சிறப்புக் கட்டுரைகள்

சுதந்திரச் சுடர்கள் | மருத்துவம்: வளர்ந்துவரும் சித்த மருத்துவம்

முகமது ஹுசைன்

சித்த மருத்துவத்தின் பிறப்பிடம் தமிழ்நாடு. 1924 இல் நீதிக் கட்சி ஆட்சிக்காலத்தில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் இந்திய மருத்துவக் கல்லூரி தோற்றுவிக்கப்பட்டது. அந்தக் கல்லூரியில் சித்த மருத்துவம் கற்பிக்கப்பட்டது.

சித்த மருத்துவ முறை அரசின் அங்கீகாரத்தைப் பெற்ற ஒன்றாக மாறியதன் வரலாறு இங்கிருந்தே தொடங்குகிறது. 1965இல் காங்கிரஸ் ஆட்சியில், சித்த மருத்துவத்துக்கு எனத் தனிக் கல்லூரி பாளையங்கோட்டையில் முதன் முதலாக நிறுவப்பட்டது.

1969-70இல் பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரியிலிருந்து முதல் சித்த மருத்துவப் பட்டதாரிகள் வெளிவந்தபோது பொறியாளர்களுக்கு இணையான அங்கீகாரத்தை அவர்களுக்கு அன்றைய தி.மு.க. அரசு வழங்கியது. 1973இல் தமிழ்நாடு அரசு சித்த மருத்துவ அறிவியல் வளர்ச்சிக் குழுவைத் தோற்றுவித்தது.

தமிழ்நாடு அரசில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்த பேராசிரியர் க.அன்பழகன் சித்த மருத்துவத்தின் வளர்ச்சிக்கு முக்கியப் பங்காற்றினார். அவரது முயற்சிகளின் விளைவாகவே, சித்த மருத்துவம் ஆயுர்வேதத்தின் ஒரு பிரிவு அல்ல. அது தனி மருத்துவ முறை என்பதை மத்திய அரசு அங்கீகரித்தது.

1975க்குப் பிறகு, சித்த மருத்துவ ஆய்வுகளும், அறிவியல்ரீதியிலான முயற்சிகளும் நடைபெறத் தொடங்கின. சென்னை அரும்பாக்கத்தில் மருத்துவமனையுடன் இணைந்த சித்த மருத்துவக் கல்லூரியும் ஏற்படுத்தப்பட்டது. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம், சித்த மருத்துவத்தை ஓர் அறிவியல் பிரிவாக ஏற்றுக்கொண்டது.

சித்த மருத்துவ அறிவியல் என்னும் அறிவியல் ஆய்வுத் துறையையும் அது உருவாக்கியது. இன்று அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சித்த மருத்துவத்துக்கு எனத் தனிப்பிரிவு உள்ளது. 2006இல் தமிழகத்தில் பெரும் வீரியத்துடன் சிக்குன் குன்யா பரவியபோது, அதைக் கட்டுக்குள் கொண்டுவர சித்த மருத்துவத்தின் நிலவேம்புக் குடிநீர் பயன்படுத்தப்பட்டது.

கரோனா பெருந்தொற்று காலத்தில், லேசான பாதிப்புகளைக் கொண்ட நோயாளிகளைக் குணப்படுத்துவதில் சித்த மருத்துவத்தின் கபசுரக் குடிநீர் ஆற்றிய பங்கு அனைவரும் அறிந்ததே. சித்த மருத்துவத்தில் பரிந்துரைக்கப்படும் சிகிச்சைகளையும் மருந்துகளையும் அறிவியல் முறைசார்ந்த ஆய்வுகளுக்கு உட்படுத்துவதை மத்திய, மாநில அரசுகள் இன்று பெருமளவில் ஊக்குவித்துவருகின்றன.

- ஹுசைன்

SCROLL FOR NEXT