சிறப்புக் கட்டுரைகள்

என்னாச்சு ஆங்சான் சூச்சி?

செய்திப்பிரிவு

மியான்மர் நாட்டு (பர்மா) மக்களிடம் மிகப் பிரபலமாக விளங்கிய எதிர்க் கட்சித் தலைவர் ஆங் சான் சூச்சி சமீப காலமாகத் தன்னுடைய நாட்டு மக்களில் சிலரிடையே செல்வாக்கை இழந்துவருகிறார். வெவ்வேறு இன மக்களிடையே ஏற்பட்டுவரும் மோதல் கள்குறித்தும் வகுப்புக் கலவரங்கள்குறித்தும் அவர் வாய் திறக்க மறுப்பது பலருக்கும் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.

அமைதிக்கான நோபல் பரிசுபெற்ற சர்வதேசத் தலைவரான சூச்சி, ஏதோ சில காரணங்களுக்காக உள்நாட்டிலேயே சிலருக்கு ஆதரவாகக் குரல்கொடுக்காமலும் கருத்து தெரிவிக்காமலும் மௌனம் சாதிக்கிறார்.

ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்ற 1948 முதல் மியான்மரில் இன மோதல்கள் நடைபெற்றுவருகின்றன. தீவிரவாத பௌத்தர்கள், ரோங்கியா முஸ்லிம்களை நேரடியாகவே தாக்குகின்றனர். எதிர் நடவடிக்கையில் இறங்கும் முஸ்லிம்களை ராணுவ ஆட்சியாளர்கள் ஒடுக்குகின்றனர். மியான்மரின் மேற்குப் பகுதியில் வறுமை மிகுந்த ரக்கின் மாநிலத்தில்தான் சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட ரோங்கியா முஸ்லிம்கள் வசிக்கின்றனர்.

இவர்கள் வங்க தேசத்திலிருந்து வந்தவர்கள் என்பதால், மியான்மர் மக்களாக ஏற்க முடியாது என்று அரசும் பௌத்தர்களும் கூறுகின்றனர். இவர்களில் சுமார் 1.40 லட்சம் பேர் அரசு ஏற்படுத்தித் தந்த அகதி முகாம்களில் வசிக்கின்றனர். சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பில் இவர்களுக்குத் தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்படுகிறது. ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குச் செல்லவும் இவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. அவர்களுடைய திருமணம், மகப்பேறுகூட அரசால் கட்டுப்படுத்தப்படுகிறது.

ஆங் சான் சூச்சி இது குறித்தெல்லாம் கண்டனமோ கருத்தோ தெரிவிப்பதில்லை. இது ஏன் என்று கேட்டபோது, இருவர் செய்ததும் என்னவென்று தெரியாதபோது நான் எப்படிக் கருத்து சொல்வது என்கிறார் சூச்சி. அத்துடன், தான் நடுநிலையுடன் இருக்க விரும்புவதாகவும் யாருக்காவது ஆதரவாகக் கருத்து தெரிவித்தால் தன்னுடைய நடுநிலைத் தன்மை போய்விடும் என்றும் கூறியிருக்கிறார்.

எவ்வளவுதான் சொன்னாலும் மியான்மரில் ஜனநாயகம் ஏற்பட வேண்டுமென்றால் சூச்சிதான் ஒரே நம்பிக்கை என்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்!

பர்மா டைம்ஸ் - மியான்மர் பத்திரிக்கை

SCROLL FOR NEXT