நாட்டார் வழக்காற்றியல் மேற்குலகில் உண்டான ஒரு துறை. வரலாற்றை ஆராயும்போது நாட்டார் வழக்காற்றியல் அம்சங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற குறிக்கோளைக் கொண்டது இத்துறை.
கல்வெட்டு போன்ற காணக்கூடிய பொருள்களின் அடிப்படையிலான வரலாறு என்பது முழுமையான வரலாறாக இருக்க முடியாது. கதைப் பாடல்கள், நாட்டார் கதைகள், நாட்டார் ஓவியங்களைப் போன்ற நாட்டார் அம்சங்களின் அடிப்படையில் வரலாற்றைத் திரும்ப ஆராய வேண்டிய அவசியத்தை இத்துறை வலியுறுத்துகிறது. தமிழக நாட்டார் வழக்காற்றியல் துறையின் முன்னோடி நா.வானமாமலை.
நாட்டாரிய எழுத்தாளரான வில்லியம் ஜான் தாமஸ், ஆங்கிலத்தில் ‘Folklore’ என்னும் சொல்லை முதன்முதலில் பயன்படுத்தியதுபோல் தமிழில் முதன்முதலில் நாட்டார் வழக்காற்றியல் என்னும் சொல்லை முன்மொழிந்தவர் நா.வானமாமலை. மக்கள் இயக்கம் சார்ந்த போராட்டங்களில் ஈடுபட்ட அனுபவத்தின் அடிப்படையில், மக்களின் வரலாற்றை அவர் தொகுப்பது பொருத்தமானதாக இருந்தது.
கட்டபொம்மன் கதைப்பாடல், கட்டபொம்மன் கூத்து, கான்சாகிபு சண்டை, முத்துப்பட்டன் கதை, ஐவர் ராசாக்கள் கதை, காத்தவராயன் கதைப்பாடல் ஆகியவற்றை அவர் தொகுத்தளித்தார். இந்தக் கதைப் பாடல்கள் மூலம் பண்பாட்டு வரலாறு மட்டுமல்ல, தமிழின் இன்றைய பொது மனநிலையான ‘நாயக வழிபா’ட்டைப் பற்றியும் நாம் புரிந்துகொள்ள முடியும். கல்வெட்டு, சிற்பம், செவ்விலக்கியம் ஆகியவற்றின் அடிப்படையிலான வரலாற்றிலிருந்து வேறுபட்ட இந்த அம்சம் இந்தத் துறையைக் கவனம் மிக்கதாக்குகிறது.
நா.வானமாமலை பண்பாட்டு, மானுடவியல் ஆய்வுகளுக்காக ‘ஆராய்ச்சி’ என்கிற காலாண்டிதழைத் தொடங்கி நடத்திவந்தார். திருநெல்வேலியில் ‘நெல்லை ஆய்வுக் குழு' என்ற பெயரில் ஒரு குழுவதைத் தொடங்கி நாட்டார் வழக்காற்றியல் ஆராய்ச்சியாளர்கள் உருவாகவும் காரணமாக இருந்தார்.
- விபின்