1805-ம் ஆண்டு அது. பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியில் இருந்த இந்திய ராணுவ வீரர்கள் விபூதி, நாமம் போன்ற மத அடையாளங்களுடன் இருக்கக் கூடாது, தலையில் தொப்பி அணிய வேண்டும், தாடி வைக்கக் கூடாது என்றெல்லாம் கடுமையான உத்தரவுகள் போடப்பட்டன.
வேலூர் கோட்டைக்குள் இருந்த 1,500 இந்து, முஸ்லிம் வீரர்கள் இதைக் கேட்டுக் கொதித்தெழுந்து, எதிர்க் குரல் எழுப்பினார்கள். எதிர்ப்பாளர்களில் சிலர் சென்னை கோட்டைக்குக் கொண்டுவரப் பட்டனர். அவர்களில் பலருக்கும் 50 பிரம்படிகளிலிருந்து 90 பிரம்படிகள் வரை தரப்பட்டதுடன் பணிநீக்கமும் செய்யப்பட்டனர். ஆனாலும், எதிர்ப்பு உள்ளுக்குள்ளேயே நீறுபூத்த நெருப்பாக நீடித்தது.
தென்னிந்தியாவை ஆட்சிசெய்த திப்பு சுல்தான், பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியால் தோற்கடிக்கப்பட்ட பிறகு, அவரது மகன்கள் குடும்பத்தோடு வேலூர் கோட்டையில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
திப்பு சுல்தானின் மகள் திருமணம் ஜூலை 9-ல் கோட்டைக்குள் நடந்தது. அதற்காக ஒன்றுகூடிய இந்திய வீரர்கள், மறுநாள் அதிகாலை யில் ஆங்கிலேய அதிகாரிகள் பலரைக் கொன்றனர். கம்பெனியின் கொடி இறக்கப்பட்டு திப்பு சுல்தானின் கொடி ஏற்றப்பட்டது. திப்பு சுல்தானின் இரண்டாவது மகன் படேக் ஹைதர் அரசராக அறிவிக்கப்பட்டார்.
மறுநாள் ஆற்காட்டிலிருந்து வந்த கம்பெனி படை, வேலூர் கோட்டையின் கதவுகளை வெடி வைத்துத் திறந்தது. உள்ளே நடந்த சண்டையில் 350-க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். கிளர்ச்சிக்குக் காரணமான ராணுவ ஆணைகள் திரும்பப் பெறப்பட்டன. திப்பு சுல்தான் ராஜ குடும்பம் கல்கத்தா கோட்டைக்கு மாற்றப்பட்டது.
ஒரே நாளில் ஒடுக்கப்பட்டாலும் ஒருபோதும் அழிக்க முடியாத வரலாறாக ஆனது அந்தக் கிளர்ச்சி!