மொழிபெயர்ப்பாளர் செ.நடேசன் சென்ற வாரம் காலமாகிவிட்டார். ‘ஸ்டாலின் பற்றிய குருச்சேவின் பொய்கள்’, ‘மாவீரன் சிவாஜி காவித்தலைவன் அல்ல, காவியத்தலைவன்’, ‘இந்துவாக நான் இருக்க முடியாது’ உள்ளிட்ட நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இந்திய ஆசிரியர் கூட்டமைப்பின் காத்திரமிக்கச் செயற்பாட்டாளர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தின் திருப்பூர் மாவட்டத் துணைத் தலைவராக இருந்தவர்.
கு.அழகிரிசாமி ஆவணப்படம் வெளியீடு
கு.அழகிரிசாமியின் நூற்றாண்டை முன்னிட்டு அவருடைய மகனும் ஆவணப்பட இயக்குநருமான அ.சாரங்கராஜன் தன் தந்தை குறித்து இயக்கிய ஆவணப்படம் திரையிடப்படவுள்ளது. ராஜா அண்ணாமலைபுரம் இசைக் கல்லூரி சாலையில், தாகூர் சென்டர், இயல் இசை நாடக மன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் பழ.அதியமானைப் பதிப்பாசிரியராகக் கொண்ட கு.அழகிரிசாமியின் ‘நான் கண்ட எழுத்தாளர்கள்’ நூல் வெளியிடப்படவுள்ளது. காலச்சுவடு பதிப்பகம் இந்நிகழ்வை ஒருங்கிணைக்கிறது.
தொடர்புக்கு: 9444018890.
மதுரை புத்தகக் காட்சியில் இந்து தமிழ் திசை
மதுரை புத்தகக் காட்சி நேற்று தொடங்கியது. அக்டோபர் மாதம் 3ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மதுரைத் தமுக்கம் மைதானத்தில் நடைபெறும் இந்தப் புத்தகக் காட்சியில் இந்து தமிழ் திசையும் (ஸ்டால் எண் - 29) கலந்துகொள்கிறது. மதுரை மாவட்ட நிர்வாகமும் பபாசியும் இணைந்து ஒருங்கிணைக்கும் இந்நிகழ்வில் நாள்தோறும் எழுத்தாளர்களின் கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. எஸ்.ராமகிருஷ்ணன், லஷ்மி சரவணக்குமார், வெய்யில், சு.வெங்கடேசன், யுவன் சந்திரசேகர், மதுக்கூர் ராமலிங்கம், யுகபாரதி உள்ளிட்ட பலர் கலந்துகொள்கிறார்கள்.