‘அந்தப் பேனா!’ - தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் வாழ்வில் திருப்புமுனையாக, அவரைப் பெரியாரிடம் கொண்டுசேர்க்க ‘அடி’த்தளமிட்ட, அவர் எழுதிய கட்டுரையின் தலைப்பு இது.
‘சாந்தா அல்லது பழனியப்பன்’ என்கிற தன்னுடைய முதல் நாடகத்தை 1945இல் புதுச்சேரியில் அரங்கேற்றியபோது, அங்கிருந்து வெளியான ‘தொழிலாளர் மித்திரன்’ இதழில், காந்தி அடிகளின் ஆசிரமத்தில் தொலைந்துபோன பேனாவைப்பற்றி, ‘அந்தப் பேனா!’ கட்டுரையை கருணாநிதி எழுதியிருந்தார். அக்கட்டுரையின் விளைவால் கடுமையாகத் தாக்கப்பட்டுக் காயமுற்ற கருணாநிதியை அரவணைத்துக்கொண்ட பெரியார், அவரை ஈரோட்டுக்கு அழைத்துச் சென்று, ‘குடி அரசு’ இதழில் அமர்த்தினார்.
ஓராண்டுக் காலம் ‘குடி அரசு’வில் எழுதிவந்த கருணாநிதியை, ‘ராஜகுமாரி’ படத்துக்குக் கதை, வசனம் எழுத வைத்தவர் இயக்குநர் ஏ.எஸ்.ஏ.சாமி. தொடர்ந்து ‘அபிமன்யூ’, ‘மருதநாட்டு இளவரசி’, ‘மந்திரி குமாரி’, ‘பராசக்தி’, ‘மனோகரா’ என கருணாநிதியின் பேனா குடித்த மை, சுமார் 25 படங்களுக்குக் கதை, வசனத்தை எழுதித் தள்ளியது.
அண்ணாவின் தம்பியாக, அடுத்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக அசைக்க முடியாத சக்தியாகத் தமிழ்நாட்டில் நிலவப்போகும் கருணாநிதியின் ஆற்றல், அவரது பேனாவில் அடங்கியிருந்தது. இன்று, கருணாநிதியின் நினைவாகக் கடலுக்குள் நிறுவ முன்மொழியப்பட்டிருக்கும் பேனா நினைவுச்சின்னம், பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது.
கடலுக்குள் பேனா: “தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சாதனைகளை, சிந்தனைகளைப் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில், காமராஜர் சாலையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி மதிப்பீட்டில் நினைவிடம் அமைக்கப்படும்” எனத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2021இல் சட்டமன்றத்தில் அறிவித்தார். இதைத் தொடர்ந்து, நினைவிடம் அமைந்துள்ள இடத்துக்குப் பின்பக்கம், கடற்கரையிலிருந்து சுமார் 360 மீ. உட்புறமாக, கடலுக்குள் 134 அடி உயரத்துக்குப் பேனா வடிவ நினைவுச்சின்னம் அமைப்பதற்குத் தமிழ்நாடு அரசுப் பொதுப் பணித் துறையின் சார்பில் முன்மொழியப்பட்டது.
இதற்கு, தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையமும் ஒப்புதல் வழங்கியது. ரூ.81 கோடி செலவில் அமையவுள்ள இந்த நினைவுச்சின்னத்தை, கருணாநிதியின் நினைவிடத்திலிருந்து சென்றடையும் வகையில் 290 மீ. தூரத்துக்குக் கடற்கரையிலும் 360 மீ. தூரத்துக்குக் கடலிலும் என 650 மீ. தொலைவுக்குப் பின்னல் நடைபாலமும் (lattice bridge) அமைக்கப்படவுள்ளதாகத் திட்டத்தின் செயல் குறிப்புரை தெரிவிக்கிறது.
வரலாற்றை எழுதிய பேனா: டி.எம்.கருணாநிதி, அதாவது - திருக்குவளை முத்துவேலர் கருணாநிதி என்கிற பெயரில் பன்னிரண்டு வயதில், கருணாநிதி எழுதிய நாவலான ‘செல்வச்சந்திரா’வில் தொடங்கி, இன்றும் வெளிவரும் ‘முரசொலி’யாகப் பரிணமித்த கையெழுத்து ஏடான ‘மாணவ நேச’னில் உருப்பெற்ற அவரது எழுத்து, அண்ணாவின் ‘திராவிட நாடு,’ பெரியாரின் ‘குடி அரசு’ ஆகியவற்றில் உரம்பெற்றது. அரசியல் களத்தில் நின்று போராடத் தனக்குத் தேவையான ஒரு ‘படைக்கல’னாக கருணாநிதி தன் எழுத்தைக் குறிப்பிடுகிறார்; அந்த வகையில், நவீன தமிழ்நாட்டைக் கட்டமைத்த கருவிகளில் ஒன்றாக அவரதுபேனாவைக் கருத இடமிருக்கிறது.
