சிறப்புக் கட்டுரைகள்

புகைப்பதை நிறுத்தும் மனவுறுதியை எங்கிருந்து பெறுவது?

கு.கணேசன்

திடமான மனவுறுதி இருந்தால், ஒரே நாளில் புகைப்பதை நிறுத்திவிடலாம் | புகைப் பழக்கத்திலிருந்து விடுபட்டவர்கள் பலரும் புகையை வெல்வதற்குச் சொல்லும் முக்கியமான வழி மனவுறுதி. சமீபத்தில் ‘தி இந்து’வில் வெளியான ஷாஜஹானின் கட்டுரைகூட இதை ஆழமாகச் சொல்லியிருந்தது. ஆனால், அந்த மனவுறுதி இல்லாமல் அவதிப்படுபவர்கள்தான் நம்மிடம் அதிகம். அந்த மனவுறுதியை எங்கிருந்து பெறுவது?

ஒரு மருத்துவராக, புகைப் பழக்கத்தை ஒருவரின் தனிப்பட்ட பழக்கமாக அணுகுவதைக் காட்டிலும், சமூகப் பிரச்சினையாக அணுகுமாறு நான் எல்லோரிடமும் கேட்டுக்கொள்வேன். இன்றைக்குப் புகைப் பழக்கம் நம் சமூகத்தில் எப்படி ஊடுருவியிருக்கிறது என்பதைக் கவனித்தால், இதன் பின்னணியை எளிதில் உணர்ந்துகொள்ள முடியும்.

நான்காயிரம் நச்சுகள்: உலக அளவில் இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில்தான் புகைப்பவர்களின் எண்ணிக்கை அதிகம். இந்தியாவில் மட்டும் 12 கோடிப் பேர் புகைபிடிக்கிறார்கள். இதில் ஆண்களில் 30%, பெண்களில் 5% பேர் புகைப் பழக்கத்துக்கு அடிமையாகியிருக்கின்றனர். இந்தியாவில் ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் புகைபிடிப்பதால் மட்டுமே இறக்கிறார்கள் என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கெடுப்பு.

மனித உடலில் நுழைவதன் மூலம், ஒரே நேரத்தில் பல உறுப்புகளைத் தாக்கும் வல்லமை கொண்ட பொருட்களில் புகையிலையே முன்னிலையில் இருக்கிறது. புகையிலையில் நச்சுகளின் எண்ணிக்கை நாலாயிரத்துக்கும் மேல். அவற்றில் மிக அபாயகரமான நச்சு நிகோடின்! இது ஒரு போதைப் பொருள். பீடி,சிகரெட்,சுருட்டு, வெற்றிலைச் சீவல், மூக்குப் பொடி, பான்மசாலா எனப் பல வேடங்களில் இது உடலுக்குள் செல்கிறது. கொரோனரி ரத்தக் குழாயைச் சுருங்கவைத்து, மாரடைப்பைக் கொண்டுவரக் கூடியது நிகோடின். புகை பிடிப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு, புகை பிடிக்காதவர்களைவிட ஐந்து மடங்கு அதிகம் என்கிறது உலக இதய நோய்க் கழகம்.

புகையிலையும் புற்றுநோயும்: மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை நிறுத்திப் பக்கவாதம் உருவாவதற்கான சூழலை உருவாக்குவதிலும் நிகோடின் முன்னிலை வகிக்கிறது. ரத்தக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தி, கால் விரல்களை அழுகவைத்து, காலையே வெட்டி எடுக்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளுவதும் உண்டு. நுரையீரல் புற்றுநோய்க்கு மூலகாரணங்களில் ஒன்று புகைப் பழக்கம்.

புகை பிடிப்பவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு, புகை பிடிக்காதவர்களைவிட 25 மடங்கு அதிகம். தவிரவும், வாய், தொண்டை, உணவுக் குழாய், இரைப்பை, கணையம், சிறுநீர்ப்பை, புராஸ்டேட் என்று பல இடங்களில் புற்றுநோயை உருவாக்கும் காரணங்களிலும் புகை முன்னணியில் இருக்கிறது. ‘சிஓபிடி’(Chronic Obstructive Pulmonary Disease) என அழைக்கப்படும் ‘நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோயை’வளர்ப்பதில் முதலிடம் வகிப்பதும் இதுதான். முன்பெல்லாம் இது 50 வயதைத் தாண்டியவர்களுக்கே வந்தது. இப்போது 30 வயதிலும் வருகிறது. இதற்கு பிரதான காரணமாகக் குறிப்பிடப்படுவது, 13 வயதிலேயே புகைக்கும் பழக்கம் பலரிடமும் உருவாகிவிடுகிறது என்பதாகும். ஆக, இது ஒரு சமூகப் பிரச்சினை.

