சிறப்புக் கட்டுரைகள்

சமூக விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டவர்களா எழுத்தாளர்கள்?

ஆதி வள்ளியப்பன்

“எழுதுகிறவன்தான் எழுதுகிறவற்றைக் காட்டிலும் சிறந்தவனாக இருக்க வேண்டும்” - மக்சிம் கார்க்கி

எழுத்தாளர் கோணங்கி தங்களிடம் பாலியல் சித்ரவதைகள் செய்ததாக இளைஞர்கள் பலர் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாகப் பதிவிட்டுவருகிறார்கள்; கூட்டாக அறிக்கை ஒன்றையும் அவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள்.

கோணங்கியின் தம்பி ச.முருகபூபதி நடத்தும் ‘மணல்மகுடி’ நாடகக் குழுவில் இருந்த காலத்திலும், அவர்களது வீட்டுக்குச் சென்றிருந்தபோதும், வெளியில் சந்தித்தபோதும் இதுபோன்ற சித்ரவதைகள் நடைபெற்றதாகப் பதிவுகள் கூறுகின்றன; ‘மணல்மகுடி’ குழுவைச் சாராத பலரும் குற்றம்சாட்டியிருக்கிறார்கள்.

பதின்ம வயதின் இறுதியிலும் 20-களின் தொடக்க வயதுகளிலும் தாங்கள் இருந்தபோது, இந்தப் பாலியல் சித்ரவதைகள் நிகழ்ந்ததாகவும் இதன் காரணமாகத் தீவிர மனநல பாதிப்புகளுக்கு ஆளானதாகவும், இது தங்கள் தனிப்பட்ட உரிமைகளின் மீது நிகழ்ந்த அப்பட்டமான உரிமை மீறல் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் குற்றஞ்சாட்டியிருக்கிறார்கள்.

கவனமில்லா அசட்டை: சமூகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் சித்ரவதைகள் அதிகளவில் நடைபெற்றுவருகின்றன; அவற்றில் குறைந்த அளவே வெளியே தெரியவருகின்றன. ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வைன்ஸ்டீன் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து #metoo இயக்கம் அமெரிக்காவில் 2017இல் மிகப் பெரிதாக எழுச்சிபெற்றது.

அதைத் தொடர்ந்து, அதிகாரத்தைச் செலுத்தியும் மிரட்டப்பட்டும் தங்களுக்கு நிகழ்த்தப்பட்ட அநியாயம் குறித்து உலகின் பல நாடுகளைச் சேர்ந்த பெண்கள் வெளியில் சொல்லத் தொடங்கினார்கள்.

எழுத்தாளர்கள் மீது பாலியல் சார்ந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுவது புதிதல்ல. இந்த விவகாரத்தில் ஆண் எழுத்தாளர் ஒருவர், மற்ற ஆண்களிடம் அத்துமீறியதாக வந்துள்ள குற்றச்சாட்டு புதிது. பாய்ஸ் நாடகக் குழு காலம் தொடங்கி தமிழ்நாட்டிலும் இதுபோன்ற சித்ரவதைகள் நடைபெற்றுவருவதாகக் கூறப்படுகிறது.

ஆனால், சமூகம் அதை உரிய கவனத்துடன் அணுகவோ, தீர்வுகாணவோ முன்வரவில்லை. பெண்களுக்கு எதிரான பாலியல் சித்ரவதைகளில் உறவினர்கள், குடும்ப நண்பர்கள் போன்ற நெருக்கமான ஆண்களே பெரும்பாலும் குற்றவாளிகளாக இருக்கிறார்கள் என்பது எப்படி அசட்டையாகக் கையாளப்படுகிறதோ, அதே வகையில் ஆண்களுக்கு இன்னொரு ஆணால் நிகழ்த்தப்படும் பாலியல் சித்ரவதைகள் குறித்தும் ஒருவித அசட்டைத்தனம் காட்டப்படுகிறது.

பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட ஒருவர், தனக்கு இப்படி நடந்திருக்கிறது என்று வெளிப்படையாகச் சொல்வதற்கும், அவருக்குத் துணைநிற்பதற்கும் இந்தச் சமூகம் நெடுங்காலமாகவே தயாராக இல்லை.

