நா
ங்குநேரி, மறைந்த வானமாமலை ஜீயரை நான் சந்திக்கும்போதெல்லாம் ராயங்கல ஸ்ரீ கிருஷ்ணராஜ நாராயணப்பெருமாள் ராமானுஜன் நலமாக இருக்கின்றாரா என்று கேட்பார். இதுதான் கி.ரா.வின் முழுப் பெயர். இளமையில் தந்தையை இழந்து இடைச்செவலில் விவசாயத்தோடு இசை ரசனையும், இலக்கிய ஆர்வமும் ஏற்பட்டு உடல்நிலை பாதிப்பால் இசைவாணராகாமல், 40 வயதுக்கு மேல் தமிழ் கூறு நல்லுலகில் படைப்பாளி ஆனார்.
வெள்ளந்தியான கிராம மனுசர்களின் பாடுகளைப் பற்றியும் விவசாயப் போராட்டங்களைப் பற்றியும் அவர் எழுதியவை நகர்ப்புறத்தில் வாழ்வோரிடத்திலும் தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறது. ரசிகமணி டி.கே.சி. யின் மரபில் வந்தவர் கி.ரா. எனினும் பொதுவுடைமை இயக்கத்தோடு இருந்த உறவுதான் அவரை எழுத்தாள ராக மாற்றியது. 1960-ல் கோவையில் கூடிய தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம், அவரை நாடோடிக் கதைகளைத் திரட்டச் சொன்னது. கதைகளைக் கேட்டு தொகுக்க ஆரம்பித்த கி.ரா., கதைசொல்லியாகவே மாறிவிட்டார். அவரது சிறுகதைகளுக்கு வாசகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து அவர் எழுதிய ‘கோபல்ல கிராமம்’ என்ற நாவல் வெளிவந்ததும், வாசகர்கள் அந்த நாவலைத் தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாட ஆரம்பித்தார்கள்.
கதைகள், நாவல், நாட்டார் கதைகளைப் போல கி.ரா. வின் கடிதங்களும்! கி.ரா. தனது நண்பர்களுக்கும் இலக்கியவாதிகளுக்கும் எழுதிய சில கடிதங்களைச் சில சிற்றிதழ்கள் பிரசுரித்திருந்தன. அவற்றைக் கவிஞர் மீராவின் அகரம் பதிப்பகம் தொகுத்து ஒரு நூலாக வெளியிட்டது. கடித இலக்கிய உலகில் ஓர் இலக்கியப் புதையல் என்று அந்நூலையும் தமிழ் வாசகர்கள் கொண்டாடினார்கள். கி.ரா.வின் கடிதங்களில் உள்ள கேலியும் கிண்டலும் கலந்த மொழிநடை வாசகர்களை அசத்தியது.
இந்தியாவிலேயே முதன்முதலாக வட்டார வழக்குச் சொல்லகராதியை 1982-ல் கி.ரா. தொகுத்தார். இந்தப் பணியில் அவருக்கு எஸ்.எஸ்.போத்தையா, பூமணி, எஸ்.மாரீஸ்வரன், ஆர்.முருகன், கே.உதயசங்கர், போ.குமாரசாமி நாயக்கர், பி.பெருமாள், அ.மாணிக்கம், அ.முத்தானந்நதம், பி.ஐயரப்பன், அ.கிருஷ்ணபிள்ளை, அ.இராமசாமி, வில்லாயுத ஆசாரி, பி.இராமசாமிப் பாண்டியன், மாடசாமி ஆகியோர் உதவியாக இருந்தனர். அந்த அகராதியையும் கவிஞர் மீரா வெளியிட்டார். 40 ஆண்டுகளுக்கு முன்னே இன்றைய அளவுக்குத் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத காலத்திலேயே கி.ரா. இந்தப் பெரும் பணியைச் செய்து முடித்திருக்கிறார். சதுரகராதியைத் தொகுத்த வீரமா முனிவரே ‘வட்டார வழக்குத் தமிழ் அகராதி’ ஒன்றையும் வெளியிட்டிருப்பது வட்டார வழக்கு அகராதிகளுக்கான அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் உணர்த்தும். ஆங்கில அகராதியைத் தொகுத்த சாமுவேல் ஜான்சனுக்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் அளித்துக் கௌரவித்தது. அவரும் கி.ரா.வைப் போல பட்டப்படிப்பு எதுவும் படித்தவரில்லை. ஆனால், வட்டார வழக்குச் சொல்லகராதியைப் பல சிரமங்களுக்கு இடையில் தயாரித்த கி.ரா.வுக்குத் தமிழகத்தின் எந்தப் பல்கலைக்கழகமும் இன்னமும் டாக்டர் பட்டம் அளிக்கவில்லை.
