சிறப்புக் கட்டுரைகள்

சுதந்திரச் சுடர்கள் | இலக்கியம்: பிரிவினை பிரித்த காதல்

ஜெய்

சமீபத்தில் புக்கர் பரிசு வழியாகக் கவனம் பெற்ற எழுத்தாளர் கீதாஞ்சலிஸ்ரீ. இந்திய மொழி எழுத்தாளர் ஒருவர் புக்கர் பரிசு வாங்குவது இதுவே முதல் முறை. இதற்கு முன் சல்மான் ருஷ்டி, அருந்ததி ராய், கிரண் தேசாய், அரவிந்த் அடிகா ஆகியோர் நேரடி ஆங்கிலப் படைப்புகளுக்காக புக்கர் பரிசு வாங்கியிருக்கிறார்கள்.

கீதாஞ்சலிஸ்ரீ ‘ரீட் சமாதி’ என்ற தன் இந்தி நாவலின் மொழிபெயர்ப்புக்காக புக்கர் பரிசைப் பெற்றிருக்கிறார். டெய்சி ராக்வெல் இதன் மொழிபெயர்ப்பாளர். தமிழ்க் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பேராசிரியர் ஏ.கே.ராமனுஜத்தின் மாணவர் டெய்சி. கீதாஞ்சலிஸ்ரீயின் நாவலுக்கான இந்த அங்கீகாரத்தில், மொழிபெயர்ப்பின் பங்கும் பேசப்பட்டுவருகிறது.

கீதாஞ்சலியின் இந்த நாவல் குஷ்வந்த் சிங், சல்மான் ருஷ்டி எனப் பலரும் எடுத்துக்கொண்ட இந்தியப் பிரிவினையை பேசுபொருளாகக் கொண்டது. மகள், மனைவி, அம்மா, பாட்டி எனச் சமூகம் வகுத்துள்ள அந்தஸ்துகளில் வாழ்ந்த மா என்ற 80 வயதுப் பெண், அந்தச் சமூகம் வகுத்த கோடுகளைத் தாண்டும் கதை இது. இதில் ஸ்தூலமாக பாகிஸ்தான் எல்லைக் கோட்டையும் அவர் தாண்டுகிறார். அவருடைய பதின் பருவத்தில் பிரிட்டிஷார் வெளியேறுவதற்கு் முன் கிழித்த கோடு அது.

மாவின் கணவருடைய இறப்பிலிருந்து இந்த நாவல் தொடங்குகிறது. மகன் வீட்டில் மருமகள், பேரன்களுடன் வசிக்கும் அவர், அதற்குப் பிறகு தனிமையில் முடங்கிப் போகிறார். யாரிடமும் பேசாமல் அறைக்குள் கிடக்கிறார். சமூக ஒழுக்கங்களை அனுசரிக்கும் தன் மகனுடைய வீட்டிலிருந்து ஒரு நாள் அவர் காணாமல் போகிறார்.

தனித்து வாழும் சுதந்திரச் சிந்தனையாளரான தன் மகள் வீட்டில் அவர் இருப்பதை நாவல் கண்டுபிடித்துச் சொல்கிறது. அங்கு அவருக்குச் சுதந்திரம் கிடைக்கிறது. அவருடைய மகள், பெண்களின் பாலியல் சுதந்திரம் குறித்தெல்லாம் எழுதக்கூடிய பெண்ணியவாதி என நாவல் விவரிக்கிறது.

மாவுக்கு ரோசி என்கிற திருநங்கையின் நட்பு கிடைக்கிறது. மனைவி, அம்மா, அத்தை, பாட்டி என்ற சமூக அடையாளங்களை ஒன்றன்பின் ஒன்றாகக் களைய மாவுக்கு அவர் உதவுகிறார். கடைசியில் எண்பதாம் வயதில் அவர் தன்னலம் பேணுபவராக, சுதந்திரவாதியாக மாறுகிறார். மகளின், அம்மாவின் கதாபாத்திரங்களை கீதாஞ்சலி இந்த இடங்களில் மாற்றிக் கொடுக்கிறார்.

மா, பாகிஸ்தானுக்குச் செல்ல நினைக்கிறார். இந்த நாவலில் எதிர்பாராத் திருப்பம் நிகழ்கிறது. ஒரு பெண்ணியக் கதை, ஒரு பிரிவினை அரசியல் சார்ந்த கதையாகிறது. மகளையும் ரோசியையும் கூட்டிக்கொண்டு கடவுச் சீட்டு இல்லாமல் எல்லைக் கோட்டைத் தாண்டி பாகிஸ்தானுக்குள் நுழைகிறார் மா.

ஒரு காவல் அதிகாரியிடம் தன் கணவனைக் காணச் செல்கிறேன். அவர் பெயர் அலி அன்வர் என்கிறார் மா. இந்த இடத்தில் நாவல் எழுச்சி கொள்கிறது. மா, சந்திரபிரபா எனும் பதின் பெண்ணாகவும் ஆகிறார். பிரிவினை பிரித்த காதலின் வேதனைப் பாடலாகவும் இந்த நாவல் விரிவுகொள்கிறது.

தனிமனித வாழ்க்கையில் அரசியல் நிகழ்த்தும் குறுக்கீடு, பெண்கள் மீதான சமூக அடையாளச் சுமை என இந்த நாவல் காத்திரமான விஷயங்களைப் பேசுகிறது. ஆனால், மொழியளவில் எளிமையையும் அங்கதத்தையும் கொண்டுள்ளது. இந்த விசேஷமான அம்சம் நாவலின் சர்வதேச அங்கீகாரத்துக்கான காரணம் எனலாம்.

- ஜெய்

SCROLL FOR NEXT