ஒருவர் புகைப்பதை அவருடைய தனிப்பட்ட சுதந்திரம் என்று நாம் அப்படியே கடக்க முடியாது. புகையிலிருந்து அவரை மீட்க நம்முடைய கரிசனம் அவசியம். ஏனென்றால், நடுவயதில் ஒருவர் புகைப்பதை நிறுத்தினாலும் ஆயுள் நீடிக்கும். புகைக்கும் பழக்கத்துக்கு விடை கொடுத்தால், ஒருவருக்கு ஏற்கெனவே உள்ள மாரடைப்புக்கான வாய்ப்பில் 30% ஒரே வருடத்தில் குறைந்துவிடுகிறது. புகைப்பதை நிறுத்திய 5 ஆண்டுகளில் பக்கவாத வாய்ப்பு பெரிதும் அகல்கிறது. வாய், தொண்டை, உணவுக் குழாய், இரைப்பை, சிறுநீர்ப்பை ஆகிய இடங்களில் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு பாதியாகக் குறைந்துவிடுகிறது. புகைப்பதை நிறுத்திய 10 ஆண்டுகளில், நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பும் பாதியாகிவிடுகிறது.

புகைப்பதை நிறுத்த வழிகள்: நம் முன்னே நிற்கும் பெரும் சவால், “நான் புகைப்பதை நிறுத்தத்தான் நினைக்கிறேன். அதற்கு நான் என்ன செய்வது?” என்ற கேள்வி. சரியான வழிகாட்டுதல் இல்லாமல், இந்தப் பழக்கத்தைத் தொடர்கிறவர்களே அதிகம். திடமான மனவுறுதி இருந்தால், ஒரே நாளில் புகைப்பதை நிறுத்திவிடலாம் என்ற உண்மையை ஆழமாக நம்புவதே புகையிலிருந்து விடுதலை அடைவதற்கான அடிப்படை நிலை.

புகையிலிருந்து விடுபட்டவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு அனுபவத்தைச் சொல்கிறார்கள். முதலில் சிகரெட்டுகளின் எண்ணிக்கையைக் குறைத்து, பிறகு புகைக்கும் நேர இடைவெளியைக் கூட்டி, புகைக்கும் நினைப்பு வரும்போதெல்லாம் கவனத்தை வேறு திசைக்குத் திருப்பும் நடவடிக்கைகளில் இறங்கி - இப்படி என்னென்னவோ வழிகளைக் கையாண்டு விடுதலையானவர்கள்கூட உண்டு. “எப்போதெல்லாம் புகைக்கும் எண்ணம் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் என் மனைவியுடனோ, பிள்ளைகளுடனோ பேசிவிடுவேன். செல்பேசியிலாவது. அவர்கள் முகமே என் நினைப்பை மாற்றிவிடும்” என்று சொன்னார் ஒரு நோயாளி.

இப்போதெல்லாம் புகைப்பதை மறக்கச் செய்யும் மாத்திரைகள்கூட வந்துவிட்டன. மருத்துவர்களின் ஆலோசனையோடு இந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம். இன்னும் நாள்பட்ட புகை நோயாளிகளை விடுவிக்க நிகோடின் கலந்த சூயிங்கம், பட்டைகள் போன்றவைகூட வந்துவிட்டன. உதாரணமாக, பிளாஸ்திரி போன்ற நிகோடின் பட்டைகளை முடி இல்லாத முன்கையில்/தொடையில் ஒட்டிக்கொண்டால், மிகக் குறைந்த அளவிலான நிகோடின் தோல் வழியாக ரத்தத்துக்குச் சென்று, புகைக்கும்போது ஏற்படும் அதே உணர்வைக் கொடுக்கும். இதனால், புகைக்கும் ஏக்கம் குறையும். அதேசமயம், கையில் சிகரெட்டைத் தொடவில்லை எனும் உண்மை நாளடைவில் மனஉறுதியை உண்டாக்கி, அதுவும் வேண்டாம் என்று புகையிலிருந்து முழுவதுமாக விடுவிக்கும்.

புகைக்கும் பழக்கத்திலிருந்து விடுவிக்க அரசாங்கம் நிறையவே நடவடிக்கைகளை எடுக்கிறது. எனினும், வெறுமனே “புகைக்காதீர், புகை நமக்குப் பகை” என்றெல்லாம் வெற்றுப் பிரச்சாரத்தில் ஈடுபடுவதைக் காட்டிலும், புகையை வெல்வதற்கு ஆக்கபூர்வமான வழிகள், சிகிச்சை முறைகள் தொடர்பான விழிப்புணர்வை மக்களிடத்தில் கொண்டுசெல்வது பலன் அளிக்கும். புகைப்பதிலிருந்து விடுபடுவதற்கான சிகிச்சைகளையும் மாத்திரைகளையும் சிறு நகரங்களிலுள்ள அரசு மருத்துவமனைகள் வரை கொண்டுசெல்வது கூடுதல் பலன் அளிக்கும்!

-கு.கணேசன், பொதுநல மருத்துவர், தொடர்புக்கு: gganesan95@gmail.com

SCROLL FOR NEXT