சிறப்புக் கட்டுரைகள்

இன்குலாப்: ஆதிக்கத்துக்கு எதிரான ஆவேசக் குரல்

எஸ்.வி.ராஜதுரை

சில்லென்று நெருஞ்சிக் காடே!

சிரிக்காதே:

உன் மீது

கால்கள் அல்ல -

களைக்கொத்திகளே இனி நடக்கும்

எங்களைப்

பிறாண்டிச் சிவந்த உன் நகங்களை நீட்டாதே

ஏனெனில் வெட்டப்படுவது இனிமேல்

நகங்களல்ல -

விரல்கள்.

வர்க்க, சாதிய, மத, பண்பாட்டு வகைகளில் ஒடுக்கி வருவோருக்கு எதிராகப் போராடும் சக்திகளுக்கு ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளாக இன்குலாப் வழங்கிவந்த போர்க்குரலின் சாரம் இது. அந்த சாரம் ப்ரெஹ்ட்டிலிருந்து லாங்ஸ்டன் ஹ்யூஸ் வரை, மஹ்மூத் தார்விஷிலிருந்து நஸிம் ஹிக்மெத் வரை, பாரி மகளிரிலிருந்து அமெரிந்தியத் தலைவர் சீயாட்டில் வரை பல்வேறு மூலாதாரங்களிலிருந்து வடித்தெடுக்கப்பட்டவை என்பதை இன்குலாபின் படைப்புகள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாகப் படிப்பவர்களுக்குப் புரியும். "மனுசங்கடா - நாங்க மனுசங்கடா, ஒன்னைப் போல அவனைப் போல எட்டுச் சாணு ஒசரமுள்ள மனுசங்கடா -டேய் மனுசங்கடா"என்று ஆதிக்க சாதிகளுக்கு எதிரான தலித் மக்களின் கோபாவேசக் குரலைப் புரட்சிப் பாடகர் கே. ஏ.குணசேகரன் வழியாகத் தமிழகமெங்கும் எதிரொலிக்கச் செய்த இன்குலாப், இடதுசாரி அரசியலில் தலித்துகள் தலைமைப் பாத்திரம் வகிக்கும்போதுதான் இந்தியாவில் புரட்சி வெற்றி பெறும் என்னும் உறுதியான கருத்தைக் கொண்டிருந்தவர்.

பன்னூறாண்டுக்காலத் தமிழகப் பண்பாட்டு மரபில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகச் சொல்லப்பட்டவை எவையோ அவற்றை மட்டுமே சலித்தெடுத்துக்கொண்டவர். சதுர்வேதி மங்கலங்களையும் தேவதாசி முறையையும் போற்றி வளர்த்த ராஜராஜசோழனைப் பற்றிய கவிதை சென்னைப் பல்கலைக் கழகப் பாடப் புத்தகத்திலிருந்து நீக்கப் படுவதற்கு அப்போது ஆட்சியிலிருந்த அதிமுகவையும் எதிர்க்கட்சியாக இருந்த திமுகவையும் இணைத்துவைத்தவர்!

சொல்லுக்கும் செயலுக்குமிடையே மிகச் சிறிய இடைவெளியோடுதான் அவரது வாழ்க்கை கழிந்திருக்கிறது. மார்க்ஸிய-லெனினிய இயக்க ஈடுபாடு, அவரது குடும்பம் கிட்டத்தட்ட நடுச்சந்தியில் நிற்க வைக்கும் அளவுக்குச் சென்றிருக்கிறது. இரு மகன்களையும் பள்ளி இறுதி வகுப்புக்கு மேல் அவரால் படிக்க வைக்க முடியவில்லை. கனிவு நிறைந்த அவரது துணைவியாரின் ஒத்துழைப்பின்றி அவரது ஒரே மகளால், மருத்துவப் படிப்புப் படித்திருக்க முடியாது.

ஈழத் தமிழர்களின் போராட்டத்தோடு பிணைத்துக் கொண்டவர். தமிழக மனித உரிமைப் பாதுகாப்பு இயக்கங்களோடு, மரண தண்டனை எதிர்ப்பு இயக்கத்தோடு உற்சாகத்தோடு பணியாற்றியவர். மத அடிப்படைவாதங்கள் அனைத்தையும் எதிர்த்தவர். தாம் பிறந்த இஸ்லாமிய சமுதாயத்திலும், பெண்ணடிமைத்தனமும் சாதிய ஏற்றத்தாழ்வுகளும் இருப்பதை எடுத்துக்காட்டியதற்காக அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களால் கடுமையாக அவதூறுசெய்யப்பட்டவர். அதேபோல, அதிகாரபூர்வமான கிறித்தவ திருச்சபை சாதிய ஒடுக்குமுறைக்குத் துணை போவதை 'மீட்சி'நாடகத்தில் வெளிப்படுத்தியவர்.

தமிழ் நவீன நாடகத்திற்கு அவர் வழங்கிய முக்கியப் பங்களிப்பு உரிய அங்கீகாரம் பெறவில்லை. சங்க இலக்கியத்தையும் ஐம்பெரும் காப்பியங்களையும் அவர் மறுவாசிப்புக்கு உட்படுத்தியதின் விளைவே 'ஒளவை'. 'குறிஞ்சிப் பாட்டு', 'மணிமேகலை' ஆகிய நாடகங்கள். உலகு தழுவிய விழுமியங்களைக் கொண்டிருப்பவை அவை.

ஆழ்ந்த அழகியல் உணர்வும் இசை நாட்டமும் கொண்டவர்; பறவைகளைப் பார்த்துப் பரவசப்படுபவர். எல்லாவற்றுக்கும் மேலாக, அற்புதமான மனிதநேயர். மோகனப் புன்னகையால் அனைவரையும் கவர்ந்திழுத்த அவர் கடைசிக் கொடையாகத் தமது உடலை மருத்துவமனைக்கு விட்டுச் சென்றிருக்கிறார். "எரியும் ஒரு விளக்குத் திரியிலிருந்து அம்மா வீட்டில் எல்லா விளக்குகளையும் ஏற்றுவாள்" என்னும் வெளிநாட்டுப் பழமொழியை அவர் அடிக்கடி நினைவுகூர்வதுண்டு.

- எஸ்.வி.ராஜதுரை, மார்க்ஸிய ஆய்வாளர், எழுத்தாளர், 'தலித்தியமும் உலக முதலாளியமும்' உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர், தொடர்புக்கு:sagumano@gmail.com

SCROLL FOR NEXT