தமிழ்நாடு அரசு முன்னெடுத்து நடத்திய சர்வதேசப் புத்தகக் கண்காட்சியில் 30 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். 365 புத்தகங்களுக்குப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இவை குறுகிய காலத்தில் இமாலய சாதனை எனலாம்.
இப்புத்தகக் கண்காட்சி தமிழ்ப் பதிப்பாளர்கள் பன்னாட்டுச் சந்தைக்குச் செல்வதற்கு வழிவகுத்துள்ளது. வெளிநாட்டவரோடு சந்திப்புக்கு முன்பதிவுபெறுவது, குறித்த நேரத்தில் என்னவெல்லாம் பேசுவது, விற்பது வாங்குவது குறித்த வியாபார உரையாடல்கள் என பல்வேறு அனுபவங்களை ஒட்டுமொத்தமாகப் பெறக்கூடிய வாய்ப்பினை நல்கியது. இத்தகைய அனுபவங்களை ஒருவர் பெற வேண்டுமெனில் குறைந்தது 3 லட்சம் ரூபாய் செலவழித்து வெளிநாட்டில் நடக்கும் பன்னாட்டுப் புத்தகக் காட்சிகளில் கலந்துகொள்ள வேண்டும்.
தமிழ்ப் பதிப்புலகத்துக்குப் படிப்பினைகள்
இப்புத்தகக் கண்காட்சியில் தமிழ்ப் பதிப்பாளர்கள் பேரார்வத்துடன் கலந்துகொண்டது வரவேற்புக்குரியது. இது ஒரு நல்ல தொடக்கம். கலந்து கொண்டவர்கள் அனைவரும் இலக்கை எட்டி விடுவார்கள் என்று சொல்லிவிட முடியாது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து பல கட்டங்கள் உள்ளன. பெறப்பட்ட புத்தகங்கள் பதிப்பகங்களின் ஆசிரியர் குழுவில் பதிப்புக்கு உகந்ததா என ஒப்புதல் பெறப்பட வேண்டும். விற்பனைப் பிரிவு, அப்புத்தகத்திற்குச் சந்தை இருக்குமா என்பது குறித்து உறுதி அளிக்க வேண்டும். இது தவிர முக்கியமாக மொழிபெயர்ப்புக்கான உதவித்தொகை அரசிடமிருந்து கிடைக்க வேண்டும். இப்படியாகப் பல படிக்கட்டுகள் ஏற வேண்டும். இதில் வெற்றி, தோல்விகளைத் தாண்டி வழிமுறைகளை எவ்வளவு சிறப்பாகக் கற்றுக் கொள்கிறோம் என்பது தான் முக்கியம்.
இன்னொரு முக்கிய தகவல், பிற மொழிகளிலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பு செய்வதற்குப் பல நாடுகளில் மொழிபெயர்ப்பு உதவித்தொகை அளிக்கிறார்கள். கூடுதலாக, எழுத்தாளர்களையும் மொழிபெயர்ப்பாளர்களையும் தங்கள் நாட்டிற்கு விருந்தாளியாக அழைத்துப் பரந்துபட்ட இலக்கிய அறிவு பெற வழி வகுத்திருக்கிறார்கள். இது போன்ற ஏராளமான தகவல்களை ஒட்டுமொத்தமாகத் தமிழ் பதிப்புலகம் இந்த மூன்று நாட்களில் அறிந்து கொண்டது.
புத்தகக் கண்காட்சிக்கான திட்டமிடல்கள்
கலந்துகொண்ட வெளிநாட்டினர் இனிய, புதிய அனுபவம் என்றார்கள். இவ்விழா தொடர்ந்து நடத்தப்பட வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினர். அடுத்த ஆண்டுக்கு இப்பொழுதிலிருந்தே திட்டமிடுதல் முக்கியம். இதில் உடனடியாகச் செய்ய வேண்டிய சில காரியங்கள் உள்ளன.
