சிறப்புக் கட்டுரைகள்

சுதந்திரச் சுடர்கள் | அறிவியல்: தாகத்தைத் தீர்க்க உதவிய தண்ணீர் பம்ப்

முகமது ஹுசைன்

இந்தியா சுதந்திரம் அடைந்து 20 ஆண்டுகள் ஆகியிருந்த நிலையில், வேகமாக வளர்ந்துவந்த மக்கள்தொகை, நகரமயமாக்கல் போன்ற காரணிகள் இந்தியாவின் நிலத்தடி நீர்மட்டத்தை வெகுவாகக் குறைத்தன.

இதன் காரணமாக 1967இல், கிணறுகள், குளங்கள், எஸ் வடிவ கைப்பிடி பம்புகள் உள்படத் தண்ணீரைப் பெறுவதற்கான இந்தியாவின் எளிய பாரம்பரிய முறைகள் பலனளிக்கத் தவறின. நகரங்களின் குளங்கள், கிணறுகள் உள்ளிட்ட நீராதாரங்களிலிருந்து தண்ணீரை எடுப்பதும் நடைமுறைப்படுத்த முடியாததாக மாறியது.

ஆயில் இன்ஜின் மூலம் இயக்கப்படும் விவசாய பம்புகள் மூலம் தண்ணீர் எடுப்பது நீர்மட்டம் குறைவதைத் துரிதப்படுத்தியது. பல நூற்றாண்டுகளாக மழை, குளம், கிணறு போன்ற மேற்பரப்பு நீர்ப்பாசனத்தை நடைமுறைப்படுத்திய இந்தியக் கலாச்சாரம், தண்ணீர் இல்லா நிலையை நோக்கிச் சென்றது.

தண்ணீரை அதிக ஆழத்தில் தேட வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில்தான், 1967இல் இந்தியா பரவலான வறட்சியை எதிர்கொண்டது. வறட்சியைச் சமாளிக்க முடியாமல் கிராமப்புற மக்கள் முகாமில் தஞ்சமடையும் நிலை ஏற்பட்டது. உதவிக்காக யுனிசெஃப் நிறுவனத்தையும், உலக சுகாதார நிறுவனத்தையும் இந்தியா அணுகியது.

இந்தியாவில் இருந்த ஆழ்துளைக் கிணறுகளையும், புழக்கத்திலிருந்த ‘எஸ்’ வடிவ கைபம்புகளையும் யுனிசெஃப் ஆய்வுசெய்தது. குறைந்த செலவில், எளிய வடிவமைப்பில், சிறிய பட்டறைகளில் தயாரிக்கக்கூடிய வகையிலான பம்புகளின் தேவையை அந்த ஆய்வின் முடிவுகள் உணர்த்தின. அந்தத் தேவையைப் பூர்த்தி செய்யும் விதமாக ‘மார்க் 2’ பம்பை யுனிசெஃப், உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து இந்தியா கண்டுபிடித்தது.

இந்த மார்க் 2 பம்ப், சோலாப்பூர் பம்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. சோலாப்பூரில் வசித்த ஸ்வீடன் நாட்டுத் தன்னார்வலரும், பொறியாளருமான ஆஸ்கர் கார்ல்சன் என்பவரால் வடிவமைக்கப்பட்ட பம்ப் அது. சுதந்திர இந்தியாவில் நிகழ்ந்த கண்டுபிடிப்புகளில் மார்க் 2 தண்ணீர் பம்புக்கு முக்கிய இடமுண்டு. இந்தியாவின் மூலை முடுக்குகளில் எல்லாம் காணப்படும் இந்த எளிய பம்ப், இந்தியாவில் உருவாக்கப்பட்ட வடிவமைப்புகளில் இன்றும் சிறந்ததாக உள்ளது.

- ஹுசைன்

SCROLL FOR NEXT