கி.ரா.வின் வட்டார வழக்குச் சொல்லகராதியோடு அவர் தொகுத்த கரிசல் வட்டார எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்பும் வெளியிடப்பட்டது. அந்தத் தொகுப்பில் இன்றைய விருதுநகர் மாவட்டத்தில் மேற்கே திருவில்லிபுத்தூர் வடக்கே விருதுநகர் நகரம், கிழக்கே அருப்புக்கோட்டை வரை திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கரன் கோவில் நகரத்திலிருந்து குருவிகுளம் ஒன்றியம், மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, ஒட்டப்பிடாரம், கயத்தாறு, தெற்கே தூத்துக்குடி நகரம் வரை கரிசல் வட்டாரத்தின் நிலப் பகுதியாக அமைந்த படைப்பாளிகளின் ஊர்களில் குறிப்பிட்டு நில வரைபடமும் வெளியிட்டது கி.ரா.வின் அற்புதமான பணி.
வி.ஸ.காண்டேகர், தகழி சிவசங்கரன் பிள்ளை போன்று கிராமத்தில் கயிற்றுக் கட்டிலில் இடைச்செவல் கிராமத்திலிருந்து வசதிவாய்ப்பில்லாமல் எழுதிய படைப்புகள்தான் அவரைப் புகழின் உச்சிக்கு அழைத்துச் சென்றன. கரிசல்காட்டு விவசாயி, கதைசொல்லி, ரசிகமணி போல ரசிகர் – விமர்சகர், இசையின் இலக்கணம் அறிந்தவர், வட்டாரச் சொல்லகராதியை உருவாக்கியவர், பொதுவுடைமைவாதி, விவசாயிகள் நலனுக்காகப் போராடிய போராளி, பண்பாளர், ஏடுகளில் பத்தியாளர் என பன்முகத்தன்மையைத் தன்னகத்தே கொண்டவர் அவர். 1950-ல் எழுத ஆரம்பித்த ‘கி.ரா’வின் பேனாவுக்கு எப்போதும் ஓய்வில்லை.
‘கி.ரா.வின் 60’ மணி விழாவைக் கவிஞர் மீரா மதுரை யில் கொண்டாடினார். ‘ராஜநாராயணியம்’ என்ற தலைப்பில் அவரது படைப்புகள் குறித்த விமர்சனத் தொகுப்பையும் வெளியிட்டார். ‘கி.ரா.வின் 80’ விழாவை, மறைந்த இராமமூர்த்தியும் காவ்யா சண்முகசுந்தரமும் நானும் சென்னை ஃபிலிம் சேம்பரில் நடத்தினோம். ‘கி.ரா.வின் 85’ விழாவையும் சென்னையில் நடத்தினோம். ‘கி.ரா.வின் 90’ விழாவை டெல்லி தமிழ்ச் சங்கம், தினமணி நாளிதழதோடு புதுடெல்லியில் நடத்தினோம். இன்றைக்கு கி.ரா.95-ஐ எட்டியிருக்கிறார்.
வேடிக்கையாக அவருடைய பிறந்தநாளை, ‘பொடிக்கும் தாடிக்கும் இடையே பிறந்தவர்’ என்று சொல்வதுண்டு. ஏனெனில், அண்ணா பிறந்தநாள் செப்டம்பர்-15, பெரியார் பிறந்தநாள் செப்டம்பர் 17, கி.ரா.வின் பிறந்தநாள் செப்டம்பர்-16. அவருடைய கருத்துச் சுரங்கத்திலிருந்து இன்னும் கிடைக்க வேண்டிய செல்வங்கள் நிறைய உள்ளன. அதை தொடர்ந்து அள்ளித் தருவார்!
-கே.எஸ். இராதாகிருஷ்ணன், இணையாசிரியர், கதைசொல்லி.
தொடர்புக்கு: rkkurunji@gmail.com
செப்டம்பர் 16 : கி.ராஜநாராயணன் பிறந்தநாள்