டெல்லி ஒரு விஷ வாயு அறையாக மாறியிருக்கிறது
டெல்லியின் காற்று அசுத்தமாகி விட்டது. டெல்லி ஒரு ‘விஷ வாயு அறை’ என்கிறார் முதல்வர் கேஜ்ரிவால். பல பகுதிகளில் காற்றில் அபாயகரமான அளவுகளில் உள்ள மாசு பணக்காரர், ஏழை, குழந்தைகள், முதியோர், நலிவடைந்தோரை மோசமாகப் பாதிக்கும்.
மத்திய அரசும் மாநில அரசும் அரசியல் செய்வதை ஒதுக்க வேண்டும். மக்களுக்கு இப்போதைய, எதிர்கால பாதிப்புகளைத் தடுக்க அவசரகால நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
டெல்லியைச் சுற்றியுள்ள ஹரியாணா, பஞ்சாப் மாநிலங்களில் உள்ள வயல்களில் வைக்கோலை எரிக்கிறார்கள். அதுதான் குளிர்காலத்தில் டெல்லியில் காற்று கெட்டுப்போவதற்கான பிரதான காரணம் என்கிறார்கள்.
நெல் அறுவடை முடிந்ததுமே கோதுமையை விதைக்க விவசாயிகளுக்குக் குறைவான காலமே இருக்கிறது. அதனால், வேகமாக வயலைத் தயார் செய்ய விவசாயிகள் வைக்கோலை எரிக்கின்றனர். இது பொதுவான வழக்கம். இதைத் தடுக்க மாநிலங்கள் சில நடவடிக்கைகளை எடுக்கின்றன. ஆனாலும், பழக்கம் தொடர்கிறது. அதனால், டெல்லியில் காற்று மாசு அடைவது மறுபடி மறுபடி தொடரவே செய்யும்.
வேறு பயனுள்ள நோக்கங்களுக்குப் பயன் படுத்தாமல் வைக்கோலை ஏன் விவசாயிகள் எரிக்கிறார்கள் என்று ஆராய வேண்டும். இந்த மாநிலங்களில் வைக்கோலுக்குப் பொருளாதார மதிப்பு இல்லை என்பதுபோலத் தோன்றுகிறது.
நெல் - கோதுமை சுழற்சி
காலங்காலமாக பஞ்சாபிலும் ஹரியாணாவிலும், முக்கியமான பயிராக நெல்லை வளர்க்க மாட்டார்கள். பஞ்சாபில் 1970-1973 காலகட்டத்தில் நெல் பயிர் செய்ய 7.6% விளைநிலம்தான் பயன் படுத்தப்பட்டது. அது 2011-13 காலகட்டத்தில் 36% ஆகப் பிரம்மாண்டமாக உயர்ந்துள்ளது. அதேபோல, இதே காலகட்டத்தில் ஹரியாணாவிலும் நெல் விளையும் பரப்பு அதிகரித்துள்ளது. பாசன வசதிகள் வளர்ந்துள்ளன. அரசு குறைந்தபட்ச ஆதரவு விலை தருகிறது. விவசாயிகளிடம் தானியங்களை அரசு கொள்முதல் செய்கிறது. அதனால், விவசாயிகளுக்கு உத்தரவாதமான சந்தை கிடைத்துள்ளது. இவைதான் விவசாயிகள் நெல்லைப் பயிரிடுவதற்கான காரணங்கள். நெல் விளையும் பரப்பும் காலப்போக்கில் பெரிதாக வளர்ந்துள்ளது. பாரம்பரியமாக கோதுமையை விவசாயம் செய்தவர்கள் கோதுமையையும் நெல்லையும் மாறிமாறிச் சுழற்சி முறையில் விவசாயம் செய்ய ஆரம்பித்ததே இதன் விளைவு.
நிலத்தையும் இதர வளங்களையும் கடுமையாகப் பாதித்துள்ளது இந்தச் சுழற்சி. மண் வளம் குன்றி, நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது.” வேறு பயிர்களைப் பயிரிடலாமே” என்று மாநில அரசுகள் விவசாயி களிடம் பேசிப் பார்த்தன. ஆனால், அவர்கள் சம்மதிக்கவில்லை. சுழற்சி முறையில்தான் பயிரிடுகின்றனர். காய்கறிகளையும் பழங் களையும் மாற்றுப் பயிர்களாகப் பயிரிடுவதில் சந்தைப்படுத்தல் உள்ளிட்ட பிரச்சினைகள் அவர்களுக்கு உள்ளன.
கோதுமை வைக்கோல்
பஞ்சாபும் ஹரியாணாவும் விவசாயத்தில் முன்னேறியவை. பஞ்சாபில் ஒரு ஹெக்டேருக்கு சராசரியாக 4 டன் வரையும் ஹரியாணாவில் 3.2 டன் வரையும் அரிசி கிடைக்கிறது என்கிறது விவசாய அமைச்சகம். இந்த மாநிலங்களில் பெருமளவு விவசாயம் இயந்திரமயமாகியுள்ளது. அறுவடைக் காலத்தில் ஆட்கள் கிடைப்பதில்லை. கூலி அதிகம். அதனால், விவசாயிகள் கூட்டாக அறுவடை செய்கின்றனர்.
பஞ்சாபில் 2011-13 காலகட்டத்தில் சராசரியாக 11.1 மில்லியன் டன்கள் அரிசி உற்பத்தியானால் 16.6 மில்லியன் டன்கள் வைக்கோல் உற்பத்தியாகிறது என்கிறது உத்தேசமான மதிப்பீடு. ஹரியாணாவில் சராசரி அரிசி உற்பத்தி 1.3 லட்சம் டன்கள். 1.9 லட்சம் டன் வைக்கோலும் உற்பத்தியாகிறது.