சர்வதேசப் புத்தகக் கண்காட்சிக்கு வெளிநாட்டுப் பதிப்பாளர்களும் முகவர்களும் பல மாதங்களுக்கு முன்பே பயணத்தைத் திட்டமிடுகிறார்கள். அந்த வகையில் இப்பொழுதிலிருந்து அவர்களோடு தொடர்பு கொள்ள வேண்டும். ‘எழுத்தாளர்கள் குடில்’ (Writers’ Residency) என்பது உலக அளவில் முக்கியமான ஒரு வழிமுறை. இதன் நோக்கம் படைப்பாளிக்கு உகந்த புதிய இலக்கியச் சூழலை உருவாக்குவது. உலகின் தலைசிறந்த படைப்பாளிகளைத் தமிழ்நாட்டிற்கு அழைத்து இயற்கைச் சூழல் நிறைந்த பகுதியில், எல்லா வசதிகளோடு சில வாரங்கள் தங்கவைத்துப் படைப்புகளை உருவாக்க வழி வகுக்க வேண்டும். அப்படி உருவாகும் புத்தகங்களில், இன்ன எழுத்தாளர் குடிலில் தங்கி எழுதியது என்று குறிப்பிடுவார்கள். இத்தகைய செய்திகள் உலகமெங்கும் உள்ள இலக்கிய வட்டாரங்களுக்குப் பரவும். சில ஆண்டுகள் கழித்துக் கிடைக்கும் நற்பெயரும் புகழும் ஒரே ஆண்டில் தமிழ்ச் சூழலுக்கு வந்துவிடும். அதுபோல நம்முடைய எழுத்தாளர்களும் பிற நாடுகளில் நடக்கும் எழுத்தாளர் குடில்களில் பங்குகொள்ள அந்நாடுகளோடு ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும்.
மேலும், சர்வதேசப் புத்தகக் கண்காட்சி தடையின்றிச் செம்மையாக நடைபெறுவதற்குத் தன்னாட்சிக் குழுவை அமைத்து, அரசாங்கத்தோடு இணைந்து ஒருங்கிணைக்க வழிவகுக்கலாம். பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் சென்னைப் புத்தகக் காட்சியிலும் சர்வதேசப் புத்தகக் கண்காட்சி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பக்கம், குளுகுளு அரங்கில் பளிச்சிடும் சமதள தரை, கழிப்பிடம் போன்றவை உலகத் தரத்திலான சர்வதேசப் புத்தகக் கண்காட்சி. இன்னொரு பக்கம், சென்னை புத்தகக் காட்சி வழக்கமான பாணியில். இரண்டையும் அருகருகே காணும் போது ஏக்கமும் பெருமூச்சும் எழுவது இயற்கை.
பபாசி அரங்கு ஒதுக்குவதில் வெளிப்படைத்தன்மை
எதிர்காலத்தில் சென்னை புத்தகக் காட்சியின் அரங்க அமைப்புகள் குளிர்சாதன வசதிகளோடு உலகத் தரத்தில் நிர்மாணிக்கப்பட வேண்டியது அவசியம். கடந்த மூன்று ஆண்டுகளாக, புத்தகக் காட்சி நடத்துவதற்கு அரசு நிதியதவி அளிக்கிறது. சென்னைப் புத்தகக் காட்சியை நடத்தும் பபாசி அமைப்பு தொடர்ந்து எதிர்கொள்ளும் சவால்களில் ஒன்று, புதிதாகப் புத்தகக் கடைகள் அமைக்க விழைபவர்களுக்கு இடம் வழங்குவது. 70களில் 25-30 கடைகள் என்று தொடங்கி 90களில் 150-200 என்று அதிகரித்து 2010களில் 500-600 என்று விரிவடைந்து, இன்று மிகப்பெரிய விளையாட்டு மைதானத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் என வளர்ந்துள்ளது பெருமையான ஒன்றானாலும் இடம் போதாமைக்கு நிரந்தரத் தீர்வு காண்பது அவசியமாகிறது.
