சிறப்புக் கட்டுரைகள்

சுதந்திரச் சுடர்கள் | அறிவியல்: விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியர்

முகமது ஹுசைன்

சோவியத் ஒன்றியத்தின் யூரி ககாரின் 1961இல் விண்வெளியை அடைந்த முதல் மனிதர் என்னும் பெருமையைப் பெற்றார். இது நடந்து 23 ஆண்டுகள் கழித்து, விண்வெளிக்கு மனிதரை அனுப்பும் முயற்சியில் இந்தியா வெற்றிபெற்றது. இந்தியாவின் தடத்தை விண்வெளியில் பதித்தவர் ராகேஷ் சர்மா.

சோவியத் ஒன்றியத்தின் உதவியுடன் 1984 ஏப்ரல் 2 அன்று அவர் விண்வெளிப் பயணம் மேற்கொண்டார். விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியர் எனும் பெருமைக்குச் சொந்தக்காரராகத் திகழ்கிறார் ராகேஷ் சர்மா. அதற்குப் பிறகு இப்போதுவரை இந்தியக் குடிநபர் எவரும் விண்வெளிக்குச் செல்லவில்லை.

ராகேஷ் சர்மா சோயுஸ் டி-11 விண்கலத்தின் மூலம் விண்வெளிக்குச் சென்றபோது அவருடைய வயது 35. விண்வெளியிலிருந்த சால்யுட் - 7 விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் தங்கிப் புவி அறிவியல், உயிரி மருத்துவம், உலோகவியல் ஆகியவை சார்ந்து அவர் ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். நிறப்பிரிகை கேமராவைக் கொண்டு இந்தியாவை அவர் எடுத்த ஒளிப்படங்கள் மதிப்புமிக்கவை. விண்வெளியில் 13 ஆய்வுகளை அவர் மேற்கொண்டார்.

ராகேஷ் சர்மா விண்வெளியில் 7 நாட்கள் 21 மணி 40 நிமிடங்கள் இருந்தார். விண்வெளியிலிருந்தபோது ராகேஷ் சர்மாவுடன் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி தொலைபேசியில் உரையாடியது வரலாற்றுப் புகழ்பெற்ற நிகழ்வு. ’இந்தியா எப்படிக் காட்சியளிக்கிறது’ எனப் பிரதமர் அவரிடம் கேட்டார். அதற்கு ராகேஷ் சர்மா ‘சாரே ஜஹான் சே அச்சா’ என்று பதிலுரைத்தார். உலகில் இந்தியாவே சிறந்ததாகக் காட்சியளிக்கிறது என்பது அதன் அர்த்தம்.

- ஹுசைன்

SCROLL FOR NEXT