ஜெயலலிதாவின் மரணத்துக்கான இரங்கல் செய்திகளில் கவனத்தைக் கவர்ந்தது அந்த வரி: 'சந்தியாவின் மகளாகப் பிறந்தவர் இந்தியாவின் மகளாக இறந்தார்'. தொலைக்காட்சியின் அடியில் ஓடிய இந்த வரிகளைப் படித்ததும் ஒரு பெயர் மனதில் பளிச்சிட்டது. அடுத்த சில நொடிகளில் எதிர்பார்த்தபடியே அந்தக் கவிஞர் பெயர் திரையில் தோன்றியது.
32 ஆண்டுகளுக்கு முன்பு இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டபோது தமிழ் வார இதழ் ஒன்று அட்டையிலேயே அவருக்கான அஞ்சலிக் 'கவிதை'யை வெளியிட்டி ருந்தது. அந்தக் 'கவிதை' இப்படி முடிந்தது: 'பிரியதர்சினி உன்னையும் பிரிய நேர்ந்ததே'. இந்திரா காந்தியின் முழுப் பெயர் இந்திரா பிரியதர்சனி என்பது இங்கு நினைவுகூரத் தக்கது.
மரபழித்த யதார்த்தம்
ஓசைநயம் என்பது மொழியின் அழகான அம்சங்களில் ஒன்று. எந்த விஷயத்தையும் சற்றே ஓசை நயத்துடன் சொல்லும்போது கேட்க நன்றாக இருப்பதுடன் மனதிலும் பதிகிறது. மரபுக் கவிதை வடிவங்கள் ஓசை நயமும் தாளக் கட்டும் கொண்டு அமைந்திருப்பவை. எளிதில் வசீகரிக்கவும் நினைவில் வைத்துக்கொள்ளவும் இந்த வடிவம் மிகவும் உதவிகரமானது.
அச்சுத் தொழில்நுட்பம் வந்த பிறகு நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய தேவை குறைந்தது. ஓசை நயம் போன்றவை கவிதையிலிருந்து விடைபெறத் தொடங்கின. நவீனத்துவத்தின் கருத்தியல் பாதிப்பும் இத்துடன் சேர்ந்துகொள்ள, அலங்காரமும் செய்யுள் தன்மையும் துறந்து உரைநடைத் தன்மையை கவிதை பெறத் தொடங்கியது. யதார்த்த வாழ்வுக்கு நெருக்கமாகக் கவிதை வந்ததும் மொழியலங்காரங்கள் கவிதையை விட்டு விலகியதும் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் நிகழ்ந்தது தற்செயலானதல்ல. இவை இரண்டுக்கும் இடையில் கருத்தியல் சார்ந்த தொடர்பு உள்ளது.
மரபுக் கவிதை வழக்கொழிந்துபோனதற்கு அச்சுத் தொழில்நுட்பம் மட்டும் காரணமல்ல. நவீனத்துவக் கருத்தியலின் முக்கியக் கூறான அலங்காரம் தவிர்த்த யதார்த்தப் பார்வை முனைப்புப் பெற்றதுதான் முக்கியமான காரணம். உலகம் முழுவதிலும் ஏற்பட்ட இந்த மாற்றத்தைத் தமிழில் பாரதியார் தொடங்கி வைத்தார். இந்தப் போக்கு சிற்றிதழ் சார்ந்த படைப்பாளிகளால் முன்னெடுக்கப்பட்டது. பின், அதன் எளிமை காரணமாகச் சமூகத்தின் சகல தரப்புகளையும் தழுவிப் பரவியது. மரபுக் கவிதையைக் கைவிட்டவர்கள் அனைவரும் நவீனத்துவப் பார்வையால் தாக்கம் பெற்றவர்கள் என்று சொல்ல முடியாவிட்டாலும், அடுக்கு மொழி போன்ற அலங்காரங்கள் காலத்துக்கு ஒவ்வாதவை என்னும் பார்வை பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
என்றாலும் திராவிட இயக்கத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களும் பேச்சாளர்களும் மொழியின் அலங்காரத்தைக் காப்பாற்றிவருகிறார்கள். நவீனத்துவப் பார்வையின் அடிப்படையிலான பகுத்தறிவுவாதத்தை ஆவேசமாக முன்னிறுத்திய அதே பிரிவினர், வழக்கொழிந்து போன பழமையின் அடையாளமான மொழியலங்காரத்தைத் தூக்கிப் பிடித்தது கருத்தியல்ரீதியான முரண். நவீனத்துவப் பார்வையை முழுமையாக உள்வாங்காத போக்கையே இது காட்டுகிறது. நவீனத்துவம் சகல நிலைகளிலும் அறிவியல் பார்வையையும் சமத்துவத்தையும் முன்னிறுத்துவது. அதிகார அடுக்குகளைக் காப்பாற்றும் நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகளையும் மன்னர் காலத்து பாவனைகளையும் முற்றாகத் துறக்காமல் முன்வைக்கப்படும் பகுத்தறிவுவாதம் மேலோட்டமான கோஷமாகவே தங்கிவிடும்.
