விஸ்வேஸ்வரய்யா 
சிறப்புக் கட்டுரைகள்

சுதந்திரச் சுடர்கள் | ஆளுமை: நவீன இந்தியாவைக் கட்டிய பொறியாளர்!

செய்திப்பிரிவு

இந்தியாவில் ‘பொறியாளர்கள் தினம்' மோக்‌ஷகுண்டம் விஸ்வேஸ்வரய்யா பிறந்தநாளில் கொண்டாடப்படுகிறது. பொறியாளராகவும் அறிஞராகவும் அரசியல்வாதியாகவும் அவர் தனி முத்திரையைப் பதித்திருக்கிறார்.

மைசூரில், படித்த நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். கட்டிடப் பொறியியல் படிப்பை முடித்து, பொதுப்பணித் துறையில் வேலைக்குச் சேர்ந்தார். இந்திய நீர்ப்பாசன ஆணையத்துக்கு அழைக்கப்பட்டு, சிக்கலான நீர்ப்பாசனத் திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தினார். விவசாயிகளுக்குப் பாசன நீர் வழங்கவும் தண்ணீர் வீணாகாமல் இருக்கவும் தடுப்பணைகளை அமைத்தார்.

தானியங்கி வெள்ள மதகை உருவாக்கி, அதற்குக் காப்புரிமையும் பெற்றார். 1903இல் புனேவுக்கு அருகே உள்ள கடக்வசாலா நீர்த்தேக்கத்தில் அவர் வடிவமைத்த வெள்ள மதகு நிறுவப்பட்டது. அதன் வெற்றியைத் தொடர்ந்து இந்தியாவின் பல்வேறு நீர்த்தேக்கங்களிலும் வெள்ள மதகுகள் அமைக்கப்பட்டன.

மைசூரின் தலைமைப் பொறியாளராக 1909இல் நியமிக்கப்பட்டார். ஹைதராபாத்தை வெள்ளத்திலிருந்து காப்பாற்றுவதற்குத் தடுப்பு முறையை அமைத்ததால், மக்களிடம் இவருடைய செல்வாக்கு அதிகரித்தது.

மைசூர் அரசின் திவானாக 1912இல் நியமிக்கப்பட்டார். பொருளாதார, சமூக மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு தொழில் வளர்ச்சிக்குப் பாடுபட்டார். காவிரி ஆற்றின் குறுக்கே கிருஷ்ணராஜ சாகர் அணையைக் கட்டவும், மைசூருக்கு அருகில் உள்ள சிவசமுத்திரத்தில் நீர்மின் உற்பத்தி ஆலை அமைவதற்கும் காரணமாக இருந்தார். சந்தன எண்ணெய் ஆலை, பத்ராவதி எஃகு ஆலை, சோப்பு ஆலை, உலோகத் தொழிற்சாலை, தோல் பதனிடும் தொழிற்சாலை, மைசூர் பல்கலைக்கழகம், பெங்களூரு பாலிடெக்னிக் உள்பட இன்னும் பலவற்றை அமைத்தார். இதன் மூலம் சிறந்த பொறியாளர், சிறந்த நிர்வாகியாகப் பெயர்பெற்றார்.

பிஹாரில் கங்கை நதி மீது கட்டப்பட்ட மோகமா பாலத்துக்கான தொழில்நுட்ப ஆலோசனைகளை 90 வயதிலும் வழங்கினார். 101 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்த விஸ்வேஸ்வரய்யாவின் புகழை இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களும் அணைகளும் தொழிற்சாலைகளும் சொல்லிக்கொண்டிருக்கின்றன!

- ஸ்நேகா

SCROLL FOR NEXT