அறுவடைக்காக இயந்திரங்களைப் பயன் படுத்துவது வயலில் மிச்சமிருக்கிற பயிர்க் கழிவுகளை அப்புறப்படுத்துவதைப் பாதிக்கிறது. வயலில் உள்ள பயிரை ஒட்ட வெட்டாமல் ஓரளவு விட்டே வெட்டுகிறது அறுவடை இயந்திரம். அதனால், களத்தில் அதிகமான வைக்கோல் மிஞ்சுகிறது. கோதுமைப் பயிரின் கழிவு விலங்குகளுக்குத் தீவனமாகிறது. அதனால், விவசாயிகள் அதைச் சேகரிக்கின்றனர். அதனைத் தீவனமாகத் தயாரிக்கும் தொழில்நுட்பமும் அவர்களிடம் உள்ளது. அதனால் விவசாயிகள் அதனை எரிப்பதில்லை.
வைக்கோல் மின்நிலையங்கள்
நெற்பயிரிலிருந்து வரும் வைக்கோல் இந்த மாநிலங்களில் தீவனமாகப் பயன்படவில்லை. அது கால்நடைகளுக்கு விருப்பமான தீவனமாக இல்லை. அதனால், அதைச் சேகரிப்பதற்குப் பணம் செலவழிக்க அவர்கள் தயாரில்லை. அதனால்தான் அதை எரித்துவிடுகின்றனர். வைக்கோலை எரிப்பது உடல்நலனுக்கு நல்லதல்ல என்று விவசாயிகளுக்குத் தெரியும். ஆனாலும் அவர்களுக்கு வேறுவழிகளில் அதைப் பயன்படுத்துவதற்கான வழிகள் தெரியவில்லை. அதனால், இந்த விவகாரத்தில் விவசாயிகளை மட்டுமே குற்றம்சாட்டுவதில் பயனில்லை. அவர்களுக்கு உதவும்வகையில் இதைத் தீர்ப்பதற்கான தொழில்நுட்பத் தீர்வுகள்தான் தேவை. அதுதான் ஒவ்வொருவருக்கும் சுத்தமான காற்றைச் சுவாசிப்பதற்குத் தரும்.
பயோமாஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் உயிர்த்திரள் பாதுகாப்பான, நம்பகமான எரிபொருளைத் தரக்கூடியது. அது நிறைந்த வைக்கோலை மின்உற்பத்திக்காகப் பயன்படுத்தலாம். வைக்கோலை என்ன செய்யலாம் என்ற பிரச்சினையும் தீரும். மாநிலங்களில் உள்ள மின்பற்றாக்குறையும் தீரும்.
உயிர்த்திரளை வைத்து மின்சாரம் உற்பத்தி செய்யும் நிலையங்களை உருவாக்குவதில் மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம், கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் முன்னேறி உள்ளன. பஞ்சாபும் ஹரியாணாவும் போதுமான அளவு முன்னேறவில்லை என்கிறது புதுப்பிக்கத்தக்க சக்திக்கான மத்திய அமைச்சகம். வைக்கோலை வைத்து மின்சாரம் தயாரிக்கும் நிலையங்களை உருவாக்க வேண்டும். அவற்றுக்கான மூலதனம் வேண்டும். இதன் மூலம் வேலைவாய்ப்புகளும் உருவாகும்.
கட்டமைப்பு தேவை
வைக்கோலைச் சேகரிக்கவும், அவற்றை நறுக்குதல், இருக்கிற நிலையிலேயே ஏற்றுக்கொள்ளுதல் ஆகிய பணிகளைச் செய்வதற்கான நிர்வாகக் கட்டமைப்பு தேவை. வயலிலிருந்து அகற்றப்பட்ட வைக்கோல் கழிவுகளை மக்கவைத்துத் தழையுரமாக மாற்றுவதற்கும் முயற்சிகள் தேவை.
காட்போர்டு தயாரித்தல், பேக்கிங் பொருட்களைத் தயாரித்தல் ஆகிய பணிகளுக்காகச் சில தொழிற்சாலைகளும் காகித ஆலைகளும் தற்போது ஒரு குறிப்பிட்ட அளவு வைக்கோலைப் பயன்படுத்துகின்றன. விஞ்ஞான ஆய்வுகள் செய்து வைக்கோலிலிருந்து ஈஸ்ட் புரோட்டீன் தயாரித்தல் உள்ளிட்ட முயற்சிகள் செய்யலாம். அதனால், புதிய தொழில்வாய்ப்புகள் வளரும்.
மேலும் சிறப்பான தானியமாக, மேலும் தரமான வைக்கோலைத் தருவதாக, மேலும் தரமான நெல் வகைகளையும் உருவாக்க வேண்டும். அத்தகைய இரட்டைப் பயன்பாடு கொண்ட நெல் வகைகளால் உணவுப் பாதுகாப்பும் கிடைக்கும். விவசாய வருமானமும் கிடைக்கும். சுற்றுச்சூழலும் மேம்படும்.
ஏழுமலை கண்ணன்,
உதவிப் பேராசிரியர், ஜவாஹர்லால் பல்கலைக்கழகம், டெல்லி.
‘தி இந்து’ ஆங்கிலம், தமிழில்: த.நீதிராஜன்