ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அருந்ததியர் சமூகத்தை மையப்படுத்தி, மலம் அள்ளும் தொழில் குறித்துப் பேசியதாக எழுந்த சர்ச்சை சமூக வலைதளங்களில் பெரும் விவாதப்பொருளாக மாறியது; அவர் மீது வழக்கும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
சுகாதாரத் துப்புரவுப் பணியில் மலம் அள்ளும் தொழில் எப்போது தொடங்கியது? குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும் ஏன் இத்தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்? இப்படியான கேள்விகளுக்கு விடை தேடவைத்துள்ளது இந்த விவாதம்.
சான்றுகள் சொல்லும் தகவல்கள்: மன்னர், பாளையப்பட்டு, ஜமீன் காலத்தில் அரண்மனைகள் தனியாகவும் அல்லது ஊரின் மையப்பகுதியில் அமைந்திருக்கும். பட்டி, ஊர், சேரி, பட்டினம், நகரம் என்ற அமைப்பில், சாதிவாரியாகத் தெருக்கள் அமைந்திருந்தன; அவற்றில், தற்போது பட்டியல் சமூகத்தினராக அறியப்படுபவர்கள் பொதுவாக வடக்குப்புறத்திலும் சில பகுதிகளில் மேற்குப்புறத்திலும் வசித்துவந்ததற்கான சான்றுகள் உள்ளன.
ஆண்டாண்டு காலமாக மனிதர்கள் கூடும் சந்தைகள், ஆண்டுக்கு ஒரு முறை கோயில் திருவிழாக்களை மையமாக வைத்து, மக்கள் பெரும்திரளாகக் கூடும் திருச்சந்தையில்கூடத் துப்புரவுப் பணியாளர்கள் குறித்த தரவுகள் கிடைக்கவில்லை. கோயில்களில் உழவாரப் பணிகளைத் திருக்கூட்டத்தார் செய்த சான்றுகளே கிடைக்கின்றன.
வேளாண்மை நிலம் கைமாறும்போது, அந்நிலத்தில் பணி செய்துவந்தவர்களும் நிலத்துடன் சேர்த்து விற்கப்பட்ட சான்றுகள் உள்ளன. இதை அடிமை விற்பனை எனப் பேராசிரியர் காளிமுத்து, ஆ.சிவசுப்பிரமணியன் போன்றோர் பதிவுசெய்துள்ளனர். ஆனால் அவர்கள் துப்புரவு, மலம் அள்ளும் தொழிலில் ஈடுபட்ட சான்றுகள் குறித்து ஏதும் குறிப்பிடப்படவில்லை.
‘மழை பெய்தால் தெரியும் வறட்டாம் பீ நாத்தம்’ என்ற பழமொழி குறித்துப் பேராசிரியர் தொ.பரமசிவனிடம் நான் விவாதித்தபோது, “பொதுவாக, வெப்ப மண்டலப் பகுதியில் மலத்தைத் தனியாக அள்ளுதல் இருக்காது. அரண்மனைப் பெண்கள் மலம் கழித்திட ‘பீ மந்தை’ என்ற ஒன்று இருந்த வழக்காறு உள்ளது. அதில்கூட மலத்தை அள்ள ஆள்கள் இருந்த சான்றுகள் இல்லை.
இது பிரிட்டிஷ்காரனின் தேவையால் உருவான சிக்கல். பிரிட்டிஷார் கொண்டுவந்த சீனி, சர்க்கரை ஆலைக்குத் தேவையான கரும்பினை அதிகமாக உற்பத்தி செய்ய, உரத்துக்காகக் காய்ந்த மலத்தை அள்ள வைத்தார்கள். இதன் நீட்சி 1975 வரை நீடித்ததை நான் பார்த்துள்ளேன். ஆனாலும், இது குறித்த பெரிதான ஆய்வுகள் வரவில்லை” என்றார்.
தண்டனைப் பணி: டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியர் மீனா ராதாகிருஷ்ணன், தனது ‘டிஸ்ஹானர்டு பை ஹிஸ்டரி: “கிரிமினல் டிரைப்ஸ்” அண்ட் பிரிட்டிஷ் காலனி பாலிசி, 2010’ (Dishonoured by History: ‘‘Criminal Tribes’’ and British Colonial Policy, 2010) என்ற ஆய்வு நூலில், ‘உப்பு விற்பனை வரி, உப்பு விற்பனை உரிமம் பெறக் கட்டணம் போன்ற நடவடிக்கைகளால் உப்பு வியாபாரம் செய்த குடிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
1871இல் வட இந்தியாவில் கொண்டுவரப்பட்ட குற்றப்பரம்பரைச் சட்டம் இந்தியா முழுவதற்கும் 1911–14இல் நடைமுறைக்கு வந்தது. குற்றப்பரம்பரை வளையத்தில் சிக்கவைக்கப்பட்ட சாதியினர் அனைவரும் ஒரு கொட்டடிக்குள் அடைத்து வைக்கப்பட்டனர்.