கவிதைக்கான மொழியின் மீது படிந்து விட்ட பல்வேறு சுமைகளிலிருந்து அதை விடுவித்து, செயற்கையான அலங்காரம் தவிர்த்த கவித்துவத்தைக் கண்டடைவது புதுக்கவிதையின் தோற்றத்துக்கு முக்கியக் காரணம். இந்தப் பிரக்ஞையற்ற மனம் புதுக்கவிதையை அணுகும்போது யாப்பிலிருந்து விடுபட்டாலும் அலங்காரங் களைத் துறப்பதில்லை. மரபுக் கவிதையி லிருந்து புதுக்கவிதைக்கு மாறிய பலரது ஆக்கங்களில் இதைக் காணலாம். இந்த அலங்காரங்கள் மொழியின் முன்னோக்கிய பயணத்தையும் யதார்த்தத்துடன் அதற் கிருக்கும் உறவையும் பாதிக்கின்றன.
வலி குறைக்கும் சமத்காரம்
“மூன்று படி லட்சியம், ஒரு படி நிச்சயம்” என்னும் வாசகம் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற இயலாமையை மொழி அலங்காரத்தின் மூலமாக மூடி மறைப்பதைக் காண முடியும். “நேரு மகளே வருக நிலையான ஆட்சியைத் தருக” என்னும் வாசகம் அரசியல் சிக்கல்களை ஒற்றைப்படைத்தன்மை கொண்ட கோஷமாக மாற்றுவதைக் காணலாம். “துயரங்கள் விடிவின்றி நீளும் / கறை எல்லோர் கைகளிலும் / என் கதவைத் தட்டிக் கேட்காதே எதுவும் / இன்று மனிதனாக இருப்பதே குற்றம்” (சுகுமாரனின் கவிதை வரிகள்) என்று சொல்லும்போது யதார்த்த வாழ்வின் வலி கூர்மையாக நம்மைத் தாக்குகிறது. எதுகை மோனை, அடுக்குமொழி ஆகியவற்றுடன் ஒரு கொடுமையை உணர்த்த விழையும்போது அந்த வலி ஏற்படுவதில்லை. சமத்காரமே அதில் மேலோங்கியிருக்கிறது. யதார்த்தம் அல்ல.
திராவிட இயக்கப் பேச்சாளர்களும் எழுத் தாளர்களும் பெருமளவில் கட்டிக் காப்பாற்றி வரும் இந்தப் போக்குக்கு மாறான திசையில் செயல்படுபவர்கள் நவீன எழுத்தாளர்கள் மட்டுமல்ல. பெரியார், காமராஜர், ப.ஜீவானந்தம் போன்றவர்களும் இந்த மரபைச் சேர்ந்தவர்கள் தான். அவர்கள் மொழி செயற்கையான அலங்காரங்கள் அற்றது. காரணம், அவர்களு டைய பார்வை நவீனத்துவம் சார்ந்த யதார்த்தப் பார்வை. இவர்களுடைய மொழியில் யதார்த்தம் வலுவோடு வெளிப்படும். ஒருபோதும் கேளிக்கையாக மாறி நீர்த்துப்போவதில்லை.
அலங்காரமும் நவீனத்துவமும்
இந்தப் பார்வையின் இன்மையில் தன் உயிரைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது மிகையலங்காரம். அனைத்தையும் கேளிக்கைப் பொருளாக மாற்றவல்லது இது. வாழ்க்கையை அதன் சாரம் சார்ந்து அல்லாமல் அலங்காரம் சார்ந்து வெளிப்படுத்தும் போக்கு இது. துக்கம் தொண்டையை அடைக்கும்போதும் அழுகை, தொழுகை, சாவு, மாவு, தாகம், தேகம், புழுக்கம், பழக்கம் என்று அலங்காரம் தேடும் மனம், ரத்தமும் சதையுமான பிரச்சினையுடன் எத்தகைய உறவைக் கொண்டிருக்கும் என்னும் கேள்வி எழுகிறது.
அலங்காரத்தை முற்றாகத் தவிர்ப்பதுதான் நவீனத்துவம் என்றோ, அதுவே காலத்துக் கேற்ற மொழி என்றோ சொல்லிவிட முடியாது தான். திரைப்பாடல்களில், அவை பாடல்கள் என்பதாலேயே ஓசை நயம், தாளக் கட்டு ஆகியவை தேவைப்படுகின்றன. கவன ஈர்ப்புக்காகவும் ரசனைக்காகவும் அலங் காரங்கள் பயன்பட முடியும். “பொழுதுகாட்டும் கருவி பழுது நீக்கித் தரப்படும்” அறிவிப்பு கடிகாரங்களைப் பழுதுபார்க்கும் கடையின் மீதான ஈர்ப்பைக் கூட்டவேசெய்கிறது. “ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்னா மாதிரி” போன்ற வசனங்கள் ஒரு காட்சியின் கேளிக்கை மதிப்பைக் கூட்டுகின்றன. ஆனால், தீவிரமான தளங்களில் இதன் இடம் என்ன? பெறுமானம் என்ன? பலன் என்ன?
மொழியின் மீது போர்த்தப்படும் பொன்னாடைகூடச் சில சமயம் அதைத் துருப்பிடிக்க வைத்துவிடும். காலத்தின் களிம்பு பல வகைகளில் புழக்கத்தில் இருக்கிறது. யதார்த்தத்தையும் மெய்யான உணர்ச்சிகளின் தீவிரத்தையும் நீர்த்துப்போகச் செய்யும் நயங்களும் அவற்றில் அடக்கம்.
- அரவிந்தன், தொடர்புக்கு: aravindan.di@thehindutamil.co.in