பாகிஸ்தானின் வரலாறு தெரிந்தவர்களுக்கு அதன் 70 ஆண்டு காலச் சுதந்திர வரலாற்றின் பெரும் பகுதியில், அந்த நாட்டின் ராணுவம்தான் ஆதிக்கம் செலுத்தியிருக்கிறது என்பது தெரியும். பாகிஸ்தானின் வரலாறும் அதன் கொள்கைகளும் அதிகமாக அதன் ராணுவத்தைப் பற்றியதாகவே இருக்கின்றன. பாகிஸ்தான் சமூகத்தைப் பற்றிய வரலாறு குறைவே.
சர்வாதிகார ராணுவத் தளபதிகள் மூலம் நேரடியாக 32 ஆண்டு காலம் ஆட்சியை ராணுவம் நடத்தியபோதும் சரி, நேரடி ஆட்சி இல்லாத காலத்தில் மறைமுகமாக ஆட்சியில் அது தலையீடு செய்கிறபோதும் சரி, பாகிஸ்தானில் நடந்துள்ள பெரும்பாலான மாற்றம், பாகிஸ்தான் ராணுவத்துக்கான பல்வேறுபட்ட நலன்களுக்கும் அதன் நிறுவனங்களுக்கும் என்பதை நோக்கித்தான் நடைபெற்றுள்ளது. தேசியப் பாதுகாப்பு அரசு என்ற வகையில், ஒரு தோற்றுப்போன அரசாகவோ, இஸ்லாமிய மதப் போரான ஜிஹாத்தின் பல்வேறு வடிவங்களை உருவாக்குகிற இடமாகவோ பாகிஸ்தான் இருக்கிறது. இப்படி இருப்பதற்கான பெரும் பங்கும் பாகிஸ்தான் ராணுவத்துக்குத்தான்.
மாற்றத்தின் தருணங்கள்
பொதுமக்களும் அரசியல்வாதிகளும் அப்பாவிகள் என்று இதற்கு அர்த்தம் அல்ல. இதற்கான பொறுப்பு அவர்களுக்கு இல்லை என்றும் அர்த்தம் அல்ல. விமர்சிக்கப்பட வேண்டியவர்கள்தான் அவர்களும். ஆனாலும், பல்வேறு வகைகளில் மிக அதிகமான ராணுவத் தலையீடு பாகிஸ்தானில் இருக்கிறது. ஒரு அரசு என்ற அடிப்படையில் பாகிஸ்தான் தோற்றுப்போயிருக்கிறது அல்லது தோற்றுக் கொண்டிருக்கிறது. அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் ஒரு போக்கிரி நாடாக அது இருக்கிறது. உலகம் முழுவதும் தேடப்பட்ட ஒரு மனிதனை நன்கு பாதுகாக்கப்பட்ட முறையில் ஐந்தாண்டுகள் அது வைத்திருந்தது. இத்தகைய விவகாரங்களுக்கான பொறுப்பு என்ற வகையில் பொதுமக்கள், அரசியல்வாதிகளை நாம் மிகவும் குறைவாகவே குற்றம்சாட்ட முடியும். பாகிஸ்தானின் அணுஆயுதக் கொள்கையாகட்டும், ஆப்கானிஸ்தான், இந்தியா, தொடர்பான கொள்கைகளாகட்டும், அமைதி, வணிகம், தொடர்பானவை எல்லாம்கூட மக்களால் தேர்வுசெய்யப்பட்டுள்ள அரசியல்நிர்வாகம் முடிவு செய்வதில்லை. ராணுவம்தான் அவற்றை முடிவுசெய்கிறது.
மாற்றத்துக்கான தருணங்களும் இருக்கத்தான் செய்தன. 1971 போருக்குப் பிறகு நொறுங்கிப்போன, தோற்றுப்போன பாகிஸ்தானை புட்டோ கையில் எடுத்தார். சமீபத்தில் 2007- 2008களில் பொதுமக்கள், அரசியல்வாதிகளின் ஒரு குழு உருவானது. அதன் செயல்பாடுகளால் ஒரு அராஜக ராணுவச் சர்வாதிகாரி பதவியிலிருந்து அகற்றப்பட்டார். அவர் தற்போது தலைமறைவாக, வெளிநாட்டில் சொகுசாக வாழ்கிறார் என்றபோதும், தேசத் துரோகக் குற்றச்சாட்டின்படி அவரை விசாரிக்கும் நிலை ஏற்படவே செய்தது. வேறு எப்போதும் இருந்ததைவிட 2007- 2008 காலகட்டம் பாகிஸ்தானியர்களுக்கு ஜனநாயகத்தை நோக்கிய பலமான, நிரந்தரமான போக்கு நிலவிய காலமாகத் தோன்றியது. அதன் எதிர்பார்ப்புகளில் சில தள்ளிப்போய்விட்டன. ஆனாலும், பல எதிர்பார்ப்புகள் நீடிக்கின்றன. அவை பக்குவமடையும் அறிகுறிகளும் தெரிகின்றன.