இவர்களில் யாரேனும் ஐந்து முறைக்கு மேல் திருட்டுக் குற்றத்தில் ஈடுபட்டால் கொட்டடியில் உள்ள கழிப்பறையைச் சுத்தம் செய்திடும் தண்டனை வழங்கப்பட்டது. இப்படித் தண்டனை பெற்றவர்கள், முதல் வகுப்பு ரயில் பெட்டியில் மட்டும் அமைக்கப்பட்டிருந்த கழிப்பறைகளைச் சுத்தம் செய்திடப் பணிக்கப்பட்டனர்’ என எழுதியிருக்கிறார்.
1801இல், இந்தியா முழுவதிலும் பாளையப்பட்டுகளிடம் இருந்த நீதி, ராணுவத்தைத் தடைசெய்து, வெடிபொருள் ஆயுத தடைச்சட்டத்தைக் கிழக்கிந்தியக் கம்பெனி கொண்டுவந்தது. பாளையப்பட்டுப் படைகளில் வெடிப் படை வீரர்களாகவும் வெடி தயாரிப்பவர்களாகவும் இருந்தவர்கள் அருந்ததியர், குறவர், காலாடி, பிறமலைக் கள்ளர், வலையர் போன்ற குழுக்கள். இதற்கு இன்றும் சான்றெச்சமாகக் கொங்கு மண்டலம், மதுரை மண்டலக் கோயில் திருவிழாக்களில் வெடி வெடிக்கும் உரிமை இவர்களிடம் உள்ளதைக் கள ஆய்வில் தெரிந்துகொள்ளலாம்.
‘1801 சட்டத்தின்படி வெடிப் படை வீரர்களைப் பாளையப்பட்டுத் தலைவர்கள் கைவிட வேண்டிய சட்ட நெருக்கடியால், படை வீரர்களைப் பிரிட்டிஷார் எளிதாகச் சட்ட வளையத்துக்குள் கொண்டுவந்து, நகராட்சித் துப்புரவுத் தொழிலிலும், ராணுவக் குடியிருப்பு, ரயில்வே குடியிருப்பு, தேயிலை எஸ்டேட்டுகளில் பிரிட்டிஷார் குடியிருப்புகளில் மலம் அள்ளும் தொழிலிலும் ஈடுபடுத்தினர். ஆனாலும் குற்றப்பரம்பரைச் சட்டத்தில் இருந்த அனைத்துச் சாதியினரையும் துப்புரவுத் தொழிலுக்குக் கொண்டுவரவில்லை.
மாறிப்போன வாழ்வாதாரம்: இதில் குறிப்பிட்ட சாதியினருடன் பல்லாண்டுகள் தங்கி ஆய்வுசெய்த டபிள்யூ.ஜெ.ஹட்ச் (W.J.Hatch) என்ற பாதிரியார் 1896இல் ஓர் அறிக்கையை வெளியிட்டார். இது ‘The Land Pirates of India’ எனும் நூலாக வந்துள்ளது. இந்த அறிக்கையில், ‘உப்புச் சட்ட நெருக்கடி காரணமாகத் தொழில் இழந்த குழுவினர் வயிற்றுப் பிழைப்புக்காகத் திருட்டுக் குற்றம் செய்திடும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
இதற்கு முன்பு உப்பு, கறிவேப்பிலை, இஞ்சி, கூடை முடைதல், அரசர்களுக்கும் படை வீரர்களுக்கும் சாராயம் காய்ச்சிக் கொடுத்தல், சிறுதானிய வியாபாரம் போன்றவற்றில் ஈடுபட்டவர்கள் அந்தத் தொழில்களை விட்டுவிட்டு சாலைக் கொள்ளையர்களாக உள்ளனர்’ எனப் பதிவுசெய்துள்ளார்.
மெட்ராஸ் மாகாணக் காவல் துறைத் தலைவராக 1904இல் இருந்த பப்புவா நாயுடு, தென்னிந்தியா முழுவதிலும் இருந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை ரயில்வே கொள்ளையர்கள் எனத் தனது அறிக்கையில் (The History of Railway Thieves: With Hints on Detection எனும் நூலாக வெளிவந்தது) குறிப்பிடுகிறார்.
இப்படியாக பிரிட்டிஷ் ஆட்சியில் தொழில் வர்த்தகம் சில குழுக்களுக்காகக் கொடுக்கப்பட்டது என்பதும், தமிழகத்தில் வியாபாரக் குடிகளாகவும் போர்க் குடிகளாகவும் போர்த் துணைக்குடிகளாக இருந்த சாதியினர் மலம் அள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டனர் என்பதும்தான் நாம் அறிய வேண்டிய வரலாறு.
- இரா.முத்துநாகு | ‘சுளுந்தீ’ நாவலாசிரியர்; தொடர்புக்கு: rmnagu@gmail.com