அமெரிக்கத் தமிழர்களின் ‘விளக்கு’ இலக்கிய அமைப்பின் 2021ஆம் ஆண்டுக்கான புதுமைப்பித்தன் நினைவு விருதுகள் எழுத்தாளர்கள் வண்ணநிலவன் (புனைவு), அஸ்வகோஷ் (அபுனைவு) ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. ஒரு லட்ச ரூபாய் பண முடிப்பும் பாராட்டுப் பத்திரமும் கொண்டது இந்த விருது. வண்ணநிலவன், ‘கம்பா நதி’, ‘கடல் புரத்தில்’, ‘ரெயினீஸ் ஐயர் தெரு’ உள்ளிட்ட நாவல்களை எழுதியவர். ‘எஸ்தர்’, ‘மிருகம்’ உள்ளிட்ட பல குறிப்பிடத்தக்க சிறுகதைகள் எழுதியிருக்கிறார். கவிதைகளும் எழுதியுள்ளார். எழுத்தாளர் இராசேந்திர சோழனின் மற்றொரு பெயர்தான் அஸ்வகோஷ். இவரது ‘எட்டு கதைகள்’ கவனம் பெற்ற தொகுப்பு. ‘சிறகுகள் முளைத்தது’ உள்ளிட்ட பல நாவல்களை எழுதியுள்ளார். ‘பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் தேவைதானா?’, ‘பின் நவீனத்துவம்-பித்தும் தெளிவும்’ உள்ளிட்ட பல கட்டுரைத் தொகுப்புகளும் வெளியிட்டுள்ளார். எழுத்தாளர் சி.மோகன், ஆய்வாளர் வ.கீதா, மொழிபெயர்ப்பாளர் சண்முகசுந்தரம் ஆகியோர் இந்த விருதுக்கான நடுவர்களாகச் செயல்பட்டுள்ளார்கள்.
பன்மொழிகளில் சுந்தர ராமசாமி
மத்திய ஐரோப்பிய நாடான ஸ்லோவேனியாவின் அதிகாரபூர்வ மொழியான ஸ்லோவேனி மொழியில் எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் புகழ்பெற்ற நாவலான ‘புளிய மரத்தின் கதை’ மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்த நாவலின் பன்னாட்டு ஆங்கில மொழிபெயர்ப்பு, அமேசான் கிராஸிங் பதிப்பகம் மூலம் வெளிவந்துள்ளது. சாகித்ய அகாடமி விருதுபெற்ற மொழிபெயர்ப்பாளர் அனிருத்தன் வாசுதேவன் இதை மொழிபெயர்த்துள்ளார். அவரது சிறுகதைத் தொகுப்பின் சிங்கள மொழிபெயர்ப்பும் சமீபத்தில் இலங்கையில் வெளியிடப்பட்டுள்ளது.
மொழிபெயர்ப்பு உரையாடல்கள்
மொழிபெயர்ப்பு உரையாடல்கள் என்ற தலைப்பில் ‘உன்னதம்' இதழ் அக்டோபர், 30, ஞாயிற்றுக்கிழமை அன்று அந்தியூர் நலம் மஹாலில் மொழிபெயர்ப்பாளர்களுக்கான ஒரு கருத்தரங்கை நடத்த இருக்கிறது. இணையத் தொழில்நுட்ப வளர்ச்சியால் மொழிபெயர்ப்புக் கலை எதிர்கொள்ளும் சவால்கள், மொழிபெயர்ப்புப் பதிப்புரிமைகளின் சிக்கல்கள் போன்ற பல விஷயங்கள் இதில் ஆலோசிக்கப்படவுள்ளன. மொழிபெயர்ப்பாளர்கள் சா.தேவதாஸ், எத்திராஜ் அகிலன், எஸ்.பாலச்சந்திரன், வேங்கட சுப்புராய நாயகர், அசதா, சமயவேல், கார்த்திகை பாண்டியன் உள்ளிட்ட பலர் உரை நிகழ்த்தவுள்ளனர். தொடர்புக்கு: 99407 86278