சிறப்புக் கட்டுரைகள்

சுதந்திரச் சுடர்கள் | காலம் கடந்த 10 விநாடி ஆச்சரியங்கள்

விபின்

இந்திய விளம்பரத் துறை ரூ. 70 ஆயிரம் கோடி மதிப்புள்ள தாக வளர்ச்சி கண்டுள்ளது. 18ஆம் நூற்றாண்டில் சிறிய அளவில் தொடங்கிய இந்திய விளம்பரத் துறை இன்று அடைந்துள்ள வளர்ச்சி.

அபரிமிதமானது. ஆங்கிலேயரான ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி, ‘ஹிக்கி’ஸ் பெங்கால் கெசட்’ என்னும் பெயரில் தொடங்கியதுதான் இந்தியாவின் முதல் செய்தித்தாள்.

அது முதல் அச்சு விளம்பரத்துக்கும் தொடக்க மானது. சுதந்திர இந்தியாவில் விளம்பரத் துறை பல கிளைகள் விரித்து வளர்ந்துள்ளது. பல விளம்பரங்கள், காலத்தின் அடையாளமாக இன்றும் மக்களின் மனத்தில் நிற்கின்றன. அப்படிப்பட்ட சில விளம்பரங்களைப் பற்றிய தொகுப்பு:

ஃபெவிகால், ஃபெவிகுவிக்

இந்திய விளம்பரத் துறை பிரபலமான பியூஷ் பாண்டேயின் மற்றுமொரு சிறந்த விளம்பரம் இது. சமையல் கலைஞர் ஒருவர் முட்டையை உடைக்க முயல, சுத்தியலால்கூட உடைக்க முடியாத அளவுக்கு முட்டை கடினமாக இருக்கிறது. அந்த முட்டை இட்ட கோழியை நோக்கிக் காட்சி திரும்பும்போது, அது ஃபெவிகால் டப்பாவில் தானியங்களைக் கொத்திக்கொண்டிருக்கிறது. அதேபோல் ஆற்றில் ஒருவர் சகல நவீன வசதிகளுடன் மீன்பிடிப்பார், ஆனால், ஊர்க்காரர் போல வரும் ஒருவர் குச்சியில் நான்கு துளி ஃபெவிகால் விட்டு தண்ணீரில் வைப்பார், உடனே மீன்கள் சிக்கும்.

சர்ஃபின் லலிதாஜி

இந்திய விளம்பரக் கதாபாத்திரங்களில் சுவாரசிய மானது லலிதாஜி. நடுத்தரக் குடும்பத் தலைவியான லலிதாஜி, எல்லாவற்றையும் பேரம் பேசி வாங்கக்கூடியவர். ஆனால், ‘சர்ஃப்' விஷயத்தில் மட்டும் அவர் அப்படி இருப்பதில்லை.

விலை அதிகம் என்றாலும் தரத்துக்காக அவர் அதை வாங்குவதையே கெளரவமாகக் கருதுகிறார். இந்த விளம்பரம், விலை குறைந்த நிர்மாவுக்கு எதிராக எடுக்கப்பட்டது என்ற கருத்தும் உண்டு. தொலைக்காட்சி நடிகை கவிதா சவுத்ரி இதில் லலிதாஜியாக நடித்திருந்தார். அலீக் பதம்சீ இதை உருவாக்கினார்.

அமுல் சிறுமி

குஜராத் பால் கூட்டுறவுச் சங்கமான அமுல் நிறுவனத்தின் அன்றாட விளம்பரங்கள் ருசிகரமானவை. சுதந்திரத்துக்குப் பிறகு இந்திய பால் உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு முன்னெடுக்கப்பட்ட வெண்மைப் புரட்சியின் விளைவாக உருவானது இந்நிறுவனம். வெண்மைப் புரட்சியின் தந்தையான வர்கீஸ் குரியன் இதன் நிறுவனர். அமுல் விளம்பரப் பிரச்சாரத்தின் அவசியத்தை அவர் உணர்ந்திருந்தார்.

அந்தப் பொறுப்பு, மும்பையைச் சேர்ந்த சில்வஸ்டர் டா குன்ஹா என்னும் விளம்பர நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. வடிவமைப்பாளர் யூஸ்டேஸ் பெர்னாண்டஸ் அமுல் சிறுமியை உருவாக்கினார். உச்சிக் குடுமி இட்ட அந்தச் சுட்டிச் சிறுமிதான் இன்றைக்கும் அமுல் என்றால் நம் மனக்கண்ணில் தோன்றுகிறார்.

ஹமாரா பஜாஜ்

இந்தியத் தயாரிப்புகளில் புகழ்பெற்ற இருசக்கர வாகனம் பஜாஜின் சேட்டக். வெளிநாட்டு நிறுவனங்களுக்குப் போட்டியாக இந்தியத் தயாரிப்பை முன்மொழியும் நோக்கில் ‘ஹமாரா பஜாஜ்’ (நமது பஜாஜ்) என்னும் வாசகத்துடன் இந்த விளம்பரம் தயாரிக்கப்பட்டது. விளம்பரப் பிரச்சாரத்துக்கு இந்தியத் தேசியத்தை இது பயன்படுத்தியிருக்கும். புகழ்பெற்ற இந்த விளம்பரப் பாடலை இசையமைப்பாளர் லூயி பேங்க்ஸ் உருவாக்கினார். ஜெய்க்ருத் ராவத் பாடலை எழுதியுள்ளார். சுமந்த்ரா கோஷல் இதை இயக்கினார்.

