சென்னை துறைமுகத்திலிருந்து 1931 டிசம்பர் 13-ல் அம்போஸி என்ற பிரெஞ்சுக் கப்பலில் பெரியார் ஈ.வெ.ராமசாமி புறப்பட்டார். இந்தப் பயணம் சோவியத் ஒன்றியத்துக்கும் ஐரோப்பா வின் பிற பகுதிகளுக்கும் அவரை இட்டுச் சென்றது. “அவருடைய பயணம் வெளிப்படையானது அல்ல; பயணம் குறித்து வெளியில் எதுவும் பேசாமல் மௌனம் காக்கும்படி அவர் தமது தளகர்த்தர்களுக்கு உத்தரவிட்டிருந்தார்” என்று காவல் துறையின் உளவுப் பிரிவு இது குறித்துப் பதிவுசெய்திருக்கிறது.
பெரியாரின் வாழ்க்கை வரலாறுகள் இதனை ஐரோப்பியப் பயணம் என்று குறிப்பிடுகின்றன. கொழும்பு, சூயஸ் கால்வாய், கெய்ரோ, ஏதென்ஸ், கான்ஸ்டான்டிநோபில் வழியாக சோவியத் யூனியன் சென்றார் பெரியார். பின்னர் ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகல், இலங்கை வழியாக இந்தியா திரும்பினார். இருப்பினும் அவர் சோவியத் நாட்டுக்குச் சென்றதே இந்த ஓராண்டுப் பயணத் தின் முக்கியப் பகுதியாகும்.
இந்தப் பயணத்தின்போது ஒரு நாட்குறிப்பை பெரியார் எழுதியிருந்தார். அவர் காலத்திலேயே அதிலிருந்து சில பகுதிகள் அச்சில் வந்தன. அப்பயணம் தொடர்பான பல புகைப்படங்களும் கிடைத்துள்ளன. ஆயினும், 1997-ல் வே.ஆனைமுத்து, அந்தப் பயணக் குறிப்பேட்டின் கணிசமான பகுதியை மீட்டு நூலாக்கினார். முற்றுப்பெறாததேயாயினும் பெரியாரின் சோவியத் பயணம் தொடர்பான முக்கியமான ஆவணம் இது.
சோவியத் பயணத்துக்கு முன்னால், ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’யின் முற்பகுதியை பெரியார் தமிழில் வெளியிட்டார். எஸ்.ராமநாதன், அவருடைய உறவினர் ராமு ஆகியோர் இப்பயணத்தில் பெரியாரோடு சென்றனர்.
ஏதென்ஸ் நகரில் சோவியத் அரசின் அனுமதிக்காக இரு வாரங்கள் அவர்கள் காத்திருந்தனர். 1932 பிப்ரவரி 2-ல் அனுமதி கிடைத்தது. சிட்செரின் என்ற நீராவிக் கப்பலில் சென்றனர். கடல்காய்ச்சலால் அல்லலுற்று, கருங்கடலைக் கடந்து ஓடெஸ்ஸா துறைமுகத்தை அடைந்தனர். அங்கிருந்து கீவ் நகருக்கு ரயிலில் சென்று இறுதியாக பிப்ரவரி 14-ல் மாஸ்கோவை அடைந்தனர்.
வெளிநாடுகளுடனான கலாச்சார உறவுக்கான அனைத்து ஒன்றிய சங்கத்திடம் தமது வருகையைப் பதிவுசெய்தார் பெரியார். பயணத்தின் முதல் இரு மாதங்கள் பற்றி எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
மாஸ்கோ நகரில் செஞ்சதுக்கத்தில் லெனின் நினைவிடத்துக்குச் சென்றார் பெரியார். அஜர்பைஜானின் பாகு பகுதியில் எண்ணெய் வயல்கள், அப்காஸியா பகுதியில் சுகுமி, ஜார்ஜியாவில் திபிலிசி ஆகிய இடங்களுக்கும் அவர் சென்றார். லெனின்கிராடு தவிர நிப்ரோஸ்த்ராய், ஜப்போருஷியா ஆகிய இடங்களில் இருந்த மாபெரும் புனல் மின்நிலையங்களையும் அவர் பார்வையிட்டார்.
