ஆக்கபூர்வமான விஷயங்களுக்கானது என்று அறியப்பட்ட அறிவியல், முதல் உலகப்போரில் அழிவு வேலைகளுக்கும் கைகொடுத்தது. ஐரோப்பிய நாடுகள் முதல் ஆப்பிரிக்க நாடுகள் வரை உலகமே களத்தில் குதித்த முதல் உலகப் போரில், தொழில்நுட்பம் பெரும்பங்கு வகித்தது. ‘இரும்புப் புயல்’ என்று இந்தப் போரை ஜெர்மனி ராணுவ அதிகாரி எர்னெஸ்ட் ஜங்கர் குறிப்பிட்டார். அதுவரை உலகில் நடந்த போர்களைவிட முற்றிலும் புதுவிதமாக நடைபெற்ற இந்தப் போரில் அறிவியல் கண்டுபிடிப்புகளும் தொழில்நுட்பங்களும் போரின் வெற்றி தோல்விகளைத் தீர்மானித்தன.
நீர்மூழ்கிக் கப்பல்கள், விமானங்கள், ஜிப்லின் விமானங்கள், 28 டன் எடை கொண்ட பிரம்மாண்டமான பீரங்கிகள், விஷ வாயுச் செலுத்திகள், தீ உமிழும் துப்பாக்கிகள், இயந்திரத் துப்பாக்கிகள் என்று பல்வேறு அறிவியல் சாதனங்கள் முதல் உலகப் போரில் இடம்பெற்றன. எனினும், பல ராணுவ அதிகாரிகள், போரில் சிறப்பாக உதவுபவை குதிரைகளே என்று அப்போது கருதியிருக்கிறார்கள். “குதிரைகளுக்கான மதிப்பு என்றுமே குறையாது. விமானங்களும் பீரங்கிகளும், போர் வீரர்களுக்கும் குதிரைகளுக்கும் உதவி செய்யும் சாதனங்கள்தான்” என்று பிரான்ஸின் போர்முனையில் இருந்த பிரிட்டன் தளபதி டக்ளஸ் ஹெய்க் கூறினாராம்.