தனக்கு இதுபோல நடந்தது என ஓர் ஆண் கூறினால், முதலில் அதை உளவியல்பூர்வமாக - அறிவியல்பூர்வமாக அணுகும் தன்மையைச் சமூகமும் குடும்பத்தினரும் கொண்டிருக்கின்றனவா? நம் சமூகத்துக்கு அந்த உணர்வு இருந்திருந்தால், இந்தப் பிரச்சினை இவ்வளவு காலம் தொடர்ந்திருக்காது.

குற்றம் பெருகுவதன் காரணம்: இந்தியாவில் #metoo இயக்கம் உத்வேகம் பெற்றபோது, கவிஞர் வைரமுத்து மீது இளம்பெண்கள் பலர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்கள். இணைய அரட்டை மூலம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக எழுத்தாளர் சாரு நிவேதிதா உள்ளிட்டோர் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறார்கள்.

தங்களிடம் அத்துமீற முயன்றார் என ‘மணல்வீடு’ ஹரிகிருஷ்ணனுக்கு எதிராகவும் சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டு உள்ளது. இப்போது கோணங்கி பிரச்சினையை முன்வைத்துப் பேசும் பலரும் மேற்கண்டவர்களுக்கு எதிராகப் பெரிதாகப் பேசப்படவில்லையே, நடவடிக்கை எடுக்கப்படவில்லையே; இப்போது மட்டும் ஏன் இவ்வளவு வேகம் என்கிறரீதியில் கேள்வி எழுப்புகிறார்கள்.

பாலியல் குற்றம் சாட்டப்பட்டவர்களை விமர்சனபூர்மாகவே சமூகம் எதிர்கொள்ள வேண்டும். அதிகாரம், செல்வாக்கு, மறைமுக மிரட்டல் போன்ற பல்வேறு அம்சங்களைக் காட்டியே பாலியல் குற்றங்கள் நிகழ்த்தப்படுகின்றன. அவை கண்டிக்கவும் தண்டிக்கவும் படாமல் போவது, புதிய புதிய நபர்களிடம் அவை தொடரவே வழிவகுக்கும்.

தனக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகளை மறுத்து பேட்டியளித்துள்ள கோணங்கி, ‘இது ‘மணல்மகுடி’ நாடகக் குழுவுக்கு எதிரான சதி’ என்பதுபோலப் பேசியுள்ளார். மேலும் சிலரோ இது ஒன்றும் ‘ஊருக்குத் தெரியாத ரகசியம் இல்லையே’ என்பதுபோலப் பேசுகிறார்கள்.

நடக்கும் குற்றத்தை ஏற்காமல் இருப்பதும், தனக்கு நிகழாமல் இருப்பதுவரை பிரச்சினை இல்லை என்று கடப்பதுமே இதுபோன்ற குற்றங்கள் பெருகுவதற்கும் தொடர்வதற்கும் அடிப்படைக் காரணம்.

நெறியற்ற வாதங்கள்: இந்த விவகாரம் சார்ந்து கருத்து தெரிவிக்கும் சிலர், அவரவர் கருத்துநிலைப்பாட்டைச் சற்றும் விட்டுக்கொடுக்காமல் பேசிவருகிறார்கள்.

எழுத்தாளர்களுக்குப் பிறழ்வு மனநிலை தவறு இல்லை என்றும், சமூகத்தில் மற்றவர்களிடம் அவர்கள் நிகழ்த்தும் வன்முறைகள்-சித்ரவதைகளைப் பெரிதுபடுத்தக் கூடாது என்றும் அவர்கள் கோருகிறார்கள். ‘எழுத்தாளர்கள் தவறு செய்வதற்கும், சமூக நெறிமுறைகளை மீறுவதற்கும் சாத்தியமுண்டு. அதைப் பெரிய குற்றமாகக் கருதக் கூடாது’ என்று ஜெயமோகன் உள்ளிட்டோர் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.

இன்னும் சிலரோ மாறுபட்ட பாலியல் விழைவு கொண்டவர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும், அவர்களைக் குற்றமிழைத்தவர்களாகக் கருதக் கூடாது என்று வாதிடுகிறார்கள். மாற்றுப் பாலின விழைவு கொண்டவர்களின் உணர்வுகள் புரிந்துகொள்ளப்பட வேண்டியவையே. அதே நேரம், பாலியல் குற்றமிழைப்பதையே வழக்கமாகக் கொண்ட ஒருவர், எப்படிப்பட்ட பாலியல் விழைவைக் கொண்டிருந்தால் என்ன?