ஒரு ஷெரீஃபின் வெளியேற்றம்
2013 முதலாக, பாகிஸ்தானில் இரண்டு ஷெரீப்களைப் பற்றியே அரசியல் விவாதம் இருந்தது. அவர்களில் ஒருவர் 1970-க்குப் பிறகு சுதந்திரமாகவும் நேர்மையாகவும், ராணுவத் தலையீடும் தாக்கமும் இல்லாமல் நடந்த தேர்தலில் எதிர்பாராதவிதமாகப் பெரும் பான்மையைப் பெற்று ஜனநாயகரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர். இன்னொருவர் 2013 தேர்தல்களுக்குப் பிறகு பிரதமரால் நியமிக்கப்பட்ட ராணுவத் தளபதி. தனது பணிகள் பற்றிய அறிக்கையைப் பிரதமருக்கு அளிக்க வேண்டியதாகத்தான் ராணுவத் தளபதி பதவி இருக்கிறது. ஆனாலும், பாகிஸ்தானின் மிகவும் முக்கியமான, அதிகாரமுள்ள பதவியாக அது இருக்கிறது. இதன் விளைவாகக் கடந்த மூன்று ஆண்டுகளாக, பாகிஸ்தானில் நடந்துவந்துள்ள அரசியல் விவாதம் இரண்டு ஷெரீஃப்களில் எவர் அதிக சக்தி படைத்தவர், யார் யாரைப் பதவியிலிருந்து தூக்கப்போகிறார்கள் என்றதாகவே இருந்தது.
ராணுவத் தளபதி ஷெரீஃப் நவம்பர் 29-ல் ஓய்வு பெற்றுவிட்டார். இந்த வருடத்தின் ஜனவரி மாதத்தில் தளபதி ஷெரீஃப் தனது பதவிக்காலத்தை நீட்டிக்குமாறு கோர மாட்டேன் என்று அறிவித்தார். கடந்த 20 ஆண்டுகளில் பதவிக்காலம் முடிந்ததும் பதவியை விட்டுப்போகிற முதல் ராணுவத் தளபதி இவர்தான். ஆனால், இவரைப் பற்றி ஏராளமான ஊகங்கள் பரவியிருந்தன. தளபதி மொத்த பாகிஸ்தான் நிர்வாகத்தையும் எடுத்துக்கொள்ளப்போகிறார் என்றன. ஊடகங்கள் அவருக்குப் பெரியளவு முக்கியத்துவம் கொடுத்துவந்ததால் மக்களிடையே புகழ்பெற்றவராகவும் நேசத்துக் குரியவராகவும் அதிகாரம்மிக்கவராகவும் ராணுவத் தளபதி இருந்தார். இஸ்லாமிய, ஜிஹாத் போராளிகளுக்கு எதிராக அவர் போர் நடத்தினார். பல்வேறு வகையான தலிபான் பாணி வகை சிறு குழுக்களை அவர் ஒழித்துக்கட்டினார். அதேசமயம், தடை செய்யப்பட்ட பல பயங்கரவாதக் குழுக்கள் பாகிஸ்தானில் தண்டிக்கப்படாமலும் வெளிப் படையாகவும் செயல்படத்தான் செய்தன. ஜிஹாதி குழுக்களோடு இணைந்து செயல் பட்ட ஹபிஸ் சயீத், மசூத் அசார் போன்றோர் சுதந்திரமாகச் செயல்படுகின்றனர். இந்தியா - பாகிஸ்தான் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை மோசமான சூழலுக்குப் போக ஒருவகையில் ராணுவமும் முக்கியமான காரணம்.
இன்னொரு ஷெரீஃப் என்ன செய்யப்போகிறார்?
ஆனால், அத்தகைய தோல்விகள் மறக்கப்பட்டன. காரணம், தளபதி ஷெரீஃப் ஒதுங்கிக்கொண்டது. மக்களால் தேர்வுசெய்யப்பட்ட அரசைக் கவிழ்க்கும் வாய்ப்புகள் தளபதிக்குக் கடந்த மூன்று ஆண்டுகளில் இரண்டு முறையாவது வரவே செய்தன. 2014-ல் இம்ரான்கான் இஸ்லாமாபாதில் நடத்திய போராட்டத்தின் போதும், 2016-லும் அத்தகைய வாய்ப்புகள் வந்துள்ளன. நாட்டைக் கைப்பற்றுமாறு தளபதியைக் கேட்டுக்கொள்ளும் பதாகை களுடனான போராட்டங்களும்கூட பாகிஸ்தானில் நடந்தன. இத்தகைய நிகழ்வுகள் பாகிஸ்தானின் ஜனநாயக முன்னேற்றத்தைத் தலைகீழாக மாற்றக்கூடியவை. அதனால், ஜனநாயகத்துக்காகப் போராடக்கூடியவர்கள் நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றாமல் இருந்ததற்காகத் தளபதிக்கு நன்றி சொல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். தாராளவாதிகள்கூட பதவிக்காலத்தில் ஷெரீஃப் செய்த தவறுகளை வசதியாக மறந்து அவரது மூன்றாண்டு பதவிக்காலத்தை அதிகப்படியாகப் புகழ்ந்திருந்தார்கள். எப்படியோ தளபதி ஷெரீஃப் பணி ஓய்வு பெற்றுவிட்டார்.
இன்னொரு ஷெரீஃப்.. ஜனநாயகரீதியாகத் தேர்வுசெய்யப்பட்ட ஷெரீஃப் தனது அதிகாரத்தை வலுப்படுத்திக்கொள்வதற்கான வாய்ப்புகளை இது திறக்கலாம். இது 2007 முதலாக மெதுவாகப் பலமடைந்துவரும் ஜனநாயகப் போக்கைப் பலப்படுத்தலாம். மக்களின் தீர்ப்பைப் பெற்று ஆட்சிக்கு வந்த இரண்டாவது அரசாங்கம் இது. 2013 பொதுத்தேர்தலுக்குப் பிறகு, அது மீண்டும் தனது அதிகாரத்தைக் கைமாற்றுவதற்கு இன்னும் 17 மாதங்கள் இருக்கின்றன. வீணடிக்கக்கூடாத காலம் இது.
- எஸ்.அக்பர் ஜாய்தி,கராச்சியைச் சேர்ந்தவர். அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகத்திலும் போதிக்கிறார். | © ‘தி இந்து’ ஆங்கிலம் | தமிழில்: த.நீதிராஜன்