ஐக்கிய நாடுகள் அவையின் துணை அமைப்புகளில் ஒன்றான யுனெஸ்கோ கலாச்சார நகரங்களில் ஒன்றாக சென்னையை அறிவித்ததில் டிசம்பர் மாதத்தில் நடைபெறும் இசை விழாக்களுக்குப் பெரும் பங்கு உண்டு.
குறிப்பிட்ட ஒரு மாதத்தில் ஆயிரக்கணக்கான இசை நிகழ்ச்சிகள் நடைபெறுவது, உலகில் எங்கும் நடக்காத அரிய வைபவம். இதைக் காண்பதற்கென்றே உலகின் பல பகுதிகளிலிருந்தும் ரசிகர்கள் வந்துசெல்கிறார்கள்.
காலனியாதிக்கக் காலத்தில் ஆங்கிலேயர் களின் பொழுதுபோக்கிற்காக ‘பூனா கயான் சமாஜ்’ பல இசை நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கின்றது. 1883 ஆகஸ்ட் 18இல் அன்றைய மதராஸ் ஜார்ஜ்டவுன் பகுதியிலிருந்த பச்சையப்பர் பள்ளியில்தான் பூனா கயான் சமாஜின் கிளை தொடங்கப்பட்டது.
இதுதான் மதராஸின் முதல் சபா. 1887இல் விக்டோரியா மகாராணியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் நினைவாக `மதராஸ் ஜூபிளி கயான் சமாஜ்' என்று இதன் பெயர் மாற்றப்பட்டது. இந்த மன்றத்தின் சார்பாக இரண்டு இசைப் பள்ளிகளின் மூலம் மாணவர்களுக்கு இசையும் கற்றுத் தரப்பட்டது.
இந்த அமைப்பு தொடங்கப்பட்ட 1883 முதல் 1888 வரையிலான நிகழ்வுகள் தொகுக்கப்பட்டு புத்தகமாக்கப்பட்டுள்ளது. அதே நேரம் இந்த அமைப்பு எதனால் வீழ்ச்சியடைந்தது என்னும் விவரம் ஆவணப்படுத்தப்படவில்லை.
மற்றொருபுறம் கடந்த 94 ஆண்டுகளாக மார்கழி இசை விழாவை தங்கு தடையின்றி நடத்திவரும் பெருமையைப் பெற்றது மியூசிக் அகாடமி. இரண்டாம் உலகப் போர் நடந்த காலத்திலும்கூட இங்கே நிகழ்ச்சிகள் நடைபெற்றிருக்கின்றன.
ஆழிப் பேரலைத் தாக்குதலுக்கு அடுத்த ஆண்டு, புகழ்பெற்ற இசை மேதை ஸுபின் மேத்தா சென்னைக்கு முதன்முறையாக வந்திருந்தார். அவரோடு புகழ்பெற்ற ஜெர்மன் சிம்பொனி இசைக் கலைஞர்களின் குழுவும் வந்திருந்தது.
சுனாமியால் உயிர்களைப் பறிகொடுத்த குடும்பங்களுக்கும் பாதிப்படைந்தவர்களுக்கும் நினைவஞ்சலியாக ஓர் இசை நிகழ்ச்சியை மியூசிக் அகாடமியில் ஸுபின் மேத்தா நடத்தினார். அதற்காக அன்றைய நாளில் அகாடமியில் நடக்கவிருந்த நிகழ்ச்சிகளை ஒத்திவைத்து ஸுபின் மேத்தாவை வரவேற்றிருக்கிறது மியூசிக் அகாடமி.