சிறப்புக் கட்டுரைகள்

சுதந்திரச் சுடர்கள் | இலக்கியம்: இந்தியாவின் நவீன கவி

விபின்

இந்தியாவின் தேசியக் கவியாக இன்றைக்கும் திகழ்பவர் ரவீந்திரநாத் தாகூர். இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்ற முதல் இந்தியர் அவர்தான். ‘கீதாஞ்சலி’ கவிதைத் தொகுப்புக்காக 1913 இல் நோபல் அவருக்கு அளிக்கப்பட்டது.

அவரது ‘ஜன கண மன’ பாடல் 1950, ஜனவரி 24 இல் நாட்டுப்பண்ணாக இந்திய அரசால் அறிவிக்கப்பட்டது. அதுபோல் தாகூரின் ‘அமர் சோனார் பங்க்ளா’ என்னும் பாடல் 1971இல் வங்கதேசத்தின் நாட்டுப்பண்ணாக அறிவிக்கப்பட்டது.

செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த அவர், கல்லூரிப் படிப்பில் ஆர்வம் இல்லாமல் இருந்தார். கல்கத்தாவில் கல்லூரிப் படிப்பை ஒரே நாளில் கைவிட்டார். இங்கிலாந்தில் சட்டப் படிப்பையும் பாதியில் நிறுத்திவிட்டார்.

இலக்கியத்திலும் மெய்யியலிலும் ஆர்வமுடன் இருந்தார். ஆங்கிலத்திலும் சம்ஸ்கிருதத்திலும் புலமை கொண்டிருந்தார். ஆனால், தன் தாய்மொழியான வங்க மொழியில்தான் தாகூர் கவிதைகளை எழுதினார். அதில் தொடக்கத்தில் அவருக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை.

அவர் எழுதிய ‘கீதாஞ்சலி’ நூலை அவரே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். மீண்டும் தாகூர் லண்டன் சென்றிருந்தபோது, தனது கீதாஞ்சலி மொழிபெயர்ப்பை அவரது நண்பரும் ஓவியருமான வில்லியம் ரோதென்ஸ்டினுக்கு அளித்துள்ளார்.

அவர் வழியாக அந்த நூல் இங்கிலாந்து இலக்கிய வட்டத்தில் பரவலாக வாசிக்கப்பட்டுக் கவனம்பெற்றது. தாகூருக்கு நோபல் பரிசு கிடைக்க இது காரணமாக அமைந்ததால் நோபல் பரிசையே ரோதென்ஸ்டினுக்குச் சமர்ப்பணம் செய்தார்.

இங்கிலாந்து மன்னர் ஐந்தாம் ஜார்ஜ் அளித்த நைட்ஹுட் பட்டத்தை ஜலியான் வாலாபாக் படுகொலைக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் திருப்பி அளித்தார். காந்தியின் கருத்துகள் மீது முரண்பாடு இருந்தாலும், அவரது போராட்டத்துக்கு ஆதரவாக நின்றிருக்கிறார்.

தமிழ்க் கவி பாரதியார், தாகூரின் கவிதைகளால் ஈர்க்கப்பட்டவர். தாகூரின் கட்டுரைகளை பாரதி தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இந்தியக் கவிதை மரபில் மேற்கின் நவீனத்தைத் தொடங்கிவைத்தவர் என தாகூர் கருதப்படுகிறார். தாகூர் நிறுவிய சாந்திநிகேதன், இன்று விஸ்வபாரதி பல்கலைக்கழகமாக மேற்கு வங்கத்தில் செயல்பட்டுவருகிறது.

SCROLL FOR NEXT