நம் நாட்டின் 75ஆம் ஆண்டு சுதந்திர தின விழா அமுதப் பெருவிழாவாக மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அப்படியான ஒரு கொண்டாட்ட நிகழ்வு பம்மல் சூரியம்மன் குளக்கரையில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட எக்ஸ்னோரா தலைவர் செந்தூர் பாரி, ‘‘எல்லா நிகழ்ச்சிகளிலும் சிறப்பு அழைப்பாளர்களுக்குப் பொன்னாடை போர்த்துகிறார்கள்.. அந்தப் பொன்னாடையால் என்ன பயன் என்று கேட்கிறபோது, யாராலும் பதில் அளிக்க முடிவதில்லை.
ஆனால், அந்த சிந்தெடிக் சால்வையால் சுற்றுச்சூழலுக்குக் பெரும் கேடுதான் விளைகிறது. அதனால், நான் கலந்துகொள்ளும் எல்லா விழா நிகழ்ச்சிகளிலும் நூலாடை அணிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இதனால் பயனும் உண்டு... முக்கியமாக சுற்றுச்சூழலுக்கும் கேடு இல்லை’’ என்று சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்துப் பேசினார். மேலும், கார்பன் சமநிலை அடைந்துள்ள கேரளத்தின் வயநாட்டைப் போன்று தமிழ்நாட்டிலும் கோடிக்கணக்கான மரங்கள் நடுவதற்கு எக்ஸ்னோரா அமைப்பு முயற்சி எடுத்து வருவதாகக் கூறினார். ஹோம் எக்ஸ்னோரா அமைப்பின் இந்திர குமாரும், விழா அமைப்பாளர் மா.பன்னீர் செல்வமும் உடனிருந்தனர்.
- ஸ்ரீநிகேதன், சென்னை-75.