ஒருமை - பன்மை என்பதையும் செய்வினை - செயப்பாட்டுவினை என்பதையும் சேர்த்துப் புரிந்துகொள்வதும் தவறு இல்லாமல் எழுத உதவும். ‘இப்படிப்பட்ட யோசனையும் ஆய்வாளர்களால் முன்வைக்கப்படுகின்றன’ என்ற வாக்கியத்தைப் படிக்க நேர்ந்தது. யோசனை, ஆய்வாளர்கள் என ஒருமையும் பன்மையுமான பெயர்ச் சொற்கள் அருகருகே வந்ததால் ஏற்பட்ட குழப்பம் இது. ஒரு வாக்கியத்தில் எத்தனை பெயர்ச் சொற்கள் வந்தாலும், எது எழுவாய் என்பதில் தெளிவு இருந்தால் இந்தக் குழப்பம் வராது.
இதே வாக்கியத்தைச் சற்றே மாற்றிப் பார்க்கலாம். ‘‘இப்படிப்பட்ட யோசனையை ஆய்வாளர்கள் முன்வைக் கிறார்கள்.’ செயப்பாட்டு வினை செய்வினையாக மாறியதும் எழுவாயும் மாறிவிட்டது. யோசனை என்பது ஒருமை. அது எழுவாயாக இருந்தால் பயனிலையும் ஒருமையாக இருக்க வேண்டும். ஆய்வாளர்கள் என்னும் பன்மைச் சொல் எழுவாயாக இருந்தால், அதன் பயனிலைச் சொல் பன்மையாக இருக்க வேண்டும். செய்வினையிலும் செயப்பாட்டுவினை யிலும் நிகழும் மாற்றம் எழுவாயை மாற்றிவிடுவதை கவனித்து வாக்கியத்தை முழுமைப்படுத்த வேண்டும். தமிழில் எழுதும்போது தேவையில்லாமல் ஒட்டிக்கொள்ளும் சில அம்சங்களைப் பற்றிப் பார்க்கலாம். ‘ஒரு’ என்னும் சொல்லும் ‘மற்றும்’ என்னும் சொல்லும் பல இடங்களில் தேவையில்லாமல் பயன்படுத்தப்படுகின்றன. ‘ஒரு வயதான பெரியவர்’ என்னும் வாக்கியத்தைப் பாருங்கள். ‘ஒரு’வயதானவர் எப்படிப் பெரியவராக இருக்க முடியும்? ‘வயதான ஒரு பெரியவர்’ என்று மாற்றி எழுதலாம் என்று சட்டென்று தோன்றக்கூடும். ஆனால், முதியவர் அல்லது வயதானவர் என்னும் சொல் நாம் சொல்லவருவதைத் தெளிவாகச் சொல்லிவிடும். இந்நிலையில் ‘ஒரு வயதான பெரியவர்’ என்பது எதற்கு?
‘ஒரு அழகான பெண்’, ‘ஒரு பெரிய மரம்’. ‘ஒரு பத்தாம்பசலித்தனமான நடவடிக்கை’ என்றெல்லாம் பல வாக்கியங்களை நாம் அன்றாடம் பார்க்கிறோம். ஒரு அழகு என்பது பொருளற்ற தொடர். அழகை ஒன்று, இரண்டு என்று எண்ண முடியாது. ‘அழகான ஒரு பெண்’ என்று சொல்லலாம். சரியாகச் சொல்லப்போனால், ‘ஒரு’ இல்லாமலேயே எழுதலாம். ‘பெரிய மரம்’, ‘அழகான பெண்’ என்றெல்லாம் சொல்லும்போது, அது தமிழுக்கு இயல்பாக இருக்கிறது. எத்தனை பெண்கள், எத்தனை மரங்கள் என்னும் குழப்பம் இந்த வாக்கியங்களில் வருவதும் இல்லை.
ஆங்கிலத்தில் Articles எனச் சொல்லப்படும் A, An, The ஆகியவற்றில் ஏதேனும் ஒன்று ஒவ்வொரு பெயர்ச் சொல்லுக்கு முன்பும் பயன்படுத்தப்பட வேண்டும். பெயர்ச் சொல்லுக்கு முன்பு அழகிய, பெரிய, பழைய என்பன போன்ற பண்புத் தொகைகள் இருந்தால் அவற்றுக்கு முன்பும் A / An / The பயன்படுத்த வேண்டும். A beautiful tree, an old man, the narrative style என்பது போன்ற வாக்கியங்கள் ஆங்கிலத்தில் மிகவும் இயல்பானவை. ஆங்கில இலக்கணத்தை அடியொற்றியவை. ஆனால், இந்தத் தாக்கத்தில் தமிழிலும் எங்கு பார்த்தாலும் ‘ஒரு’ சேர்ப்பது தேவையற்றது. இந்தப் போக்கை மொழிபெயர்ப்புகளில் அதிகம் பார்க்கலாம். ஒன்று என்னும் பொருள் கட்டாயம் தேவைப்படும் இடம் தவிர, பிற இடங்களில் ‘ஒரு’ என்பதைத் தவிர்ப்பது இயல்பான தமிழாக இருக்கும். இதே போன்ற இன்னொரு சொல் ‘மற்றும்’. இதை அடுத்த வாரம் பார்ப்போம்.
- அரவிந்தன், தொடர்புக்கு: aravindan.di@thehindutamil.co.in