சிறப்புக் கட்டுரைகள்

சுதந்திரச் சுடர்கள் | ஆளுமை: அரசியல்வாதியான கவிஞர்

ஸ்நேகா

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் மிக முக்கியமான ஆளுமையாகவும் கவிஞராகவும் அறியப்படுபவர் சரோஜினி. படித்த, செல்வாக்கான குடும்பத்தைச் சேர்ந்தவர். மெட்ரிகுலேஷன் தேர்வில் மாநிலத்திலேயே முதலிடம் பெற்றார்.

சிறு வயதிலேயே ஆங்கிலத்தில் கவிதைகளை எழுத ஆரம்பித்துவிட்டார். இவரது கவிதைகளைக் கண்ட ஹைதரா பாத் நிஜாம், வெளிநாட்டில் படிப்பதற்கான உதவித்தொகையை வழங்கினார்.

லண்டனில் உயர்கல்வி பயின்றார். அப்போது முத்தியாலா கோவிந்தராஜுலு என்ற தொழில்முறை மருத்துவரை காதலித்து, சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டார்.

1905ஆம் ஆண்டு வங்கப் பிரிவினையின்போது சுதந்திரப் போராட்டத்தில் இணைந்தார். கோபால கிருஷ்ண கோகலே, ரவீந்திரநாத் தாகூர், முகமது அலி ஜின்னா, அன்னி பெசன்ட், காந்தி, நேரு ஆகியோரின் நட்பு அவருக்குக் கிடைத்தது.

வங்காளம், இந்தி, தெலுங்கு, தமிழ், ஆங்கிலம், பாரசீகம் ஆகிய மொழிகள் அவருக்குத் தெரியும் என்பதால் நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு, வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த பெண்களை சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்க வைத்தார். பெண்ணுரிமை குறித்துப் பேசினார். தன் பேச்சால் இளைஞர்களுக்கு உத்வேகம் ஊட்டினார்.

1925இல் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1931இல் காந்தி, மதன்மோகன் மாளவியாவுடன் இணைந்து வட்டமேஜை மாநாட்டில் பங்கேற்றார்.

1942ஆம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று, 21 மாதங்கள் சிறைத் தண்டனை பெற்றார். அப்போது காந்தியிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.

சுதந்திர இந்தியாவில் ஐக்கிய மாகாணத்தின் (இன்றைய உத்தர பிரதேசம்) ஆளுநராகப் பொறுப்பேற்றார் சரோஜினி. இதன் மூலம் இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் என்ற சிறப்பைப் பெற்றார். 'கவிக்குயில்’, 'இந்தியாவின் நைட்டிங்கேல்' என்றெல்லாம் அழைக்கப்பட்ட சரோஜினி, 1948ஆம் ஆண்டு மறைந்தார்.

- ஸ்நேகா

SCROLL FOR NEXT