சிறப்புக் கட்டுரைகள்

சுதந்திரச் சுடர்கள் | ஆளுமை: சேவையே வாழ்க்கை!

செய்திப்பிரிவு

இந்திய தேசிய ராணுவத்தின் பெண்கள் படையின் கேப்டனாகவும் எளிய மக்களுக்குச் சேவை செய்த மருத்துவராகவும் அறியப்படுபவர் லட்சுமி சாகல்.

படிப்பும் செல்வாக்கும் அரசியல் பின்புலமும் கொண்ட சுவாமிநாதன் - அம்மு தம்பதியின் மகள் லட்சுமி. சிறு வயதிலிருந்தே தன் அம்மாவுடன் சுதந்திரப் போராட்டங்களில் பங்கேற்க ஆரம்பித்தார். சென்னை ராணி மேரி கல்லூரியில் படித்தபோது கதர் ஆடைகள் அணிவதை வழக்கமாக்கிக்கொண்டார். 1938இல் சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பை முடித்தார்.

மீரட் சதி வழக்கில் தொடர்புடையவராகக் குற்றம்சாட்டப்பட்ட சுகாசினி, லட்சுமியின் வீட்டில் தலைமறைவாக இருந்தார். அப்போது அவரிடம் லட்சுமி மார்க்சியம் கற்றுக்கொண்டார்; ரஷ்யப் புரட்சி குறித்தும் படித்தார். புரட்சியினால் மட்டுமே சமூக மாற்றம் சாத்தியம் என்ற எண்ணத்தை வந்தடைந்தபோது, காந்தியக் கொள்கையைக் கைவிட்டார் லட்சுமி.

இரண்டாம் உலகப் போரின்போது உறவினர் ஒருவருக்கு மருத்துவம் பார்ப்பதற்காக சிங்கப்பூர் சென்றிருந்தார் லட்சுமி. அங்கே புலம்பெயர்ந்த இந்தியர்களின் நிலையைக் கண்டு வருந்தினார். அவர்களுக்குத் தம்மால் ஆன மருத்துவ உதவிகளைச் செய்தார். அப்போது நேதாஜியின் இந்திய தேசிய ராணுவம் உருவானது. அதில் ஏராளமான புலம்பெயர்ந்த இந்தியர்கள் தாமாகச் சேவைசெய்ய முன்வந்தனர். அவர்களுக்கு மருத்துவ உதவி செய்துவந்த லட்சுமியை, சுபாஷ் சந்திர போஸ் சந்தித்தார். ‘ஜான்சி ராணி பெண்கள் படை’க்கு தலைமையேற்குமாறு கேட்டுக்கொண்டார். தெற்காசியாவில் ஆரம்பிக்கப்பட்ட முதல் பெண்கள் படை என்ற சிறப்பும் இந்தப் படைக்கு உண்டு.

லட்சுமியின் தலைமையில் இந்திய விடுதலைப் போராட்டத்தில் மலேசியாவிலிருந்த ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். சிங்கப்பூரிலிருந்து பர்மா வழியாக இந்தியாவை அடைவதற்கான கடினமான பயணத்தில் மிகுந்த நெஞ்சுரத்தோடு அவர்கள் சென்றனர். பர்மிய - இந்திய எல்லையில் ஆங்கிலேயப் படைகளிடம் சிக்கிகொண்ட பெண்கள், நச்சுக்கிழங்குகளைத் தின்று உயிர் துறந்தனர்.

இந்திய தேசிய ராணுவத்தால் நடத்தப்பட்ட மருத்துவமனைக்கு வரும் காயமடைந்த வீரர்களுக்கு லட்சுமி சிகிச்சையளிக்க ஆரம்பித்தார். ஒருநாள் மருத்துவமனை என்பதை அறிந்தும் ஆங்கிலேயப் படை தாக்குதல் நடத்தியது. பதுங்குக்குழியில் இருந்த லட்சுமி உயிர்தப்பினார். கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டார்.

1947இல் சக விடுதலைப் போராட்ட வீரரான பிரேம்குமார் சாகலைத் திருமணம் செய்துகொண்டார். கான்பூரில் குடியேறி, 97 வயது வரை ஏழை மக்களுக்கு மருத்துவச் சேவையை வழங்கினார். 2002இல் இடதுசாரிகளின் சார்பில் குடியரசுத் தேர்தலில் அப்துல் கலாமை எதிர்த்தும் போட்டியிட்டு்ள்ளார்.

- ஸ்நேகா

SCROLL FOR NEXT