இஸ்ரோவால் 2008 அக்டோபர் 22இல் ஆளில்லாத விண்கலம் சந்திரயான் நிலவுக்குச் செலுத்தப்பட்டது. விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் செயல்படுத்தப்பட்ட திட்டம் இது.
சந்திரயான் விண்கலத்தைச் சுமந்துசென்ற பி.எஸ்.எல்.வி ஏவுகலம் புவியின் சுற்றுப்பாதையில் முதலில் அதை நிலைநிறுத்தியது. அதன் பின்னர் அந்த விண்கலத்தின் முன்னுந்து அமைப்பு நிலவை நோக்கி அதைச் செலுத்தி, நிலவுக்கு மேலே 100 கி.மீ. சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியது. அந்த விண்கலத்தில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஆய்வுக் கருவிகளும், நாசா, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ஆகியவை தயாரித்த ஆய்வுக் கருவிகளும் இடம்பெற்றிருந்தன.
சந்திரயானின் ஆய்வு, நிலவின் பரப்பில் அதிக அளவில் நீர் இருப்பதைக் கண்டறிந்தது. அந்தக் கண்டறிதல் நிலவு குறித்த ஆய்வுகளில் முக்கியத் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதன் பின்னர் சர்வதேச நாடுகள், நிலவு குறித்த ஆராய்ச்சிகளில் அதிக கவனம் செலுத்தத் தொடங்கின.
சந்திரயான் திட்டத்துக்கு ஆன செலவு இந்திய மதிப்பில் ரூபாய் 400 கோடி. நிலவைச் சுற்றியபடியே இரண்டு ஆண்டுகளுக்கு செயல்படும் விதமாக சந்திரயான் வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால், எதிர்பாராதவிதமாக விண்ணில் செலுத்தப்பட்ட 312 நாட்களிலேயே அது தரைக்கட்டுப்பாடு நிலையத்துட னான தொடர்பை இழந்தது. மைக்ரோ ஒளிக்கற்றை மூலம் நாசா விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் சந்திரயான் செயலிழந்த நிலையில் நிலவுக்கு மேலே 200 கி.மீ தொலைவில் சுற்றிக்கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பத்து மாதங்களே செயல் பட்டாலும் சந்திரயான் தனது திட்ட நோக்கத்தில் 95 சதவீதத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்துவிட்டது.
2019 ஜூலை 22 அன்று சந்திரயான் – 2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. நிலவின் சுற்றுவட்டப் பாதையில் இயங்கிக்கொண்டிருந்த சந்திரயான்-2 விண்கலத்தின் தரையிறங்கு கலம் விக்ரம், 2019, செப்டம்பர் 7 அன்று நிலவில் தரையிறங்கத் தொடங்கியது. ஆனால், நிலவின் மேற்பரப்புக்கு 2.1 கிலோ மீட்டர் உயரத்திலிருந்தபோது தரையிறங்கு கலம் விக்ரமுடன் தகவல்தொடர்பை இஸ்ரோ இழந்துவிட்டது. ஒருவேளை விக்ரம் வெற்றிகரமாகத் தரையிறங்கி இருந்தால், அது நிலவு குறித்த ஆய்வில் இன்னொரு மைல்கல்லாக இருந்திருக்கும்.
- ஹுசைன்