அது ஒரு ஜனவரி காலை நேரம். அகலப்படுத்தப்படாத அந்தக் கிராமத்து தார் சாலையில் வண்டி ஆடி அசைந்து அரிட்டாப்பட்டியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. இருபுறமும் புதர்க்காடுகள், எதிரே மலைத்தொடர். மரங்கள் இல்லாத அந்த மலையில், பாறைகள் மட்டுமே நிறைந்திருந்தன. என்னை அங்கு அழைத்தது ஒரு பறவை: லகுடு என்றழைக்கப்படும் Laggar Falcon (Falco jugger).
அரிட்டாப்பட்டியை அடைந்தவுடன் அந்தப் பகுதியைச் சேர்ந்த பறவை ஆர்வலர் ரவிச்சந்திரனும் வயதான பூசாரி வீரணனும் என்னுடன் இணைந்துகொண்டனர். சூரச் செடியிலிருந்த சூரப்பழங்களைக் காட்டி, சூரமாரிகள் (Rosy Starling) இவற்றை விரும்பிச் சாப்பிடும் என அந்த இடத்தைப் பற்றியும் அங்குள்ள பறவைகள் பற்றியும் அவர்கள் விவரித்துக்கொண்டே வந்தனர்.
ஆச்சரியத்துடன் இவற்றையெல்லாம் கேட்டுத் தலையசைத்துக்கொண்டே, நான் தேடிவந்த பறவையை எங்கே பார்க்கலாம்? எந்த நேரத்தில் எளிதாகப் பார்க்கலாம்? உங்கள் ஊரில் அதன் பெயர் என்ன? என அந்தப் பெரியவரிடம் கேட்டேன். சிலர் ‘லகுடு’ என்று சொன்னாலும், அதை நாங்கள் ‘வலசாரை’ என்போம் என்றார்.
‘வலசாரை பறக்குது’: பேசிக்கொண்டே வெட்டவெளிக்கு வந்திருந்தோம். கம்பீரமாக உயர்ந்தோங்கி நிற்கும் மரங்களற்ற மலையைக் கூர்ந்து நோக்கிவிட்டு, ‘வலசாரை அங்க உக்காந்துக்கிட்டு இருக்கு’ என்றனர். இருகண்நோக்கியை வைத்துத் துழாவியும் என் கண்ணுக்கு எதுவும் புலப்படவில்லை. பிறகு அது அமர்ந்திருந்த இடத்துக்கு அருகே கரிய திட்டுகளையும் வெள்ளையான எச்சத் திட்டுகளையும் சுட்டிக்காட்டி அடையாளம் காட்டிய பிறகுதான், அது இருக்குமிடம் எனக்குப் புலப்பட்டது. ஏதோ ஒரு சிறு புள்ளியாக இருந்ததை இருகண்நோக்கியால் கண்டோம். இருந்தும் மனம் நிறையாமல், பறக்கும்வரை அங்கேயே இருப்போம் எனத் தரையில் அமர்ந்துவிட்டோம். பூசாரி வீரணன், வயலில் நாற்று நடும்போது பாடும் பாட்டை அப்போது பாடினார்.
“உள்ளான் உழுதுவர,
ஊர்க்குருவி நாத்து அரிக்க,
நாரை பரம்படிக்க,
நட்டு வாம்மா குட்டப்புள்ள...”
அதாவது, தனது அலகால் சேற்றைக் குத்துவதுபோல உழவன் உள்ளான் உழ வேண்டும், ஊர்க்குருவிபோல சுறுசுறுப்பாக நாற்றுகளைப் பிரித்து நட வேண்டும், நாரை பொறுமையாக நடப்பதுபோலப் பரம்பு அடிக்க வேண்டும் எனப் பாடலை அவர் விளக்கிக்கொண்டிருந்தபோதே, ‘வலசாரை பறக்குது’ என்றார் ரவி. எங்களுக்குப் பின்னாலிருந்துவந்த காலை நேரக் கதிரவனின் ஒளி மலையைப் பிரகாசமாக்கிக்கொண்டிருந்தது. இதற்குமுன் அந்தப் பறவை இருந்த இடத்தின் அருகில் பார்த்தபோது வலசாரை தெரியவில்லை. ஆனால், அந்தப் பறவையின் வில் வடிவிலான நிழல் செந்நிறப் பாறையில் தெரிந்தது; நிழல் மெல்லப் பறந்துகொண்டிருந்தது. Falcon வகைப் பறவைகளுக்கு வல்லூறு, ராஜாளி என்ற பெயர்கள் இருந்தாலும் அவற்றை ‘வில்லேந்திரம்’ என்றும் அழைப்பதுண்டு.