ஏப்ரல் 19-ல் மாஸ்கோ திரும்பிய பிறகு அடுத்த 30 நாட்களில் என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்ள பெரியாரின் நாட்குறிப்பேடு துணையாகிறது. நாத்திகச் சங்கம் அவருடைய பயணத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. பெரியாரும் லீக் அமைப்பினரும் சில கடிதங்கள், ஆவணங்கள், புத்தகங்களைப் பகிர்ந்துகொண்டனர். ஜெர்மனியைச் சேர்ந்த சுதந்திரச் சிந்தனையாளர் சங்கத்தின் கடிதமும் சங்கத்தின் வெளியீடுகளும் அதில் அடங்கும்.
பெரியாரும் அவரது நண்பர்களும் எங்கு சென்றாலும் உற்சாகமாக வரவேற்கப்பட்டனர். பொருளாதாரப் பெருமந்தத்தில் மேலை நாடுகள் உழன்றுகொண்டிருந்த வேளையில், சோவியத் நாட்டின் வளர்ச்சி கண்டு அவர்கள் மலைத்தனர். மாஸ்கோ நகரில் நடந்த மக்கள் நீதிமன்ற நடவடிக்கைகளை பெரியார் பதிவுசெய்துள்ளார்.
லெஃபோர்டோவா என்ற இடத்திலிருந்த சிறையையும் பெரியார் பார்த்தார். ரஷ்யாவின் உளவு அமைப்புக்கு நெருக்கமான இந்தச் சிறையில்தான் ஸ்டாலின் சர்வாதிகாரியாக இருந்தபோது அரசுக்கு எதிரானவர்கள் என்று அடையாளம் காணப்பட்டவர்கள் வதைக்கு உள்ளாயினர். மாஸ்கோவிலிருந்த மோட்டார் வாகன நிறுவனத்துக்கும் பெரியார் சென்றார். அங்கிருந்த பிரம்மாண்டமான பொதுச் சமையலறையும் உணவுக் கூடமும் பெரியாரை மிகவும் கவர்ந்தன. சர்வதேசத் தொழிற்சங்க அலுவலகம் சென்று அங்கிருந்தவர்களுடன் அவர் கலந்துரையாடினார்.
மே தினத்தன்று மாஸ்கோ நகரில் பெரியார் இருந்தார். தொழிலாளர்களின் உற்சாகம் மிகுந்த கொண்டாட்டத்தை நேரில் கண்டு பரவசமானார். அவை மாரியம்மன் கோயில் திருவிழாக் காட்சிகளை அவருக்கு நினைவூட்டினவாம்! ஸ்டாலின், மிகைய்ல் காலினின், யெமல்யான் யரோஸ்லாவ்ஸ்கி போன்ற முக்கியத் தலைவர்கள் லெனின் நினைவிடம் அருகில் மேடையில் நின்றபடி மே தினப் பேரணியைப் பார்வையிட்டனர். ஊர்வலத்தில் வந்த மக்களைப் பார்த்துக் கையசைத்தனர். அந்த ஆண்டு துருக்கி பிரதமர் இஸ்மெட் இனோனு அரசு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
சில நாட்களுக்குப் பிறகு கிரெம்ளின் மாளிகையில், மே தின நிகழ்ச்சிக்காக வந்த வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கு வரவேற்பும் விருந்தும் அளிக்கப்பட்டன. பழைய போல்ஷ்விக்குகள் ஏற்பாடு செய்திருந்த அக்கூட்டத்துக்குப் பெரியாரும் அழைக்கப்பட்டிருந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவன உறுப்பினரான அபானி முகர்ஜியையும் மாஸ்கோவில் பெரியார் சந்தித்தார்.
1932 ஏப்ரல் மாத இறுதியில் சோவியத் பயணத்தை முடித்துக்கொள்வது பற்றி அவர் பேசலானார். அதற்கான காரணம் புலப்படவில்லை. சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளுடன் பெரியார் தொடர்பில் இருந்தாலும், அனைத்து ஏற்பாடுகளையும் நாத்திகர் சங்கமே கவனித்துக் கொண்டது.
பெர்லின் நகருக்குப் பெரியார் செல்வது மே 14-ல் உறுதியானது. பயண அனுமதி ஆவணங்கள் மே 17-ல் கிடைத்தன. பெரியார் உடனே மாஸ்கோவிலிருந்து புறப்பட்டார்.
சோவியத் பயணம் மூலம் பெரியார் பெற்றது என்ன? அவருடைய அரசியல் வாழ்க்கையில் அது என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது?