லிரில் அழகி

எழுபது, எண்பதுகளின் தொலைக்காட்சி விளம்பரங்களில் மறக்க முடியாத ஒன்று, லிரில். நடுத்தர வர்க்கத்துப் பெண் வீட்டுக் கடமைகளுக்குள் அடைபட்டுக் கிடந்த காலகட்டத்தில், அதற்கு நேர்மாறாக, ஒரு காட்டருவியில் உல்லாசமாகக் குளிக்கும் பெண்ணை இந்த விளம்பரம் காட்சிப்படுத்தியிருந்தது.

இதில் நடித்த கரேன் லூனல், ஒரே விளம்பரத்தில் இந்திய அளவில் புகழ்பெற்றார். ‘லிரில் பெண்’ (liril girl) என்பது அவரது அடையாளமானது. பிரபல இந்தி சினிமா இசையமைப்பாளர் வன்ராஜ் பாட்டியாவின் பின்னணி இசை, கேட்பவர்களைக் காலம் கடந்து பயணிக்க வைக்கும். பிரபல விளம்பர நிறுவனமான லிண்டாஸ் முதன்மைச் செயல் அதிகாரி அலீக் பதம்சீ தலைமையில் கைலாஷ் சுரேந்திரநாத் இயக்கத்தில் இந்த விளம்பரம் உருவானது.

ரஸ்னா

1984 இல் வெளியான ரஸ்னா விளம்பரம், ‘ஐ லவ் யூ ரஸ்னா’ என்ற மந்திரத்தை இந்தியா முழுவதும் உச்சரிக்க வைத்தது. கோடைக் கால பானமாகப் பட்டித் தொட்டியெல்லாம் அது மாறியதற்கு இந்த விளம்பரமும் காரணமாக இருந்தது. 1976இல் ரஸ்னா அச்சு விளம்பரம் வந்தாலும், இந்தத் தொலைக்காட்சி விளம்பரம்தான் இன்றும் அடையாளமாக இருக்கிறது.

இதில் தோன்றிய குழந்தை நட்சத்திரம் அங்கிதா, பின்னாளில் நடிகையானார். தமிழில் ‘லண்டன்’ படத்தில் பிரசாந்துடன் இணைந்து நடித்துள்ளார். இந்த விளம்பரத்தை இயக்குநர் விஜய் வீர்மல் இயக்கியிருந்தார்.

கேட்பரி நடனம்

கிரிக்கெட் மைதானத்துக்குள் நடனம் ஆடும் கேட்பரி பெண் இந்திய விளம்பரங்களின் கவனம் கொள்ளத்தக்கக் கதாபாத்திரம். கேட்பரி சாக்லேட்டைத் தின்றுகொண்டே கிரிக்கெட் பார்க்கும் தேவதை. சிக்ஸ் ஷாட்டைக் கொண்டாட மைதானத்துக்குள் இறங்கி ஆட்டம் போடுவது போன்ற பாவனை இன்றும் வசீகரமாக இருக்கிறது. ஷிமோனா ராஷி இதில் நடித்திருந்தார். பியூஷ் பாண்டே தலைமையிலான குழு இதை உருவாக்கியது.

ஹச் டாக்

வெளிநாட்டு நாய் இனங்களில் ஒன்றான ‘பக் நாய்', இந்த விளம்பரத் துக்குப் பிறகு ‘ஹச் நாய்' ஆகி விட்டது. தொலைத் தொடர்பு நிறுவனமான ஹச் எஸ்ஸார் நிறுவனத்தின் இந்த விளம்பரம் மூலம், இந்த நாய்க் குட்டி மிகவும் பிரபலமானது. கைபேசியின் அலைவரிசை கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில் ‘எங்கே போனாலும் உங்களைப் பின்தொடர்வேன்’ என்ற வாசகம் இந்த விளம்பரத்துக்காக உருவாக்கப்பட்டது. விளம்பரத்தில் தோன்றும் நாய்க்குட்டி குழந்தைகள் எங்குச் சென்றாலும் விடாமல் பின்தொடர்ந்து சென்றுகொண்டிருக்கும்.

ஒனிடா சாத்தான்

தொலைக்காட்சி விளம்பரங்களில் ஒனிடா சாத்தானுக்குத் தனி இடம் உண்டு. இந்த விளம்பரத்தில் முதலில் சாத்தானாக நடித்தவர் டேவிட் ஒயிட்ஃபீல்டு. இந்த விளம்பரத்தை உருவாக்கியவர் கோபி குக்டே. இவரது மனத்தில் முதலில் தோன்றியது ‘அடுத்தவரின் பொறாமை, உங்களின் பெருமை’ என்ற ஒனிடாவின் வாசகம்தான். பிறகு அதன் உறுதியைச் சொல்லும் விதத்தில் சாத்தானை உருவாக்கினார். பீரங்கியால்கூடத் தகர்க்க முடியாத உறுதிகொண்டது ஒனிடா என்பதுபோல் காண்பித்திருப்பார்.

வோடஃபோன் ஸூஸூ

இந்திய விளம்பரத் துறை படைப்புரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் முன்னேறியதற்கான சான்றாக இந்த விளம்பரத்தைச் சொல்லலாம். ஜோதிடம், கிசுகிசு, கிரிக்கெட் செய்திகள் போன்ற வோடஃபோனின் புதிய சேவைகளைச் சித்தரிக்கும் விதத்தில் ரசனைமிகுந்த கற்பனையுடன் பல விளம்பரங்கள் உருவாக்கப்பட்டன. ஸூஸூ கதாபாத்திரங்களை ராஜிவ் ராவ் உருவாக்கினார். இந்தப் படத்தை பிரகாஷ் வர்மா இயக்கியிருந்தார்.

SCROLL FOR NEXT