சுதந்திர இந்தியாவில் தமிழகத்தில் நடைபெற்ற இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்களும்; ‘ஆங்கிலம் ஆட்சி மொழியாகத் தொடரும்’ என்று பிரதமர் நேரு அளித்த உறுதிமொழியும் மிக முக்கியமான திருப்புமுனைகள். தமிழகத்தில் பல பத்தாண்டுகளாக இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் அழுத்தமாகப் பதிவாகியிருக்கின்றன.
1937இல் அன்றைய மதராஸ் மாகாணத்தின் முதல்வராகப் பதவியேற்ற ராஜாஜி, இந்தி மொழியைக் கட்டாயமாக்குவது குறித்துப் பேசினார். அதன் தொடர்ச்சியாக 1938 இல் பள்ளிகளில் கட்டாயமாக இந்தி கற்பிக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து பெரும் போராட்டங்கள் வெடித்தன. ஆயிரக்கணக்கானோர் சிறையில் அடைக்கப்பட்டனர். 1940இல் கட்டாய இந்தி உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.
1948இலும் இதே போன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, 1950இல் விலக்கிக்கொள்ளப்பட்டது. 1950இல் இந்தியா குடியரசு நாடாக மலர்ந்த பிறகு, ஆட்சி மொழி குறித்த விவாதங்கள் எழுந்தன. தமிழகம் உள்ளிட்ட இந்தி பேசாத மாநிலங்களில் இந்திக்கு எதிராக எழுந்த எதிர்ப்புக் காரணமாக 1965 வரை அவகாசம் அளித்து, பிறகு அது தொடர்பாக முடிவெடுக்கத் திட்டமிடப்பட்டது. ஆனால், இந்த முடிவுக்கு எதிராகத் தமிழகத்திலும் பிற மாநிலங்களிலும் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றுவந்தன.
அதன் தொடர்ச்சியாக இந்தி பேசாத மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் வகையிலும், அச்சத்தை போக்கும் வகையிலும் 1963இல் பிரதமர் ஜவாஹர்லால் நேரு ஆட்சி மொழிச் சட்டத்தைக் கொண்டுவந்தார். அதன்படி 1965க்கு பிறகும் இந்தியுடன் ஆங்கிலமும் ஆட்சி மொழியாக நீடிக்கும் நிலை ஏற்பட்டது. ஆனால், அடுத்த ஆண்டே தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்படும் என்று அன்றைய முதல்வர் பக்தவத்சலம் அறிவித்தார்.
இந்த அறிவிப்பை எதிர்த்து தமிழ்நாட்டில் போராட்டங்கள் தீவிரமடைந்தன. பல தீக்குளிப்புச் சம்பவங்கள் நடைபெற்றன. மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர். மாநிலம் கொந்தளிக்கும் நிலைக்குச் சென்றதால், 1965இல் பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரி, “நேரு அளித்த உறுதிமொழியைக் காப்பாற்றுவோம்” என்று அறிவித்தார். அதன் பிறகே போராட்டங்கள் முடிவுக்கு வந்தன.
- மிது