சிறப்புக் கட்டுரைகள்

மலைக்க வைக்கும் கலைஞர்- ஓவியர் மணியம் செல்வன்

செய்திப்பிரிவு

சங்கர், எனது தந்தை மணியத்தின் நண்பர். அவருடன் ஓவியப் பள்ளியில் படித்தவர். எனக்கு அவர் அறிமுகமானது அம்புலிமாமா வழியாகத்தான். அதிலும் விக்கிரமாதித்தன் - வேதாளம் ஓவியத்தை மறக்கவே முடியாது. அவரது ஓவியங்கள் எனக்குப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. ராமகிருஷ்ணா மடத்திலிருந்து வெளிவரும் 'ராமகிருஷ்ண விஜயம்' பத்திரிகையில் 1980-களில் இதே காலகட்டத்திலும் நானும் அந்த இதழுக்கு வரைந்தேன். அவரது ஓவியங்கள் அசாதாரணமான அழகுகொண்டவை.

சித்திரக் கதைகளில் கதாபாத்திரங்களின் தோற்றத்தைப் பல கோணங்களில் வரைய வேண்டியிருக்கும். சட்டகத்துக்குள் அவர் உருவாக்கும் ஓவியங்கள் அத்தனை நுணுக்கமாக இருக்கும். இது போதும் என்று அவர் நினைக்கவே மாட்டார். உண்மையில், அந்த இதழில் அவரது ஓவியங்கள் நிறைய இடம்பெற வேண்டும் என்று நான் எனது ஓவியங்களின் எண்ணிக்கையைக் குறைத்துக்கொண்டேன். இன்றும் சலிக்காமல் வரைந்துவருகிறார் சங்கர். அந்த ஓவிய நுணுக்கம் அவரிடமிருந்து அகலவில்லை. இதெல்லாம் மிகப் பெரிய வரம்.

அவரது நகைச்சுவை உணர்வு அலாதியானது. ராமகிருஷ்ண மடத்தின் சார்பில் 1980-களில் அவருடன் காசி சென்றுவந்த அனுபவம் மறக்க முடியாதது. பயணம் முழுவதும் நகைச்சுவைக் கதைகளைச் சொல்லிக்கொண்டே வந்தார். மிகவும் அன்பான மனிதர். மூத்த ஓவியர் கோபுலுவுக்கும் நல்ல நகைச்சுவை உணர்வு உண்டு. சமீபத்தில் நடிகரும் ஓவியருமான சிவகுமாரும் நானும் சங்கரை அவரது வீட்டில் சந்தித்து ஆசிபெற்றோம். அவரது திறமைகளை வியந்து பேசிக்கொண்டிருந்தார் சிவகுமார்.

பொதுவாக, இதுபோன்ற சாதனைகள் செய்த கலைஞர்களுக்கு, குறிப்பாக ஓவியர்களுக்குப் பெரிய அளவில் மரியாதை செய்யப்படுவதில்லை. அவரது பிறந்தநாளையொட்டி, அவரைச் சிறப்பிக்கும் 'தி இந்து'வுக்கு எனது வாழ்த்துகள்! சங்கரின் ஆசிகள் நம் அனைவருக்கும் தேவை.

SCROLL FOR NEXT