‘‘சர்க்கஸ்காரன் உயரத்தில் இருந்தாலும் அவனது சிந்தனை பூமியிலேயே இருக்கும்என்பதைப் போல, தம்பி கருணாநிதி சினிமாவில் இருந்தாலும் சிந்தனை எப்போதும் அரசியலில்தான்” என ‘அன்பகம்’ திறப்பு விழாவில் அண்ணா பேசினார். சினிமாவில்இருந்தாலும் அரசியலில் இருந்தாலும் கருணாநிதியின் சிந்தனை முதன்மையாக எழுத்தில்தான் இருந்திருக்கிறது என்பது வாழ்நாளெல்லாம் அவர் எழுதியவற்றை ஒட்டுமொத்தமாகத் திரட்டிப் பார்க்கும்போது தெரிகிறது: சமூக நாவல்கள் 10, சரித்திர நாவல்கள் 6, எழுதி-நடத்திய நாடகங்கள் 21, கவிதை நூல்கள் 8, உடன்பிறப்புக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பு 12 (1990களிலேயே நின்றுவிட்டது), தன்வரலாற்று நூலான ‘நெஞ்சுக்கு நீதி’ தொகுதிகள் 6 (2006க்குப் பிறகு எழுதவில்லை), சிறுகதைகள் 37, பயண நூல் 1, உரை நூல்கள் 6 என விரிவும் ஆழமும் கொண்ட கருணாநிதியின் நூற்றொகை உள்ளபடியே திகைப்பை ஏற்படுத்துகிறது.
நினைவுச்சின்னம் தவறா?: சரியாக 50 ஆண்டுகளுக்கு முன், சென்னை அண்ணா சாலையில் அமைந்த மேம்பாலத்துக்கு அண்ணாவின் பெயரைச் சூட்டி, திறந்துவைத்துப் பேசிய அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி, “அண்ணா அவர்களுடைய பெயரை இந்தப் பாலத்திற்கு ஏன் வைத்தோம் என்பதற்கான காரணத்தைச் சொல்லத் தேவையில்லை. ஏனென்றால், அண்ணா அவர்களுடைய பெயரை வைத்த பிறகு, அதை ஏன் வைக்க வேண்டும் என்று கேள்வி கேட்கிற யாரும் தமிழகத்தில் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை” என்றார்.
அதேபோல் 2009இல்,அண்ணாவின் நூற்றாண்டை முன்னிட்டு ரூ.172 கோடி மதிப்பீட்டில் உருவான அண்ணா நூற்றாண்டு நூலகத்தைத் திறந்துவைத்துப் பேசிய கருணாநிதி, ‘வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம் புத்தகச் சாலைக்குத் தரப்பட வேண்டும்’ என்கிற அண்ணாவின் வானொலி உரையை (1948) நினைவுகூர்ந்தார். நூலக வாயிலில் நிறுவப்பட்ட புத்தகம் வாசிக்கும் அண்ணாவின் சிலையில் இந்த வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது. தற்போது, அண்ணா நூற்றாண்டு நூலகத்தைப் போலவே, கருணாநிதியின் நினைவாக ரூ.114 கோடி மதிப்பீட்டில் ‘கலைஞர் நூலகம்’ மதுரையில் உருவாகிக்கொண்டிருப்பது பாராட்டுக்குஉரிய முன்னெடுப்பு.
இந்தப் பின்னணியில், நவீனத் தமிழ்நாட்டின் தளகர்த்தர்களில் அண்ணாவுக்கு அடுத்துவந்த கருணாநிதியின் நினைவாக, ஒரு பேனா நினைவுச்சின்னமாக அமைவது எல்லா வகையிலும் பொருத்தப்பாடுடையது என்பதில் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது. ஆனால், மேம்பாலம், நூலகம் எனத் தமிழ்நாட்டில் அண்ணாவின் பெயரால் அமைந்த பல்வேறு நினைவுச்சின்னங்கள் மக்களின் அன்றாடப் பயன்பாட்டில் கலந்துவிட்டதைப் போல், கடலுக்குள் அமையவிருக்கும் பேனா நினைவுச்சின்னத்தால் ‘ஆய பயன் என்கொல்’ என்கிற பொதுச்சமூகத்தின் கேள்வி, எளிதில் கடந்துவிட முடியாதது.
