சிறப்புக் கட்டுரைகள்

சுதந்திரச் சுடர்கள் | சமூகம்: குடும்பக் கட்டுப்பாட்டில் தமிழகம் முதலிடம்

ப்ரதிமா

குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தைத் தேசிய அளவில் செயல்படுத்திய முதல் நாடு இந்தியா. 1952இல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதை முதன்மை நோக்கமாகக் கொண்டிருந்தது.

நாளடைவில் இனப்பெருக்க நலன், தாய் - சேய் நலன், பிரசவ கால மரணங்களைக் குறைப்பது போன்றவற்றிலும் அக்கறை செலுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டது.

குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்துக்கு ஆரம்பத்தில் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு இல்லை. ஆனால், காலப்போக்கில் ‘சிறு குடும்பம், சீரான வாழ்வு’ என்பதை மக்கள் ஏற்றுக்கொண்டனர் என்பதைக் குடும்ப நலக் கணக்கெடுப்புகள் உணர்த்தின.

மக்கள்தொகைப் பெருக்கத்துக்குக் காரணமானவையாக குழந்தைத் திருமணம், இரண்டு குழந்தைகளுக்கு இடையில் போதிய இடைவெளி இல்லாமல் இருப்பது, கருத்தடை சாதனங்களைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாமை உள்ளிட்ட விஷயங்கள் கண்டறியப்பட்டு, அவற்றைச் சீராக்கத் தேசிய அளவிலான கொள்கைகள் வகுக்கப்பட்டன.

திருமணமான பெண்கள் மத்தியில் கருத்தடை குறித்த விழிப்புணர்வு அதிகரித்தது. ‘நாம் இருவர், நமக்கு இருவர்’ என்கிற கருத்தை வலியுறுத்தி பல்வேறு தளங்களில் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் அரசால் முன்னெடுக்கப்பட்டன.

நீடித்த கருத்தடை, தற்காலிகக் கருத்தடை ஆகிய இரண்டு வடிவங்களில் கருத்தடை சாதனங்களும் முறைகளும் மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டன.

பெண்கள் பயன்படுத்தக்கூடிய கருத்தடை மாத்திரைகளும் ஆண்களுக்கான ஆணுறைகளும் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இலவசமாக வழங்கப்படுகின்றன. உடலுக்குள் செலுத்தும் வகையிலான ‘காப்பர் டி’, ஐந்து முதல் பத்து ஆண்டுகளுக்கான கருத்தடைக்கு உதவுகிறது.

நிரந்தர அல்லது நீடித்த கருத்தடைக்கான அறுவை சிகிச்சை முறை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு மக்கள்தொகைப் பெருக்கம் வெகுவாகக் குறைந்ததுடன் பெண்களின் பேறுகால நலன் மேம்பட்டது. கருத்தடை அறுவைசிகிச்சை பெண்ணைவிட ஆணுக்குத்தான் எளிது.

ஆனால், அதற்கு ஆண்கள் தயங்குவதால் பெண்களே கருத்தடை அறுவைசிகிச்சைக்கு அதிகமாக உட்படுத்தப்படுகிறார்கள் என்கிறது தேசியக் குடும்ப நலக் கணக்கெடுப்பு. குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டங்களில் இந்திய அளவில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. இங்கிருக்கும் சிறந்த மருத்துவக் கட்டமைப்புதான் அதற்குக் காரணம்.

SCROLL FOR NEXT