றெக்கைகளை ஒரு கோணத்தில் மடக்கிப் பறக்கும்போது அவற்றின் வடிவம் வில்போலத் தோன்றும். அந்த வலசாரையின் நிழலைப் பார்த்தபோது எனக்கு அந்தச் சொல்தான் நினைவில் தட்டியது. பறக்கும் திசையை மாற்றியவுடன் பாறையின் பின்னணியில் வலசாரையின் உடலில் உள்ள நிறங்களும் அடையாளங்களும் தெரிந்தன. பாறையின் மேலே மெல்ல வட்டமிட்டுப் பறந்து செல்லச்செல்ல நீல வானின் பின்னணியில் வலசாரை அழகாகக் காட்சியளித்தது.
வலசாரையின் வாழ்க்கை: இது ஓர் இரைக்கொல்லிப் பறவை வகை (Raptor). பல்லி, ஓணான், பெரிய பூச்சிகளான வெட்டுக்கிளி, வண்டு, சிறு பறவைகள், புறாக்கள், எலிகள் முதலியவற்றை வேட்டையாடி உண்ணும். வறண்ட வெட்டவெளிப் பகுதிகளில் பொதுவாகத் தென்படும். விவசாய நிலங்கள், கிராமப்புறங்கள், சில வேளைகளில் நகர்ப்புறங்களில் மின்கம்பிகளின் உச்சியிலும், கட்டடங்களிலும்கூடத் தென்படும். இவற்றின் வாழிடங்கள் குறைந்துவருவதாலும் இரை உயிரினங்கள் குறைந்து, இல்லாமல் போவதாலும் இந்தப் பறவை அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்களின் பட்டியலில் (near threatened) சேர்க்கப்பட்டுள்ளது.
இந்தியத் துணைக்கண்டத்தில் (இலங்கை நீங்கலாக), ஆப்கானிஸ்தான், மியான்மர் ஆகிய நாடுகளில் இவை தென்படுகின்றன. இந்தியாவின் வடபகுதிகளில் (குறிப்பாக ராஜஸ்தான், குஜராத்) பல இடங்களில் பரவியும் தென்னிந்தியாவில் ஆங்காங்கே சிதறியும் தென்படுகின்றன. இவை தமிழ்நாட்டில் ஐந்து இடங்களில் மட்டுமே இருப்பதாக இதுவரை பதிவுசெய்யப்பட்டுள்ளது. இவை ஆண்டு முழுவதும் தென்படுவது அரிட்டாப்பட்டி மலைப்பகுதி மட்டும்தான் என்பதால், இந்தப் பகுதி முக்கியத்துவம் பெறுகிறது.
கருங்கழுகு, வெள்ளைக்கண் வைரி, பெரிய ராஜாளி, வல்லூறு, சிவப்பு வல்லூறு, தேன் பருந்து, பெரிய புள்ளிக் கழுகு, இந்தியப் புள்ளிக் கழுகு, வெண்தோள் கழுகு, விராலடிப்பான், பாறைக் கழுகு, செந்தலை வல்லூறு, இரண்டு வகையான பூனைப் பருந்துகள், கருந்தோள் பருந்து, கரும்பருந்து, செம்பருந்து, பாம்புக் கழுகு, காட்டுப் பாம்புக் கழுகு, சிறிய புள்ளி ஆந்தை, பூமன் ஆந்தை என சுமார் 20 வகையான இரைக்கொல்லிப் பறவைகள் இப்பகுதியில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இவற்றில் சில வலசை வருபவை, சில அப்பகுதியிலேயே கூடமைத்து ஆண்டு முழுவதும் தென்படுபவை.
