நவம்பர் மாதத் தொடக்கத்தில், நேபாளத்துக்கு வெற்றிகரமான மூன்று நாள் பயணம் மேற்கொண்டார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி. கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்னர், 1998-ல் நேபாளத்துக்கு கே.ஆர்.நாராயணன் மேற்கொண்ட பயணம்தான், இந்தியக் குடியரசுத் தலைவர் அந்நாட்டுக்குச் சென்ற கடைசிப் பயணம். நீண்ட காலமாக நேபாளத்துக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் செல்லவில்லை. அரசியலுக்கு பிரணாப் முகர்ஜி புதியவரல்ல. இந்தியாவுக்கு வருகைதரும் நேபாளத் தலைவர்கள் தேடிச் சென்று சந்திக்கும் தலைவராகக் கடந்த பல ஆண்டுகளாக இருக்கிறார் பிரணாப் முகர்ஜி. அந்த வகையில், அவரது நேபாளப் பயணம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது.
அவரது இந்தப் பயணம் வெற்றிகரமாக அமைவதை உறுதிசெய்ய, அனைத்துத் தடைகளையும் நேபாள அதிகாரிகள் நீக்கினர். பிரணாப் முகர்ஜியின் பயணத்தில் ஜனக்பூர், போக்கரா நகரங்களும் அடக்கம். தலைநகர் காட்மாண்டிலும், ஜனக்பூரிலும் அரசு முறையிலான வரவேற்பு அளிக்கப்பட்டது. போக்கராவில், இந்திய ராணுவத்தில் பணிபுரிந்த கூர்க்கா இன மக்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் பிரணாப் முகர்ஜி உரையாற்றினார். கடந்த செப்டம்பரில் புதிய அரசியல் சட்டத்தை நேபாள அரசு ஏற்றுக்கொண்ட பிறகு, இந்திய - நேபாள உறவில் ஏற்பட்ட விரிசலைச் சரிசெய்யும் வகையில், இந்தப் பொது நிகழ்ச்சிகளை ராஜதந்திர முறையில் அவர் பயன்படுத்திக்கொண்டார்.
மாதேசிகளின் அதிருப்தி
ஆரம்பத்திலிருந்தே, நேபாளத்தின் புதிய அரசியல் சட்டத்தால் மாதேசிகள் அதிருப்தி அடைந்திருந்தார்கள் என்பது தெளிவு. ஆனால், ஏழு ஆண்டுகளாக நடந்துவந்த அரசியல் சட்ட உருவாக்கம், முடிவுக்கு வர வேண்டும் என்று அந்தச் சமயத்தில் நேபாள காங்கிரஸ் (என்.சி.), சிபிஎன் (யூ.எம்.எல்.), மாவோயிஸ்ட்டுகள் ஆகியோர் அவசரப்பட்டனர். இது தொடர்பாக இந்தியா எதிர்வினை செய்யத் தொடங்கிய காலகட்டத்தில், ஏற்கெனவே புதிய அரசியல் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுவிட்டது. அதேசமயம், தெராய் பகுதியில் பதற்றமும் போராட்டமும் உருவாகின. போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அப்போதைய பிரதமர் கே.பி.எஸ்.ஒலி தலைமையிலான அரசு போதுமான அக்கறை செலுத்தவில்லை. மாறாக, மாதேசிகளின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அரசுக்கு நெருக்கடி தரும் வகையில், பொருளாதார முட்டுக்கட்டைகளை இந்தியா உருவாக்குவதாக நேபாளம் குற்றம்சாட்டியது.
ஆவேசமான குற்றச்சாட்டுகளுக்குப் பின்னர், இரு தரப்பும் சற்றே பின்வாங்கின. ஆனால், பாதிப்பைத் தவிர்க்க முடியவில்லை. இந்தியாவுக்கு எதிரான மனப்பான்மை பரப்பப்பட்டது. கே.பி.எஸ்.ஒலியின் கூட்டணி அரசு உடைந்ததைத் தொடர்ந்து, கடந்த ஜூலை மாதம் அவர் ராஜினாமா செய்தார். அதற்கும் இந்தியாதான் காரணம் என்றும் சொன்னார்.
