சிறப்புக் கட்டுரைகள்

அறிவோம் நம் மொழியை: ஏன் இந்தக் குழப்பம்?

அரவிந்தன்

ஒருமை, பன்மை மயக்கம் பற்றிய குறிப்புகளைப் படித்த நண்பர் ஒருவர் இதைப் பற்றி ஏன் எழுத வேண்டும் என்று கேட்டார். ஒருமைக்கும் பன்மைக்கும் வித்தியாசம் தெரியாமல்போய்விடுமா என்பது அவருடைய வாதம்.

உண்மைதான். ஆனால், குழப்பம் ஏற்படத்தானே செய்கிறது. ‘இருள் வெளியில் ஒளியாகப் படிகிறது அவரது சிந்தனைகள்’ எனும் வாக்கியத்தில் சிந்தனைகள் என்பது பன்மை; எனவே, ‘படிகின்றன’ என்றுதான் எழுத வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரியும். அப்படியானானால் ஏன் இந்தத் தவறு நேர்கிறது?

‘அவனிடம் சந்தேகங்கள் இருக்கிறது’ என்று எழுதினால் எழுதும்போதே தவறு என்று தெரிந்துவிடுவதற்கான வாய்ப்பு அதிகம். காரணம், சந்தேகங்கள் என்ற சொல்லுக்குப் பக்கத்திலேயே அதற்கான பயனிலைச் சொல் வந்துவிடுகிறது. ஆனால், முதலில் சொன்ன வாக்கியத்தில் பயனிலை முதலிலும் எழுவாய் பின்னாலும் அமைக்கப்பட்டுள்ளன. படிகிறது என்று எழுதிய பிறகு சிந்தனைகள் என்று எழுதும்போது, ‘படிகின்றன சிந்தனைகள்’என்றுதானே எழுத வேண்டும் என்று தோன்றுவதற்கான வாய்ப்பு குறைவு. காரணம், வாக்கியத்தைத் தலைகீழாக மீளாய்வு செய்யும் பழக்கம் நமக்கு இல்லை. எழுதும் வேகத்தில் இதைத் தாண்டி வந்துவிடுகிறோம்.

எழுவாய்க்குப் பிறகு பயனிலை என்னும் வரிசையைக் கூடியவரையில் கடைப்பிடித்தால் குழப்பங்களைத் தவிர்க்கலாம். சிந்தனைகள் என்று முதலில் எழுதிவிட்டால் படிகின்றன என்னும் பன்மை தானாகவே வந்துவிடும். ஆனால், எல்லாச் சமயங்களிலும் இப்படி எழுத முடியாது. சில சமயம் எழுவாயைக் கடைசியில் அமைக்கும்போது, வாக்கியத்துக்குக் கூடுதல் அழுத்தமோ வலுவான முத்தாய்ப்போ கிடைக்கும். ‘பிரச்சினை தீர்ந்தது’ என்பதைக் காட்டிலும் ‘தீர்ந்தது பிரச்சினை’ என்று எழுதும்போது தொனி மாறத்தான் செய்கிறது. ‘கிளம்பிற்று படை’ என்று சொல்லும்போது கிடைக்கும் உணர்வு ‘படை கிளம்பிற்று’ என்று சொல்லும்போது இல்லை. பொதுவாக, கவிதைகளில் இத்தகைய வாக்கியங்களைப் பார்க்கலாம். உரைநடையில் கூடியவரை இதைத் தவிப்பது நல்லது. எப்போதுமே இப்படி எழுதிக்கொண்டிருந்தால் இந்தப் பாணி தன் தாக்கத்தை இழந்து, சலிப்பூட்டத் தொடங்கிவிடும். அரிதாகப் பயன்படுத்தும்போதுதான் இதற்கான மதிப்பு இருக்கும்.

ஒரு வாக்கியத்தில் எழுவாயை எங்கே அமைப்பது, ஒரு தகவலை எப்படிக் குழப்பமில்லாமல் சொல்வது என்பது பற்றிய குறிப்புக்குச் சுவையான எதிர்வினைகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. செய்தித் தொலைக்காட்சி ஒன்றில் பணிபுரியும் நண்பர் ஒருவர் இந்தத் தகவலைப் பகிர்ந்துகொண்டார்: ‘முதலமைச்சரின் உத்தரவின் பேரில் இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட்டது’ என்ற வாக்கியத்தை உதவி ஆசிரியர் ஒருவர் எழுதியிருந்தார். இதில் உள்ள விபரீதத்தை விளக்கி, ‘இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கு, முதலமைச்சரின் உத்தரவின் பேரில் நஷ்ட ஈடு வழங்கப்பட்டது’ என்று மாற்றி எழுதச் சொன்னதாக அவர் கூறினார். வாக்கியத்தை முறையாக அமைக்க வேண்டியதன் அவசியத்தை இதைவிடவும் தெளிவாக விளக்க முடியாது என்றே தோன்றுகிறது.

- அரவிந்தன், தொடர்புக்கு: aravindan.di@thehindutamil.co.in

SCROLL FOR NEXT