ஜெயலலிதா என்ற அரசியல் ஆளுமையைத் தவிர்த்துவிட்டுத் தமிழக அரசியல் வரலாற்றுப் பக்கங்களை எழுதிவிட முடியாது. அத்தகைய ஆளுமையை உருவாக்கியதில் எம்ஜிஆரின் பங்கு மிக முக்கியமானது. ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் எம்ஜிஆரின் கதை நாயகியாக நடித்தார் ஜெயலலிதா. அன்று தொடங்கி 28 படங்களுக்கு எம்ஜிஆரின் இணையாக நடித்திருக்கிறார் ஜெயலலிதா. பல நாயகிகளுடன் நடித்திருந்தாலும், ஜெயலலிதா மீது எம்ஜிஆருக்குத் தனிப் பாசம் உண்டு. அவருடைய ஒவ்வொரு நடவடிக்கையிலும் அக்கறை செலுத்தினார். கவனம் பாய்ச்சினார். அதை ஜெயலலிதா அனுமதிக்கவே செய்தார்.
ஜெயலலிதாவுக்கே உரித்தான வசீகரத் தோற்றம், சுறுசுறுப்பு, நடிப்புத்திறன், நாட்டியம் ஆகியவற்றோடு எம்ஜிஆரின் கதை நாயகி என்பதும் சேர்ந்துகொள்ள, மக்கள் மனங்களில் வெகுவேகமாக ஊடுருவத் தொடங்கினார் ஜெயலலிதா. உண்மையில், எம்ஜிஆர் மட்டு மின்றி, அன்றைய முன்னணி நாயகர்கள் அனைவருடனும் இணையாக நடித்திருக்கிறார். இவ்வளவு ஏன், உண்மையில் ‘பில்லா’படத்தில் ரஜினியின் நாயகியாக நடிக்க வேண்டியவர் ஜெயலலிதா. ஆனால், அந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டதை அவரே ஒரு கடித்தத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
திரைத் துறையிலிருந்து ஒதுங்கி, எழுத்து, நாட்டியம், நாடகம் என்றிருந்த ஜெயலலிதாவை உலகத் தமிழ் மாநாடு எம்ஜிஆரின் பக்கம் அழைத்துவந்தது. ‘காவிரி தந்த கலைச்செல்வி’ நாட்டிய நாடகத்தை நடத்தினார். அப்போது எம்ஜிஆரின் கனவுத் திட்டமான சத்துணவுத் திட்டம் அறிமுகமாகியிருந்த புதிது. அதை மக்கள் மத்தியில் கொண்டுசெல்ல ஒரு வசீகரமிக்க முகத்தைத் தேடினார் எம்ஜிஆர். அதற்கு ஜெயலலிதா கச்சிதமாகப் பொருந்தினார். அவரை சத்துணவுத் திட்ட உயர்மட்டக் குழு உறுப்பினராக்கினார் எம்ஜிஆர். அதோடு, அதிமுகவின் அடிப்படை உறுப்பினராகவும் சேர்த்துக்கொண்டார்.
ஜெயலலிதாவின் எதிரி
திருச்செந்தூர் இடைத் தேர்தலில் ஜெயல லிதா செலுத்திய உழைப்பு எம்ஜிஆரை உற்சாகப்படுத்தியது. அதிமுகவின் கொள்கைப் பரப்புச் செயலாளர் என்ற முக்கியத் துவம் வாய்ந்த பொறுப்பைக் கொடுத்தார். அப்போது ஜெயலலிதாவுக்குத் தரப்படும் முக்கியத்துவத்தைத் தீவிரமாக எதிர்த்தவர் ஆர்.எம்.வீரப்பன். அவரோடு சேர்ந்து பலரும். அது எம்ஜிஆருக்கும் நன்றாகத் தெரியும்.
கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவியைப் போயும்போயும் நடிகைக்குக் கொடுப்பதா என்ற கேலி எழுந்தபோது, “அதிமுகவின் கொள்கை அண்ணாயிஸம். அதை உருவாக்கியவர் ஜெயலலிதா அல்ல. அந்தக் கொள்கையை மக்களிடம் கொண்டுசேர்க்கும் முகம்தான் ஜெயலலிதா” என்று விளக்கம் வந்தது. தந்தவர் எம்ஜிஆர் அல்ல, ஜெயலலிதாவின் பரம வைரி ஆர்.எம்.வீரப்பன். உபயம்: எம்ஜிஆர்.
கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவி யோடு அதிமுகவின் மாநிலங்களவை உறுப் பினராகவும் ஜெயலலிதாவை உயர்த்தினார் எம்ஜிஆர். மாநிலங்களவையில் அண்ணா அமர்ந்த இருக்கையை அவர் விரும்பியபோது, அதைச் சாத்தியப்படுத்தியது எம்ஜிஆரின் செல்வாக்கு. ஆங்கிலம் உள்ளிட்ட பன்மொழிப் புலமையை வெளிப்படுத்தினார். அது இந்திரா காந்தி போன்ற அகில இந்தியத் தலைவர்களின் அறிமுகத்துக்கும் நெருக்கத்துக்கும் வழியமைத்துக் கொடுத்தது.
அதிருப்தியை உருவாக்கி நடவடிக்கை
ஒரு கொள்கைப் பரப்புச் செயலாளராக ஜெயலலிதா எடுத்த சில நடவடிக்கைகள் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் மத்தியில் அதிருப்தியை உருவாக்கியது. எதிரிகள் அதிகமானார்கள். அது எம்ஜிஆர் உடல்நிலை பாதிக்கப்பட்டு, அமெரிக்காவில் சிகிச்சை பெறச் சென்றபோது கடும் பாதிப்பைக் கொடுத்தது. பதவியிலிருந்தே நீக்கப்பட்டார் ஜெயலலிதா. தேர்தல் பிரச்சாரம் செய்யத் தடை வந்தது. ஜெயலலிதாவுக்குப் பதில் பாக்யராஜ் பிரச்சாரத்தில் இறங்கினார்.
