உலகின் மிகப் பழமையான வேளாண் அமைப்புகளில் ஒன்றான இந்திய வேளாண்மை, பத்தாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றுத் தொடர்ச்சியைக் கொண்டிருக்கிறது.
இந்தியப் பொருளாதாரத்தின் நீடித்த வளர்ச்சிக்கான முக்கிய அம்சமாக வேளாண் துறை திகழ்கிறது. 1950-51இல் 51 மெட்ரிக் டன்னாக இருந்த இந்தியாவின் ஒட்டுமொத்த உணவு தானிய உற்பத்தி, 2021-22இல் 314 மெட்ரிக் டன்னாக உயர்ந்திருக்கிறது.
கடந்த 75 ஆண்டுகளில் இந்திய வேளாண்மை பல உச்சங்களைத் தொட்டுள்ளது. வாழைப்பழ விளைச்சலில் சீனா, பிரேசில் ஆகிய நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி உலகின் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
இதே போல எருமைப்பாலில் முதலிடம், நெல், கோதுமை, கரும்பு, பச்சைக் காய்கறிகள், உருளைக்கிழங்கு, பருத்தி, பசும்பால் ஆகியவற்றில் உலகில் இரண்டாம் இடத்தை இந்தியா கைப்பற்றியுள்ளது. உணவு தானியங்களின் உற்பத்தி 6 மடங்கு, தோட்டக்கலைப் பயிர்கள் 11 மடங்கு, மீன் உற்பத்தி 18 மடங்கு, பால் 10 மடங்கு, முட்டை 53 மடங்கு உயர்ந்திருக்கிறது.
விடுதலை பெற்ற காலகட்டத்தில், இந்தியாவின் மக்கள்தொகை ஏறத்தாழ 36 கோடி; அப்போது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) வேளாண்மையின் பங்கு 51.9%. இந்தியாவின் தற்போதைய உத்தேச மக்கள்தொகை ஏறத்தாழ 139 கோடி.
ஆனால், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP), வேளாண்மையின் பங்கு 2017இல் 15.4% ஆகக் குறைந்திருக்கிறது. பல்வேறு நெருக்கடிகள், சிரமங்களுக்கு உள்ளான போதும் 63 கோடிப் பேருக்கு வேலைவாய்ப்பு (45.6%) வேளாண்மைத் துறை மூலமே கிடைத்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- அபி