உறுப்பினர் அல்லாதவர்களுக்குக் கடை வழங்குவதில் வெளிப்படைத்தன்மை இல்லை என்பது பபாசி மீது வைக்கப்படும் இன்னொரு குற்றச்சாட்டு. கடைகள் ஒதுக்கீடு செய்வது நிர்வாகக் குழுவின் பொறுப்பு. எந்தவிதமான சந்தேகத்திற்கு இடமின்றி நடுநிலையோடு நடந்துகொள்ள வேண்டும் என்பது எழுதப்படாத விதி. இருந்தபோதிலும் அவ்வப்போது பபாசியின் செயற்பாடுகளைக் குறித்து, கடை கிடைக்கப்பெறாதவர்களால் பொதுவெளியில் கேள்வி எழுப்பப்படுகிறது. இத்தகைய குற்றச்சாட்டுகள் எழாத வகையில் ஒதுக்கீடு எங்ஙனம் நடைபெறுகிறது என்பதில் கூடுதல் வெளிப்படைத்தன்மை அவசியமாகிறது.
பதிப்புத் தொழில் இல்லாதவர்கள் பெயரில் அரங்கு
புதிதாக இடம் கேட்பவர்களுக்கு விண்ணப்பப் படிவங்களே வழங்கப்படுவதில்லை என்பது கூடுதலாக வைக்கப்படும் இன்னொரு புகார். இதற்கு முன்வைக்கப்படும் காரணம், அவ்வாறு வழங்கப்பட்டால், இடம் கொடுக்க வேண்டும் என்பது கட்டாயமாகிவிடும் என்பதே. இக்குறையைக் களைவதற்கு எல்லாருக்கும் விண்ணப்பப் படிவம் அளித்துவிட்டு, அதில் விதிகளுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்களுக்குத் தனியாக ஒரு குலுக்கல் நடத்தலாம். இதில் வெளிப்படைத்தன்மை மட்டுமல்ல ஜனநாயகமும் உறுதிப்படும். அதேபோல, பதிப்புத் தொழிலை விட்டுச் சென்றவர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாகத் தொடராமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். எப்பொழுதோ தொழிலை விட்டுச் சென்றவர்கள் பெயரில் புத்தகக் காட்சியில் கடைகளைப் பார்க்கும்போது அதிர்ச்சி ஏற்படாமல் இல்லை.
ஒவ்வோர் ஆண்டும் புதியவர்கள் பலர் பதிப்புத் தொழிலுக்கு வருகிறார்கள். இவர்களை எளிதாக உறுப்பினர் ஆக்குவதற்கு வழிமுறைகளை வகுக்க வேண்டும். புதியவர்கள் உள்ளே வரும்போது, புத்தகக் காட்சி நடத்துவதற்குத் தற்போது உள்ள இடம் வசதியாக இருக்காது. இதற்கு ஒரே வழி சென்னையின் மையப் பகுதியில் மெட்ரோ ரயிலுக்கு அருகில், மிக விரிந்த பரப்பளவு உடைய தளங்களைக் கொண்ட, பல அடுக்கு காட்சிக் கூடங்களை அரசே அமைத்து ஜனவரி மாதத்தில் புத்தகக் காட்சியும் மற்ற சமயங்களில் வேறு பொருட்காட்சிகளையும் நடத்திக் கொள்ளலாம்.
புத்தக வாசிப்பு ஒரு சமூகத்திற்கு மிக அவசியம். அது ஒன்றே மேம்பட்ட குடிமக்களை உருவாக்க வழிவகுக்கும். இதை உணர்ந்த தமிழ்நாடு அரசு இலக்கியத் திருவிழா, புத்தகக் காட்சி, சங்கமம் எனப் பல்வேறு நிகழ்வுகளை நடத்திவருவது போற்றுதலுக்கு உரியது.