பாலியல் குற்றம் என்பது பாலியல் குற்றம்தான். யார் அதைச் செய்கிறார், எதற்காகச் செய்கிறார், அவர் பின்னணி என்ன என்பதையெல்லாம் எப்படிக் கணக்கில் கொள்ள முடியும்? இப்படிப்பட்ட நெறியற்ற வாதங்களை கணக்கில்கொள்ளும் ஒரு சமூகம், பிற்போக்குத்தனத்திலும் மூடநம்பிக்கைகளிலும் மூழ்கிக் கிடக்கிறது என்றே அர்த்தம். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு பற்றிய அக்கறை இதில் எங்கேயும் வெளிப்படவில்லை.

மற்றொருபுறம், இதே தீவிர இலக்கியவாதிகள்தான் இந்தச் சமூகம் சுரணையற்றது, மக்கள் அறிவிலிகள் என்று எடுத்ததற்கெல்லாம் குற்றம்சுமத்தி எழுதுவதும் பேசுவதுமாக இருக்கிறார்கள். இப்போது, எழுத்துத் துறை சார்ந்த ஒருவருக்கு எதிராகப் பகிரங்கமாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்படும்போது, ‘இல்லை! அவர் எழுத்தாளர், சிறு பிறழ்வுகளுக்காக அவர்களைக் குற்றவாளியாக்காதீர்கள்’ என்று ஓடோடி வருகிறார்கள்.

என்ன மாறிவிடும்? இந்தப் பாலியல் சித்ரவதைகளுக்கு எதிராகத் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம், எஸ்.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் தங்களுடைய கண்டனங்களைப் பதிவுசெய்திருக்கிறார்கள். இது போன்ற வெளிப்படையான கண்டனங்களால் என்ன நேர்ந்துவிடப் போகிறது, பாதிக்கப்பட்டவருக்கு ஆதரவாகக் கருத்து சொல்வதால் என்ன மாறிவிடப் போகிறது என்கிற கேள்வி வரலாம்.

பாலியல் குற்றங்கள் தனக்கு நேர்ந்தாலும் நேராவிட்டாலும் கண்டனத்துக்கு உரியவையே என்கிற சேதி இந்தக் கண்டனங்களின் மூலம் சமூகத்துக்குக் கடத்தப்படுகிறது. எதிர்காலத்தில் இதே குற்றத்தை ஒருவர் இழைக்கத் துணியும் முன் அவருக்கான பகிரங்க எச்சரிக்கையாக இது அமையும். ஒருவேளை இது போன்ற குற்றம் மீண்டும் நடந்தால், பாதிக்கப்பட்டவர் துணிச்சலுடன் தனக்கு நேர்ந்த குற்றத்தை வெளிப்படையாகச் சொல்லவும், மனநலம் பெறவும், எதிர்காலக் குற்றங்களைத் தடுக்கவும் வாய்ப்பாக அமையும். ஒரு சமூகம் தனது தவறுகளை இப்படித்தான் காலந்தோறும் திருத்திக்கொண்டு, அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துவருகிறது.

எல்லா நுண்ணுணர்வுகளும் ஒரே நாளில் சமூகத்துக்கு வாய்க்கப்பெறுவதில்லை. ஒவ்வொரு உரிமையும், புரிதலும் திரும்பத் திரும்ப வலியுறுத்தப்பட்டு, போராடி, சிறிதுசிறிதாக நகர்த்தித்தான் பல மாற்றங்கள் சாத்தியப்பட்டுள்ளன. எல்லா மாற்றங்களும் ஒரு தலைமுறையின் போராட்டத்தில் தொடங்கி, அந்தத் தலைமுறையின் காலத்திலேயே விளைச்சலைக் கண்டுவிடுவதில்லை.

அதே நேரம், அடுத்து வரும் தலைமுறைகள் போராட்டத்துக்கான பலன்களை நிச்சயமாகப் பெறும். எந்த ஒரு மனிதரும் பாரபட்சமாக நடத்தப்படவோ, சுரண்டப்படவோ கூடாது என்கிற நுண்ணுணர்வுகளை வளர்த்தெடுப்பதையே ஒரு சமூகம் நோக்கமாகக் கொண்டு இயங்க வேண்டும்; அதுதான் அடிப்படை!

- ஆதி வள்ளியப்பன் | தொடர்புக்கு: valliappan.k@hindutamil.co.in

SCROLL FOR NEXT