நாடு திரும்பியதும் பெரியார் விடுத்த அறிக்கை, எதிர்காலத்தில் அவருடைய சுயமரியாதை இயக்கம் செல்லும் திசைவழியைச் சுட்டியது. மகாகனம், ஸ்ரீ, திரு, திருமதி போன்ற அடைமொழிகளைக் கைவிட்டு, ‘தோழர்’ என்று ஒருவரையொருவர் விளிக்க வேண்டும் என்று அவர் கூறினார். அக்காலத்தில் தம்மை அணுகியவர்களின் குழந்தைகளுக்கு ‘ரஷ்யா’ என்றும் ‘மாஸ்கோ’ என்றும் அவர் பெயர் சூட்டினார்.
இந்தியா திரும்பிய மூன்று மாதங்களில் 40-க்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்களில் பேசிய பெரியார், ரஷ்ய ஆட்சிமீது தனக்கு ஏற்பட்ட அளவுகடந்த பற்றை வெளிப்படுத்தினார். இந்தியாவில் இப்போதிருக்கும் நிர்வாக முறையை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டு, இந்தியாவி லும் சோஷலிச பாணி அரசை அமைக்க வேண்டும் என்றார். இதைக் காவல் துறையின் உளவுப் பிரிவு அறிக்கை பதிவு செய்தது.
கம்யூனிசம் பரவிவிடுமோ என்று அஞ்சிய அரசு, அவருக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் எதிராக நடவடிக்கைகளைத் தொடங்கியது. கட்சியின் திட்டம், அதன் எதிர்காலம் குறித்து தீர்மானிக்க வேண்டிய கட்டாயம் பெரியாருக்கு ஏற்பட்டது. சுயமரியாதை இயக்கத்தின் எதிர்காலம் கருதிப் பொதுவுடமை திட்டத்தைத் திரும்பப் பெறுவதாக அவர் 1935 மார்ச்சில் அறிக்கை வெளியிட்டார்.
சோவியத் ஒன்றியத்தின் சாதனைகளின் மீதான கவர்ச்சி பெரியாரின் வாழ்நாள் முழுவதும் நீங்கவில்லை. சமூகத்தை யும் பொருளாதாரத்தையும் தன் முழுக் கட்டுப்பாட்டில் வைத்துப் பெரும் மாற்றங்களை சோவியத் அரசு முன்னெடுத்தது அவருக்குள் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. “இது புதிய உலகம்; எந்த நாட்டிலும் இப்படியொரு மாற்றம் ஏற்பட்டதே இல்லை” என்று அவர் பெருமிதம் கொண்டார். சோவியத் பாணி அரசால்தான் இந்தியாவின் வறுமையை ஒழிக்க முடியும் என்றும் அவர் நம்பினார். அவரது பயணத்துக்குப் பிறகு சோவியத் ஒன்றியம் பற்றி அம்பலமான விஷயங்களை அவர் கவனித்ததாகத் தெரியவில்லை. சோவியத் ஒன்றியம் பற்றிய லட்சிய பிம்பமே அவர் மனத்தில் ஆழப் பதிந்திருந்தது. ஸ்டாலின் காலக் கொடுமைகள் பற்றிப் பின்னாளில் வெளிப்பட்ட செய்திகளை அறிந்துகொள்ள அவர் ஆர்வம் காட்டியதாகவும் தெரியவில்லை.
1932-35-ல் சோஷலிசத்தில் தீவிர ஈடுபாடு காட்டிய பெரியார் அடுத்த 40 ஆண்டுகளில் அப்படிச் செய்யவில்லை. அவரிடமிருந்த சோஷலிச ஆதரவாளர்கள் அவரை விட்டுப் பிரிந்து கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தனர். தன்னுடைய சோவியத் பயணம் குறித்துத் தம் வாழ்நாள் முழுதும் பலமுறை நினைவுகூர்ந்து பேசிய பெரியார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளை பிராமணியக் கட்சிகள் என்று கடுமையாக விமர்சனம் செய்துவந்தார். பெரியாரின் இயக்கம் பொதுவுடமைத் தத்துவத்தோடு நீடித்த உறவைக் கொண்டிருந்திருந்தால், நவீனத் தமிழகம் எப்படி உருவாகியிருக்கும் என்ற விடை தெரியாத கேள்வி ஒன்று நெஞ்சில் எழுகிறது.
- ஆ.இரா.வேங்கடாசலபதி,
திராவிட இயக்க வரலாற்று ஆய்வாளர், ‘எழுக, நீ புலவன்!’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
சுருக்கமாகத் தமிழில்: சாரி ©‘தி இந்து’ ஆங்கிலம்.