சிறப்புக் கட்டுரைகள்

இந்தியா - இலங்கை இருதரப்பு மீனவர்களுக்கும் சாதகமான நிலையை உருவாக்க வேண்டும்!- மங்கள சமரவீரா பேட்டி

மீரா ஸ்ரீனிவாசன்

டெல்லிக்குச் சமீபத்தில் வந்திருந்தார் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீரா. இலங்கைத் தமிழர்கள் விவகாரம், தமிழ் மீனவர்கள் விவகாரம் உட்பட இருதரப்பு உறவுகள் தொடர்பாகப் பேசினோம்.

மீன்வளம் பற்றிய உயர்மட்டப் பேச்சுவார்த்தை களுக்காகச் சமீபத்தில் நீங்கள் டெல்லி வந்திருந்தீர்கள். அதன் முடிவுகள் வெற்றிகரமாகவும் ஆக்கபூர்வமாகவும் இருந்தது என்கிறது இலங்கை. ஆழ்கடல் வலைகள் மூலம் மீன்பிடிப்பதைத் தடைசெய்ய இந்தியா ஒப்புக்கொண்டதா?

இந்தப் பேச்சுவார்த்தைகளைப் பெரிய வெற்றி என்று குறிப்பிடலாம். பாக். நீரிணை பற்றிய பிரச்சினையில் இருதரப்பிலும் உள்ள ஏழை மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதை விவாதிப்பதில் இரு நாடுகளும் அரசியல் உறுதியை வெளிப்படுத்தியுள்ளன. மிக முக்கியமான முதல் அடியை நாம் எடுத்துவைத்திருக்கிறோம். இந்தியாவும் அதீத மீன் பிடிப்பின் அபாயங்களை உணர்ந் துள்ளது என்றே நம்புகிறேன். இருதரப்புக்கும் போதுமான நன்மைகள் கிடைக்கும் வகையில் தீர்வு இருக்க வேண்டும். அதற்காக, மீன்வளத் துறைகளின் கூட்டுச் செயல்பாட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஜனவரி 2 அன்று இலங்கையில் இக்குழு கூடுகிறது. அதன் பிறகு, இது இரண்டு நாடுகளின் அரசுத் துறைச் செயலர்களின் தலைமையில் இயங்கும். குறுகிய காலத்தில் நாம் பொருத்தமான ஓர் உடன்பாட்டை நமக்காக உருவாக்கிக்கொள்வோம் என்று நம்புகிறேன்.

ஜெனிவாவில் நடைபெற்ற ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் நீங்கள் ஒப்புக்கொண்டபடி, போருக்குப் பிந்தைய விவகாரங்களைப் பொறுப் புணர்வோடு அணுகிவருகிறீர்கள். தேசிய ஒருமைப் பாட்டுக்கும் நல்லிணக்கத்துக்குமான மையத்தை யும் அமைத்திருக்கிறீர்கள். காணாமல் போனவர் களுக்கான மையம் அமைக்கவும் முயன்று வருகிறீர்கள். ஆனால், பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டநகல் மீது பயமும் கவலையும் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆட்சியின்போது செய்யப்பட்ட பழைய பாதுகாப்பு ஏற்பாடுகளை இனிமேல்தான் கலைப்பீர்களா?

வெளிப்படையாகச் சொல்கிறேன். கடந்த காலம் பற்றிய பயங்கரமான நினைவுகள் இன்னும் எங்களிடம் உள்ளன. பயங்கரவாதம் தொடர்பான பழைய சட்டத்தை மாற்றி, சர்வதேச அளவில் நாடுகள் கடைப்பிடிக்கிற சட்டங்களைப் போல் பொருத்தமான வேறு ஒரு சட்டத்தைக் கொண்டுவரும் முயற்சி எப்போதும்போல நடந்துவருகிறது. அதனால்தான், இலங்கை அதிபரும் பிரதமரும் ஒரு குழுவை அமைத்துள்ளனர். எனது வெளியுறவுத் துறையிலிருந்தும் சில உறுப்பினர்கள் அதில் உண்டு. ஒரு வரைவு மசோதாவை அது தயாரிக்கும். மேல்நிலைக் குழுவுக்கு அனுப்பப்படும். எனது அமைச்சகமும் இந்த சட்டத்துக்கான கருத்துகளை அனுப்பும். இறுதி வடிவத்தில் இந்தச் சட்டம், சர்வதேச அளவில் பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் இன்றுள்ள எல்லாப் போக்குகளையும் உள்வாங்கியதாக வெளியாகும் என்று நம்புகிறேன். நாட்டில் ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்ற ஒரு தெளிவான தீர்ப்பை மக்கள் எங்களுக்குத் தந்துள்ளார்கள். அதை உறுதிப்படுத்த வேண்டியது எமது கடமை.

பயங்கரவாத விசாரணைப் பிரிவு இன்னும் இருக்கிறது, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுகள் தொடர்கின்றன. மாறாமல் தொடர்கிற இவற்றில் இனிமேல் மாற்றம் வரும் என்கிறீர்களா?

பத்தாண்டு காலம் ஒரு எதேச்சதிகார அரசாங்கம் நடைபெற்றுள்ளது. அந்தக் காலப் பகுதியில் உருவான மனப்போக்கை மாற்றுவது அவ்வளவு எளிதல்ல. அரசாங்கங்கள் மாறும். அரசு இயந்திரமும் அதிகார வர்க்கமும் அவ்வளவு சீக்கிரம் மாறாது. படிப்படியாகவே மாற்றம் நடக்கும். மாற்றம் ஏற்கெனவே ஆரம்பித்துவிட்டது.

