலும், ரஜினியும் சேர்ந்து நடிப்பதற்கு இணையானது என்பதால் இளைஞர்கள் இதை மிகவும் விரும்புவார்கள். இதிலும் இரண்டு வகை உள்ளது. ஒன்று… ஒரே நாரில் கனகாம்பரமும் மல்லிகைப்பூவும் கலந்து தொடுக்கப்பட்ட பூச்சரம். இது அப்போது ‘திரும்பிப்பார்’ என்ற பெயரில் பிரபலமாக இருந்தது.
பிறிதொரு முறையில் சில பெண்கள் மேலே மல்லிகைப்பூச் சரத்தைத் தொங்க விட்டு, கீழே கனகாம்பரத்தை தொங்கவிட்டிருப்பார்கள். வேறு சிலர் கனகாம்பரத்தை மேலே ஏற்றி, மல்லிகையை கீழே இறக்கியிருப்பார்கள். இதையெல்லாம் விட அட்டகாசமாக ஒன்று உள்ளது. மல்லிகைப் பூவை மேலே ‘ப’வைக் கவிழ்த்தாற்போல் போட்டு, அதன் நடுவே ஒரு சிறு கனகாம்பரத் துண்டை ‘V’-ஐக் கவிழ்த்தாற்போல் போட்டிருப்பார்கள் பாருங்கள்… அட அட அடா… இதுபோல் மல்லிகையையும் கனகாம்பரத்தையும் இணைத்துப் பெண்கள் தங்கள் கூந்தலில் ஜுகல்பந்தி நிகழ்த்துவதைப் பார்த்து, நான் எழுதிய கவிதைகளில் மெலிதாகப் பூ வாசம் அடித்தது எனக்கு மட்டுமே தெரியும்.
- ஜி.ஆர். சுரேந்தர்நாத், எழுத்தாளர், தொடர்புக்கு: grsnath71@gmail.com