இதையடுத்து, நேபாள காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடத்திய மாவோயிஸ்ட் கட்சித் தலைவர் பிரசண்டா, ஒன்பது மாதங்களுக்குத் தான் பிரதமராக இருப்பதாகவும், அதன் பின்னர் நேபாள காங்கிரஸ் தலைவர் ஷேர் பகதூர் தேவ்பா, 2018 ஜனவரியில் தேர்தல் நடக்கும் வரை பிரதமராகப் பதவி வகிக்க மாவோயிஸ்ட்டுகள் ஆதரவு தருவார்கள் என்றும் உடன்பாடு செய்துகொண்டார். தனது பங்குக்கு இந்தியாவுடனான உறவைச் சரிசெய்யும் முயற்சியின் ஒரு பகுதியாக பிரசண்டா கடந்த செப்டம்பரில் இந்தியாவுக்கு வெற்றிகரமான அரசு முறைப் பயணம் மேற்கொண்டார். நேபாள அதிபர் வித்யா தேவி பண்டாரி விரைவில் இந்தியா வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடரும் வெறுப்பு
இந்த முயற்சிகள் அனைத்தும் இரு நாடுகளுக்கு இடையிலான உறவை சகஜ நிலைக்குக் கொண்டுவர வேண்டும். இந்தியாவுக்கு எதிராக உருவாக்கப்பட்ட மனநிலை இன்று வரை தொடரும் அளவுக்கு ஒலியின் ஆட்சிக்காலத்தில் சூழல் உருவாக்கப்பட்டது. #பிரணாப்தா சே ஸாரி (பிரணாப் அண்ணா மன்னிப்புக் கேளுங்கள்) எனும் ‘ஹேஷ்டேக்’சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆனது. பல பிரச்சினைகளுக்கு நடுவில், சாலைகள் நெரிசலின்றி இருக்கவும், தர்மசங்கடம் ஏற்படுத்தும் வகையிலான போராட்டங்களைத் தவிர்க்கவும் நவம்பர் 2-ஐப் பொது விடுமுறையாக அறிவித்தது நேபாள அரசு.
உதவிக் கரம்
பிரணாப் முகர்ஜியின் பயணத்தின்போது கிட்டத்தட்ட நேபாளத்தின் ஒவ்வொரு தலைவரும் அவரைச் சந்தித்தனர். அவரது செய்தி உறுதியானது, தெளிவானது: 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஜனநாயக அரசியலில் இணைந்துகொள்ள மாவோயிஸ்ட்டுகள் முடிவெடுத்த பின்னர் தொடங்கிய அரசியல் மாற்றத்தை நேபாளம் நிறைவுசெய்ய வேண்டும். இரண்டாவதாக, பல கட்சி ஜனநாயகத்தின் பலன்களை ஒன்று திரட்ட, புதிய அரசியல் சட்டத்தை வெற்றிகரமாக்க அனைத்துத் தரப்பினரும் ஒன்று திரட்டப்பட வேண்டும். மேலும், இந்திய - நேபாள மக்களுக்கு இடையிலான வரலாற்றுபூர்வமான, நாகரிக அடிப்படையிலான தொடர்புகளைச் சுட்டிக்காட்டிப் பேசிய அவர், இரு நாடுகளின் நலன், பாதுகாப்பு விஷயத்தில் இரு நாடுகளுக்கும் முக்கியப் பங்கு இருப்பதையும் வலியுறுத்தினார்.
ஜனக்பூரில் ஆன்மிகம் தொடர்பாகப் பேசிய போது ராமர், சீதையைப் பற்றிப் பேசினார். போக்க ராவில் முன்னாள் ராணுவ வீரர்கள் மத்தியில் அவர் பேசியது, இந்திய ராணுவத்தில் தற்போது பணிபுரியும் 32,000 கூர்க்கா வீரர்கள், ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் 1,26,000 பேரின் வீரத்துக்கான பாராட்டாக அமைந்தது. இந்தியாவில் நேபாளி களுக்கு எளிதில் வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் 1950-ல் இந்தியா - நேபாளத்துக்கு இடையில் போடப்பட்ட அமைதி ஒப்பந்தத்தின் சிறப்பம்சங்களையும் குறிப்பிட்டுப் பேசினார்.
