இந்தியா முழுவதும் இசையாக வியாபித்திருப்பவர் லதா மங்கேஷ்கர். இந்தியாவின் மிக உயரிய பாரத ரத்னா விருதைப் பெற்ற இரண்டாவது பாடகர் இவர்.
அவருடைய தந்தை பண்டிட் தீனாநாத் இசைக் கலைஞர், நாடக நடிகர். `மெஹல்' என்னும் திரைப்படத்தில் ஹேம்சந்த் பிரகாஷ் இசையில் `ஆயேகா ஆனேவாலா' என்னும் பாடலைப் பாடி தன்னுடைய இசை வாழ்க்கையை லதா தொடங்கினார். அவருடைய குரலில் 1960இல் வெளியான `மொகல் இ ஆஸம்' படத்தின் `பியார் கியா தோ தர்னா கியா' கிளாஸிக் ரகம். இந்திய மொழிகள், அயல் நாட்டு மொழிகள் உள்ளிட்ட 36 மொழிகளில் லதா மங்கேஷ்கரின் குரலை உலகின் பல நிலப்பரப்புகளில் வாழ்ந்த மக்களும் கேட்டு மகிழ்ந்திருக்கின்றனர்.
லதா மங்கேஷ்கருக்கும் தமிழ்நாட்டுக்குமான தொடர்பு நெடிய பாரம்பரியம் கொண்டது. நடிகர் திலகம் சிவாஜி கணேசனை தன்னுடைய அண்ணனாகவே மதித்தவர் லதா மங்கேஷ்கர். சிவாஜியும் தன்னுடைய உடன்பிறவா சகோதரியாகவே லதா மங்கேஷ்கரை மதித்தார்.
ஹோட்டல்களில் தங்குவதற்கு லதா விரும்பமாட்டார் என்பதற்காக, அவர் சென்னைக்கு வந்தால் தங்குவதற்கு லதாவுக்காக தன்னுடைய அன்னை இல்லம் வளாகத்திற்குள்ளேயே ஒரு சிறிய பங்களாவை சிவாஜி கட்டியிருந்தார். பின்னணிப் பாடல்களைப் பாடு வதற்காக சென்னைக்கு லதா வரும் போதெல்லாம் அந்தப் பங்களாவில் தங்குவதையே லதா வழக்கமாகக் கொண்டிருந்தார். அப்படி நிஜமான ‘பாசமலர்’களாக சிவாஜியும் லதாவும் விளங்கினார்கள்!
இளையராஜாவின் இசையில் பிரபு நாயகனாக நடித்த `ஆனந்த்’ திரைப்படத்தில் லதா பாடிய `ஆராரோ ஆராரோ’ என்னும் காதல் தாலாட்டை கேட்டபிறகுதான், லதாவின் குரல் இனிமையைத் தமிழ் மட்டுமே அறிந்த செவிகள் கண்டுகொண்டன. இந்த வரிசையில் `என் ஜீவன் பாடுது’ திரைப்படத்துக்காக இளையராஜா எழுதி இசையமைத்து லதா பாடி யிருக்கும் `எங்கிருந்தோ அழைக்கும் உன் கீதம்’ முக்கியமானது.
சி. ராமச்சந்திரா இசையில் பிரதீப்குமார் எழுதிய `யே மேரே வதன் கே லோகோ' என்னும் தேசபக்திப் பாடலை 1962இல் லதா மங்கேஷ்கர் பாடியதைக் கேட்டுக்கொண்டிருந்த பிரதமர் நேரு கண்கலங்கினார். இந்தியா, சீனா இடையிலான போரில் இந்திய மண்ணைக் காக்க வீரமரணம் எய்திய வீரர்களை நினைவுகூரும் வகையில் இந்தப் பாடல் அமைந்திருந்தது. இதை ஏறக்குறைய 40 ஆண்டுகள் வரை தன்னுடைய இசை நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலும் லதா மங்கேஷ்கர் தவறாமல் பாடிவந்தார்.
- வா.ரவிக்குமார்