சீனா, கடன்களுக்கு அதிகமான வட்டியை இலங்கை யிடம் வசூலிப்பதாக உங்கள் நிதியமைச்சர் விமர் சித்துள்ளார். அதன் மீது இலங்கைக்கான சீனத் தூதர் தெரிவித்துள்ள கருத்துகளைச் சீனாவின் நிதியமைச்சகம் ஆதரித்துள்ளது என்கின்றன ஊடகங்கள். அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இது பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. சீனாவும் எங்களது நட்பு நாடு. நூற்றாண்டுகளாக எங்களோடு பாரம்பரியத் தொடர்புகளைக் கொண்டுள்ள பக்கத்து நாடு. இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் முக்கியமான பங்கு வகிக்கும் நாடு. சீனத் தூதர் எனது நல்ல நண்பரும்கூட.

சமீபத்தில் நான் அவரைப் பார்த்தேன். அரசியல் தலைவர்கள் விடுகிற அறிக்கைகளில் ஏதாவது பிரச்சினைகள் வரும்போது, வெளியுறவுத் துறையின் மூலமாக அதைச் சரிசெய்துகொள்ள முயல வேண்டும் என்பதை அவரிடம் சொன்னேன்.

பிரதமர் ரணில் விக்கிரம சிங்கே தாராளமய வணிகத்தை ஆதரிக்கிறார். அமெரிக்க அதிபராகத் தேர்வுசெய்யப்பட்டுள்ள ட்ரம்ப், சர்வதேச வணிகத்துக்கு உள்நாட்டுப் பாதுகாப்புகள் தரும் கொள்கையைப் பேசுகிறார். 2015-ல் உங்கள் அரசு பதவியேற்றபோது அமெரிக்க - இலங்கை உறவு மோசமடைந்தது. தற்போது உறவுகள் பலமடைந்துள்ளன. உங்களது தொழில் உறவுகளை அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் எங்கு கொண்டுசெல்லும் என்று நினைக்கிறீர்கள்?

ஆரம்பத்திலேயே அழுத்தமாகச் சொல்லி விடுகிறேன். இலங்கைக்கு அமெரிக்காவோடு மிகவும் நெருக்கமான உறவு இருக்கிறது. 1948-ல் இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த காலகட்டத்திலிருந்தே இது இருக்கிறது. மற்றபடி, பிரச்சினையான ஒரு காலகட்டம் இருக்கத்தான் செய்தது… உங்களுக்கும் அது தெரிந்ததுதான். அது ராஜபக்ச ஆட்சிக் காலம். இலங்கை தன்னைத் தானே தனிமைப்படுத்திக்கொண்ட காலகட்டம் என்று நான் அதைச் சொல்வேன். அமெரிக்காவோடு மட்டுமல்ல, எங்களோடு ரொம்ப நெருக்கமாக இருந்த வேறு பல நாடுகளோடும்தான். 2015-க்குப் பிறகு, நாங்கள் திரும்பவும் உலகத்தோடு நெருக்கமாகியிருக்கிறோம். கடந்த 20 மாதங்களில் இலங்கை - அமெரிக்க உறவு முன்னெப்போதும் இல்லாத உயர் நிலைக்குச் சென்றிருக்கிறது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி இலங்கை வந்தார். அமெரிக்காவின் உயர்நிலைத் தலைவர்கள் கடந்த 40 ஆண்டுகளில் வந்ததில்லை. ஐநாவின் நிரந்தரத் தூதர் சமந்தா பவர் எங்களின் சிறந்த நண்பர். மூத்த அமெரிக்க அரசு அதிகாரிகள் நிஷா பிஸ்வால், டாம் மெலினோஸ்கி ஆகியோர் அடிக்கடி வந்துபோகின்றனர்.

ஒரு விஷயத்தை நான் இப்போது சொல்வது பரவாயில்லை என்று நினைக்கிறேன். ரொம்பப் பேருக்கு அது தெரியாது. கடந்த மே மாதத்தில் இலங்கைக்கு வருவதற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா தயாராக இருந்தார். அது நடந்திருந்தால், இலங்கைக்கு ஒரு அமெரிக்க அதிபர் வந்த நிகழ்வாக அது இருந்திருக்கும். ஆனால், அது புத்த பெளர்ணமி கொண்டாட்டங்களின் காலம். ஒரு வாரம் நடக்கும். அந்த நேரத்தில் அமெரிக்க அதிபர் வருவது சரியாக இருக்காது. அதனால், நாங்கள் அற்புதமான அந்த வாய்ப்பை இழந்தோம். சர்வதேசத் தலைவர்கள் பங்கேற்கும் எந்தவொரு கூட்டத்திலும் அமெரிக்க அதிபர் ஒபாமா, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இருக்கிற இடத்துக்கு வந்து 'எப்படி இருக்கிறீர்கள்' என்று விசாரிப்பார். அந்த அளவுக்கு நெருக்கத்தை ஒபாமா ஏற்படுத்தியுள்ளார். இரு நாடுகளின் உறவு எவ்வளவு முன்னேறியிருக்கிறது என்பதை இது காட்டும். ட்ரம்ப் காலத்திலும் இது தொடரும் என்றே நம்புகிறேன்.

© 'தி இந்து' ஆங்கிலம், தமிழில்:த.நீதிராஜன்

SCROLL FOR NEXT