காட்மாண்டு அருகே உள்ள பசுபதிநாத் கோயில் அருகில் பாக்மதி ஆற்றின் கரைகளைச் செப்பனிடுவது, ஜனக்பூரில் ஜானகி கோயிலை ஒட்டி இரண்டு தர்மசாலைகள் கட்டுவது போன்ற நேபாளிகளின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்றும் அறிவிப்புகளைத் தாண்டி வேறு பெரிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஐஐடி நுழைவுத் தேர்வு எழுத நேபாள மாணவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், ரூர்க்கி ஐஐடியில் நீர் மேலாண்மை, நீர் மின்சக்தி தொடர்பான பட்ட மேற்படிப்பில் நேபாள மாணவர்களுக்குக் கூடுதல் கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தது பலத்த வரவேற்பைப் பெற்றது.
பிரசண்டா முன்னுள்ள சவால்கள்
பிரசண்டாவுக்கு நிறையப் பணிகள் காத்திருக்கின்றன. அவர் பதவி வகிக்கப்போகும் ஒன்பது மாதங்களில் மூன்று மாதங்கள் முடிவுற்றுவிட்டன. ஆனால், மாதேசிக் குழுக்களுடனான பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை. இதில் முன்னேற்றம் காணாமல், தனது ஆட்சிக் காலத்தில் பிரசண்டாவால் உள்ளாட்சித் தேர்தல்களைச் சந்திப்பது கடினம். தெராய் பகுதி மக்களின் நாடாளுமன்ற இடங்களின் எண்ணிக்கை தொடர்பான பிரச்சினை, அரசியல் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் மூலம் கடந்த ஜனவரியில் தீர்க்கப்பட்டது. எனினும், மாதேசிகள் அதை இன்னும் ஏற்கவில்லை. மாகாணங்களைப் பிரிப்பது, வெளிநாட்டில் பிறந்த நேபாளிகளுக்கு அரசியல் சட்ட உயர் பதவிகளில் பணியமர்த்துவதில் கட்டுப்பாடு, இந்தி உள்ளிட்ட மொழிகளின் நிலை, நேபாள தேசிய சபையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட பல பிரச்சினைகள் இன்னமும் நிலுவையில் உள்ளன.
மிகச் சிக்கலான இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அரசியல் ஒற்றுமை தேவை. ஆனால், அப்படி ஏதும் நேபாளத்தில் இல்லை. நேபாள காங்கிரஸும் மாவோயிஸ்ட்டுகளும் தங்களுக்கு இடையிலான ஒப்பந்தத்தையே இன்னும் இறுதிசெய்யவில்லை. அதேபோல், மாதேசிக் குழுக்களும் பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைக்கும் நிலையில் இல்லை. விளைவாக, இந்தப் பேச்சுவார்த்தை இலக்கில்லாமலேயே சென்றுகொண்டிருக்கிறது. இவற்றில், மாகாணங்களின் பிரிவினைதான் இருப்பதிலேயே மிகச் சிக்கலான பிரச்சினை. எனினும், சரியான திசையில் சென்றால் இதற்கும் உரிய தீர்வு காண முடியும்.
அரசியல் சட்டத் திருத்தத்துக்குத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறுவது அடுத்த பிரச்சினை. இதற்கு, சி.பி.என்.(யூ.எம்.எல்.) கட்சியின் பங்களிப்பும் தேவை. ஆனால், கட்சியின் பிற தலைவர்கள் சமரசத்துக்குத் தயாராக இருந்தாலும், கே.பி.எஸ். ஒலியிடமிருந்து சாதகமான எந்த சமிக்ஞையும் வரவில்லை.
செப்டம்பரில் பிரசண்டா மேற்கொண்ட இந்தியப் பயணம், அதைத் தொடர்ந்து கோவாவில் நடந்த பிரிக்ஸ்-பிம்ஸ்டெக் மாநாடுகளில் கலந்துகொள்ள அவர் வருகை தந்தது ஆகியவற்றுக்குப் பின்னர், பிரணாப் முகர்ஜியின் வெற்றிகரமான நேபாளப் பயணம் இந்திய - நேபாள உறவு மேம்பட உதவியிருக்கிறது. திட்டமிட்ட நடவடிக்கைகளுக்கு மிகவும் அவசியமான அரசியல் பார்வையை பிரசண்டாவுக்கு இது வழங்கியிருக்கிறது. இனி, மிச்சமிருக்கும் தனது ஆட்சிக்காலத்தில் தனது பேச்சுவார்த்தை திறமையைப் பயன்படுத்தி, நிலுவையில் இருக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது பிரசண்டாவின் பொறுப்பு!
© ‘தி இந்து’ ஆங்கிலம் | தமிழில்: வெ.சந்திரமோகன்