எதிர்பார்ப்புடன் பார்க்க வந்த பறவையைப் பார்க்க முடிந்தால் ஏற்படும் பரவசத்துக்கு ஈடில்லை. அந்த மகிழ்ச்சியான மனநிலையுடனேயே அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள பறவைகளையும் பார்த்துக்கொண்டிருந்தோம். செங்குத்தாக உலக்கை போல இருக்கும் பாறை, கிண்ணம்போல வளைந்த பாறை, உருண்டையான பாறை, மனித முகம் போன்ற பாறை என விதவிதமான வடிவங்களில் பாறைகளும் குன்றுகளும் இருந்தன. பல ஆண்டுகளுக்குமுன் ஆந்திரத்தில் உள்ள அனந்தபூர் மாவட்டத்தில் பயணம் மேற்கொண்டபோது இது போன்ற பல அழகிய பாறைக் குன்றுகளைக் கண்டதுண்டு.
பாறைகளில் பல்லுயிரியம்: மேகங்களைப் போலவே, பாறைகளைப் பார்த்து, நம் கற்பனைக்கு ஏற்ப அவற்றின் உருவத்தை அனுமானிப்பது அலாதியான பொழுதுபோக்கு. நம்மில் பலர் இதைச் செய்திருப்போம். மேகங்கள் கலைந்துபோகும். ஆனால், பாறைகள் அப்படியல்ல. ஒரு பாறையை ஒரு கோணத்தில் பார்த்தால் ஒருவிதமாகவும் அதைச் சுற்றிவந்தால் அதே பாறை, வெவ்வேறு வடிவங்களில் வேறு உருவமாகவும் இருப்பதைக் காணலாம்.
காலையிலும், மாலையிலும் சூரிய ஒளியின் வீச்சு மாறுவதால் அவற்றின்மீது விழும் ஒளியின் விளைவால் ஒரு பாறை பலவித அழகிய தோற்றங்களைக் கொடுக்கும். இதுபோன்ற பாறைகள் சூழ்ந்த இடங்கள், பல உயிரினங்களுக்கு வாழிடமாகின்றன. நம்மில் பலருக்கு இயற்கை அழகை அள்ளித்தரும் இடமாகத் தெரிகிறது. ஆனால், சிலருக்கோ இவை வெறும் தேவையற்ற கல்லாகவும், பணம் கொட்டும் கிரானைட் குவாரிக்கான இடமாகவுமே தெரிவதுதான் சிக்கல்.
பாதுகாக்கப்பட வேண்டிய இடங்கள், மரங்கள் அடர்ந்த காடுகள் மட்டுமே அல்ல. வெட்டவெளிகளும், புதர்க்காடுகளும், புல்வெளிகளும், பாறைகள் சூழ்ந்த பகுதிகளும்கூடத்தான். இப்படிப்பட்ட வாழிடங்களை மட்டுமே சார்ந்திருக்கும் உயிரினங்கள் பல இங்குள்ளன. பரந்த புல்வெளிகளில் மட்டுமே தென்பட்டவை கானமயில்கள் (Great Indian Bustard). மயிலுக்குப் பதிலாகத் தேசியப் பறவையாக ஆக்கப்படுவதற்குப் பரிசீலிக்கப்பட்ட பறவை இது.
ஆனால், மேற்கண்டது போன்ற வாழிடங்கள் அழிக்கப்பட்டதால் தமிழ்நாட்டில் இப்பறவை முற்றிலுமாக அற்றுப்போய்விட்டது. ஆகவே, எஞ்சியிருக்கும் இப்படிப்பட்ட கண்டுகொள்ளப்படாத வாழிடங்களைப் பாதுகாப்பது மிகவும் அவசியம். அதற்கு, அரிட்டாப்பட்டி பாறைசூழ் பகுதிகளும் அதனைச் சார்ந்த உயிரினங்களும் அவ்வூர் மக்களால் காப்பாற்றப்பட்டு, தமிழக அரசால் (உயிரியல் பன்மைச் சட்டம் 2002இன் கீழ்) தமிழகத்தின் முதல் பல்லுயிர் அருமரபுக் களமாக (Biodiversity Heritage Site) அறிவிக்கப்பட்டிருப்பது மிகச் சிறந்த முன்னுதாரணமாகும். - ப.ஜெகநாதன் எழுத்தாளர் - காட்டுயிர் ஆராய்ச்சியாளர், தொடர்புக்கு: jegan@ncf-india.org