எனினும் சுற்றுலா, நேரடி-மறைமுக-சேவை வேலைவாய்ப்பு, சர்வதேச அடையாளம் போன்றவற்றை இத்திட்டம் கொண்டுவரும் நன்மைகளாக, அதன் செயல் குறிப்புரை பட்டியலிடுகிறது. ஆனால், நினைவுச்சின்னம் அமையும் கடற்பகுதியின் சுற்றுச்சூழல் காலப்போக்கில் திரிந்துவிடும் அபாயத்தையும் தாண்டி கரைக்கடல், நடுக்கடல் மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு இடைஞ்சல்களை ஏற்படுத்தும் அபாயத்தையும் இந்தப் பேனா (நினைவுச்சின்னம்) கொண்டிருக்கிறது என்பது பெரும் கவலைக்குரியது.
கடல் அரிப்பும் மீனவர்களும்: தேசியக் கடற்கரை மதிப்பீட்டு அமைப்பின் அங்கமான கடலோர ஆராய்ச்சிக்கான தேசிய மையத்தின் (NCCR) அறிக்கை, தமிழ்நாட்டுக் கடற்கரைகளில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பு குறித்த அபாயகரமான புள்ளிவிவரங்களை வழங்குகிறது. 991.47 கிமீ நீளம் உள்ள தமிழ்நாட்டுக் கடற்கரையில், 422.94 கிமீ தொடர்ச்சியாகக் கடல் அரிப்பை எதிர்கொண்டுள்ளது. மேற்கு வங்கம் (60.5%), புதுச்சேரி (56.2%), கேரளம் (46.4%) ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து மிக மோசமான கடலரிப்புக்கு உள்ளாகியிருக்கும் நான்காவது மாநிலமாகத் தமிழ்நாடு (42.7%) உள்ளது.
1990 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில், ஒட்டுமொத்தமாக 1,802 ஹெக்டேர் நிலத்தைக் கடலரிப்பால் தமிழ்நாடு இழந்துள்ளது. இந்தத் தகவல்கள் அடங்கிய தமிழ்நாட்டுக்கான கடலோர மாறுதல்கள் வரைபடத்தை வெளியிட்டவர், கருணாநிதியின் பேனா நினைவுச்சின்னத்தை முன்மொழிந்துள்ள தமிழ்நாடு பொதுப்பணித் துறையின் அமைச்சர் எ.வ.வேலு தான்.
சுற்றுச்சூழல் பிரச்சினைகள், காலநிலை மாறுபாடு, அரசின்கொள்கைகள் போன்றவற்றால் மீனவர்கள் எதிர்கொண்டுள்ளநெருக்கடிகள் தனிக் கட்டுரையாக எழுதப்பட வேண்டியது.கூவம் கழிமுகத்திலிருந்து அடையாறு கழிமுகம் வரையிலான மெரினாவின் போக்கில் 13 மீனவக் கிராமங்கள் உள்ளன. ஆனால், பேனா நினைவுச்சின்னத்துக்கான திட்ட உருவாக்கத்தில், மீனவர்களிடம் கலந்தாலோசிக்கப்படவில்லை என்றறிய முடிகிறது. இந்தப் பின்னணியில்தான், ஜனவரி31 அன்று இத்திட்டம் குறித்த மக்கள் கருத்துக்கேட்புக்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அழைப்பு விடுத்திருக்கிறது.
காலநிலை மாற்றத்தின் பின்னணியில், மாறிவரும் சுற்றுச்சூழலின் தன்மைக்கு ஏற்ப புதிய கட்டுமானங்களையும் வளர்ச்சிப் பணிகளையும் திட்டமிடும் கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது. ஆனால் வளர்ச்சி, மேம்பாடு, அழகுபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்னிட்டு, சுற்றுச்சூழல் விதிகள் தளர்த்தப்பட்டு, விலக்களிக்கப்பட்டு வருவதும் தொடர்கிறது. தலைவர்களை, அவர்களின் சாதனைகளைப் போற்றும், நினைவுகூரும் நினைவுச்சின்னங்கள் அவசியம்தான். ஆனால், அவற்றுக்குக் கொடுக்கப்போகும் விலை என்ன என்பதுதான் கேள்வி.
காலத்துக்கேற்பத் தம்மைத் தகவமைத்துக்கொள்ளும் ஆற்றல் பெற்ற கருணாநிதி, ஒருவேளை இன்றிருந்திருந்தால், சுற்றுச்சூழல் பிரச்சினைகளின் பின்னணியில் தனக்கான நினைவுச்சின்னம் எவ்வளவுதான் புதுமையாக இருந்தாலும் இப்படி ஒரு இடத்தில் வேண்டாம் என உடன்பிறப்புகளுக்குக் கடிதமெழுதப் பேனாவை எடுத்திருப்பார் அல்லவா!