மெட்ரிக்குலேஷன் தேர்வுகள் 1978 வரை சென்னைப் பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்டன. அதன் பிறகு மெட்ரிக்குலேஷன் தேர்வைத் தமிழகக் கல்வித் துறை நடத்திவந்தது. சென்னைப் பல்கலைக்கழகம் இந்த மெட்ரிக்குலேஷன் தேர்வினை நடத்தியபோது ஆங்கிலம், தமிழ் தவிர மற்ற பாடங்களுக்குப் புத்தகங்கள் கிடையாது. ஒவ்வொரு பாடத்திற்கும் பாடத்திட்டம் உண்டு. பாடத்திட்டத்தின்படி ஆசிரியர் நடத்தும் வகுப்புகளில் குறிப்பு எடுப்பதும், ஆசிரியர் கொடுக்கும் குறிப்புகளும்தான் எங்கள் புத்தகங்களாக இருந்தன.
அப்போது தமிழ், ஆங்கிலப் பாடங்களில், மாணவர்கள் சுயமாகப் பதில் எழுத வேண்டும். ஆசிரியர் பதிலில் உள்ள எழுத்துப் பிழை, இலக்கணப் பிழை, பொருள் அடக்கம் என்று எல்லாவற்றையும் திருத்திக் கொடுப்பார். “விடைத்தாளில் நீ எழுதியதைவிட நான் எழுதியதுதான் அதிகம்” என்று ஆசிரியர்கள் விளையாட்டாகச் சொல்லி விடைத்தாளைக் கொடுப்பார்கள். ஒவ்வொரு மாணவனின் விடைத்தாளையும் திருத்தி, பாரபட்சம் இல்லாமல் மதிப்பெண் அளித்தார்கள். இந்த நோக்கத்திலிருந்து பெரும்பாலான ஆசிரியர்கள் விலகவில்லை; விலகியவர்கள் விலக்கிவைக்கப்பட்டார்கள். அன்றும் மதிப்பெண்ணுக்கு அதிக முக்கியத்துவம் இருந்தபோதிலும், அடிப்படைக் கல்வியின் நோக்கம், மொழி, கணக்கு, விஞ்ஞானச் சிந்தனை, உலக அறிவு, ஒழுக்கம் போன்றவற்றைப் பயிற்றுவிப்பது என்பதில் தெளிவாக இருந்தனர்.
படிப்படியாக ஆசிரியர்கள் இந்த நடுநிலையிலிருந்து தவறியதும், மதிப்பெண் பெறுவது மட்டுமே கல்வியின் குறிக்கோளாக வந்த பின்பு கேள்வித்தாள்களுக்கு ‘ப்ளூ பிரிண்ட்’ என்ற முறையும், விடைத்தாள் திருத்தும் பணியில் ‘ஆன்சர் கீ’ என்ற முறையும் வந்தன.
ப்ளூ பிரிண்ட் முறையைப் பயன்படுத்தி மாணவர் களிடம் மனனம் செய்வதை மட்டுமே பள்ளிகள் ஊக்குவிக்கின்றன. ‘ஆன்சர் கீ’ பயன்படுத்தி, அதில் உள்ள முற்றுப் புள்ளி, அரைப் புள்ளி இல்லை என்று மதிப்பெண் குறைக்க நினைத்தால் மாணவர்களின் கற்றல் முறையில் எந்த மாற்றமும் வராது. ‘ஆன்சர் கீ’ கொண்டு திருத்துவது என்பது ஆசிரியரின் நேர்மை, கல்வித் திறன், மாணவர்களின் கல்வித் திறனை சீர்தூக்கிப் பார்க்கும் திறமை ஆகியற்றின் மீது உள்ள சந்தேகத்தையே வெளிப்படுத்துகிறது.
‘ப்ளூ பிரிண்ட்’ முறையில் கேள்வித்தாள், விடைத்தாள் திருத்துவதில் உள்ள ‘ஆன்சர் கீ’ என்ற இரண்டும், மாணவர்களின் கல்வி கற்கும் முறையையே மாற்றியுள்ளன.
சில ஆண்டுகளுக்கு முன் மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவன் கூறியது, “முழு மதிப்பெண் பெற புத்தகத்தில் உள்ளது போல எழுது. உன் சொந்த மொழித்திறனை இதில் காட்டாதே என்று ஆசிரியர்கள் எனக்கு அறிவுரை வழங்கினர்”.
இவ்வாறு முழு மதிப்பெண் பெற்ற மாணவர்கள் உயர்கல்வியில் பின்தங்கியதை அண்ணா பல்கலைக்கழகம் பலமுறை சுட்டிக்காட்டியும் நாம் திருந்தவில்லை. இப்போது பிளஸ் 1-ல் பொதுத் தேர்வு என்று தமிழக அரசு கூறியுள்ளது வரவேற்கத்தக்கது. தேர்வு முறையிலும், விடைத்தாள் திருத்தும் முறையிலும் மாற்றம் வேண்டும். அப்போதுதான் கற்றலின் முழுமையை உணர முடியும்.
-இராம. சீனுவாசன்,
சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர்
தொடர்புக்கு: seenu242@gmail.com