எதிர்ப்புகள் சூழ்ந்தபோதும் தளர்ந்துபோகாமல், எம்ஜிஆர் போட்டியிட்ட ஆண்டிபட்டியில் தடையை மீறிப் பிரச்சாரம் செய்யத் தயாரானார். அவரது பேச்சுக்கு ஆதரவு திரண்டது. ‘ஜெயலலிதா மீண்டும் அதிரடிப் பிரவேசம்’ என்று எழுதியது ஓர் ஆங்கிலப் பத்திரிகை. எம்ஜிஆர் பிரச்சாரம் செய்யாத அந்தத் தேர்தலில் அதிமுக பெற்ற வெற்றிக்கு ஜெயலலிதாவின் பிரச்சாரம் முக்கியக் காரணம் என்றன பத்திரிகைகள்.
அநேகமாக, எம்ஜிஆர் மீண்டும் பதவி யேற்றதும் அமைச்சராவார் ஜெயயலலிதா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், கொள்கைப் பரப்புச் செயலாளராகவே அமர்த்தப்பட்டார். ஆனால், கூடுதல் அங்கீகாரத்துடன். அதிமுகவின் முக்கியக் கூட்டங்களை கொள்கைப் பரப்புச் செயலாளர் ஏற்பாடு செய்வார். ‘அண்ணா’ நாளிதழில் வெளியான அந்த அறிவிப்பு எம்ஜிஆரின் நம்பிக்கையை ஜெயலலிதா தக்கவைத்திருக்கிறார் என்பதற் கான சாட்சியம். இடையிடையே சின்னதும் பெரியதுமாக உரசல்களும் விரிசல்களும் இருந்தாலும், ஜெயலலிதாவை ஒருபோதும் ஒட்டுமொத்தமாக உதாசீனம் செய்ய எம்ஜிஆர் விரும்பியதில்லை.
எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு, அதிமுக இரண்டாக உடைந்தது. பின்னர் நடந்த தேர்தலில் அதிமுக (ஜெ), அதிமுக (ஜா) என்ற இரு பிரிவுகள் களம் கண்டபோது, 27 இடங்களை வென்றது ஜெயலலிதா பிரிவு அதிமுக. அதன் மூலம், எம்ஜிஆரின் அரசியல் வாரிசு ஜெயலலிதாதான் என்பது உறுதியானது. அது பிரிந்துகிடந்த அதிமுகவை இணைத்துவைத்தது. முடக்கப்பட்ட இரட்டை இலைச் சின்னம் திரும்பக் கிடைத்தது. கூடவே, கட்சியின் தலைமை அலுவலகமும்.
எம்ஜிஆர், இரட்டை இலை என்ற இரண்டடுக்கு அடித்தளத்தை அடிப்படையாகக் கொண்டு எழுந்த ஜெயலலிதா, ஒருகட்டத்தில் எம்ஜிஆர் நிகழ்த்திய சாதனைகளை எல்லாம் தாண்டிச் சென்றார். ஓரிரு செய்திகளைச் சொன்னால் உண்மை புரியும்.
எம்ஜிஆரின் அரசியல் வாரிசு
எம்ஜிஆர் ஆட்சியில் ஏறியது முதல் மறைந்தது வரை சட்டமன்றத் தேர்தலில் தோல்வி என்ற ஒன்றையே பார்க்காதவர். ஆனால், ஜெயலலிதா தலைமையிலான அதிமுக 1996 படுமோசமான தோல்வியையும் சந்தித்துள்ளது. ஐந்தே ஆண்டுகளில் பிரம்மாண்ட வெற்றியையும் பெற்றுள்ளது. இரண்டு மக்களவைத் தேர்தல்கள், ஒரு சட்டமன்றத் தேர்தல் என்று தொடர் தோல்விகளைச் சந்தித்தாலும், அதற்கடுத்த தேர்தலில் அசாத்திய வெற்றியைப் பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.
எம்ஜிஆர் கட்சியையும் ஆட்சியையும் நிர்வாகம் செய்தது மொத்தம் 15 ஆண்டுகள் மட்டுமே. ஆனால், ஜெயலலிதாவின் முழுமை யான ஆளுகையில் கால் நூற்றாண்டுகளைக் கடந்திருக்கிறது அதிமுக. அனைத்துத் தேர்தல்களையும் கூட்டணிக் கட்சிகளின் உதவியுடனேயே எதிர்கொண்டவர் எம்ஜிஆர். ஆனால் 2014 மக்களவைத் தேர்தலைத் தனித்தே சந்தித்து பெருவெற்றி பெற்றார் ஜெயலலிதா.
எம்ஜிஆர் மூன்று முறை முதல்வராகி யிருக்கிறார். ஆனால், வழக்குகள் காரணமாக நடந்த இரண்டு பதவியேற்புகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், மொத்தம் நான்கு முறை முதல்வராகியிருக்கிறார் ஜெயலலிதா. அந்த வகையில், எம்ஜிஆர் உருவாக்கிய ஆளுமையான ஜெயலலிதா, அவரைக் காட்டிலும் அதிகமான பங்களிப்புகளைச் செய்திருக்கிறார். அத்தனைக்கும் அடித்தளம் எம்ஜிஆர் என்பதை ஜெயலலிதா எப்போதுமே மறுத்ததில்லை!
- ஆர். முத்துக்குமார், எழுத்தாளர்.
‘இந்தியத் தேர்தல் வரலாறு’ முதலான நூல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு: writermuthukumar@gmail.com