சிறப்புக் கட்டுரைகள்

சுதந்திரச் சுடர்கள் | இசை: காந்தி பஜனுக்கு இளையராஜா இசை!

வா.ரவிக்குமார்

`நம்ரதா கே சாகர்’ எனத் தொடங்கும் மகாத்மா காந்தியின் புகழ்பெற்ற பஜன் பாடலுக்கு இளையராஜா இசையமைத்து, இந்தியாவின் மதுரமான குரலுக்குச் சொந்தக்காரர்களான பீம்சென் ஜோஷி, அஜாய் சக்ரவர்த்தி ஆகியோரைப் பாடவைத்திருக்கிறார்.

2008இல் உருவாக்கப்பட்ட இந்தப் பாடலுக்கான வீடியோவை ஜார்ஜ் மங்கலத் தாமஸ், அனூப் ஜோத்வானி ஆகியோர் எழுதி இயக்கியிருக்கின்றனர். இயற்கையான காட்சிப் பதிவுக்கு ஒத்திசைவாக ஓடை நீரின் ஜலதரங்க ஒலி பாடல் நெடுகிலும் நம் செவியைப் பரவசப்படுத்துகிறது.

வெறுமே பாடலுக்கான காட்சிகளை வெட்டி ஒட்டாமல், குழந்தைகளின் உலகத்தை, மகாத்மாவுக்குள் இருக்கும் ஒரு குழந்தையின் உள்ளத்தைச் சித்தரிக்கிறது இந்தப் பாடலின் காணொளி.

கங்கை, யமுனை, பிரம்மபுத்திரா போன்ற நதிகள் எப்படி அனைவருக்கும் உதவு கின்றனவோ அதுபோல் மக்களுக்குள் உதவி செய்யும் மனப்பான்மை வரவேண்டும். அனைத்து நதிகளும் எப்படி கடலில் சங்கமிக்கின்றனவோ, அதுபோல் அனைவரும் இந்த நாட்டில் ஒற்றுமையாக இருக்க வேண்டும். இந்த நாடு செழிக்க வேண்டும். இந்த நாட்டுக்காகத் தியாகம் செய்தவர்களை நினைக்க வேண்டும். இந்த நாட்டின் மீது பக்தி வேண்டும் என்னும் காந்தியின் சிந்தனைகள் இந்த பஜனைப் பாடலில் வெளிப்படுகின்றன.

பாடலின் ஒட்டுமொத்த கருத்தையும் தன்னுடைய ஈர்ப்பான குரலில் நடிகர் அமிதாப் பச்சன் அறிவுறுத்துவதோடு பாடலின் காணொளி முடிகிறது. ஆனால், நம்ரதா கே சாகர் என்னும் பாடலின் வரிகள் மட்டும் அனிச்சையாக நம் மனத்தில் ஒலித்துக்கொண்டே இருக்கின்றன!

காந்தியின் பஜனையில் நீங்களும் இணைய: https://bit.ly/3ADpZ93

- வா. ரவிக்குமார்

SCROLL FOR NEXT