சிறப்புக் கட்டுரைகள்

பாகிஸ்தான் ராணுவத்தை அடக்குவாரா நவாஸ்?

சேகர் குப்தா

கட்டுப்பாட்டு எல்லைக் கோட்டுக்கு அப்பால் சென்று இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலானது பாஜக, சிவசேனா கட்சிகளுக்கு டிஜிட்டல் பேனர்கள் எழுதும் ஓவியர்களுக்கு நிறையப் படம் வரையும் வாய்ப்புகளை, தேர்தல் நடக்கவிருக்கும் உத்தரப் பிரதேசத்தில் அள்ளித் தந்திருக்கிறது. தசரா பண்டிகையின் முத்தாய்ப்பாக பத்து தலை ராவணனை, ராமர் வதம் செய்வார். எனவே பிரதமர் நரேந்திர மோடியை ராமராகவும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபை ராவணராகவும் சித்தரித்து ஓவியங்கள் தயார் செய்துவிட்டனர்.

ராவணன் இலங்கை நாட்டில் எதிர்ப்பார் இல்லாத சர்வாதிகாரி; நவாஸ் நிலைமை அப்படியல்ல. எனவே நவாஸை அசுர மன்னனாகச் சித்தரிக்க முடியாது. இந்த விவகாரத்தில் இரு நாடுகளின் தரப்பிலும் பொறுப்பில்லாமல் பலர் கருத்துகளை உதிர்க்கின்றனர்.

எதிர்க் கட்சித் தலைவரான இம்ரான் கான், இந்தியா மீது போர் தொடங்கிவிட்டது என்று அறிவிக்க வேண்டியதை தவிர மற்ற எல்லாவற்றையும் பேசிவிட்டார்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசியதைப் போலவே பிலாவல் புட்டோவும் இந்தியாவைக் கடுமையாகத் தாக்கிப் பேசியிருக்கிறார்.

அதிபர் ஜியா உல் ஹக் ஆட்சிக்காலத்துக்குப் பிறகு பாகிஸ்தானில் ஜனநாயகம் திரும்பியிருந்தாலும், இந்தியாவுக்கு எதிராகப் போர் பரணி பாடுவதே தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் தலைவர்களின் வழக்கமாக இருக்கிறது. பிரதமராகப் பதவியேற்ற உடனேயே இந்தியாவுக்கு வருவார்கள் அல்லது இந்தியத் தலைவரை பாகிஸ்தானில் வரவேற்பார்கள். 1988 டிசம்பரில் இஸ்லாமாபாதில் பேநசீர் புட்டோ ராஜீவ் காந்தி பங்கேற்ற உச்சி மாநாடு நடந்தது. 1999-ல் நவாஸ் ஷெரீஃப்-வாஜ்பாய் ஒரே பஸ்ஸில் பயணம் சென்றார்கள், லாகூரில் நட்புப் பிரகடனம் வெளியானது.

மும்பையில் 2008 நவம்பர் 26-ம் தேதி நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களின் புலன் விசாரணைக்கு உதவ ஐ.எஸ்.ஐ. தலைவரை அனுப்பி வைக்கத் தயார் என்று ஆசிஃப் சர்தாரி பெரிய மனதுடன் முன்வந்தார். அதில் ஈடுபட்டவர்கள் பாகிஸ்தானியர்கள்தான் என்று அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மேஜர் ஜெனரல் மெஹ்மூத் துரானி ஒப்புக்கொண்டார். இப்படி நட்புக்கரம் நீட்டிய சம்பவங்களுக்குப் பிறகு ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சில பின்விளைவுகளும் ஏற்பட்டன. 1990-ல் பேநசீர் புட்டோ பதவியிலிருந்து அகற்றப்பட்டார். மெஹ்மூத் துரானி ஆலோசகர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். ஆசிஃப் சர்தாரி செல்வாக்கில்லாதவராக்கப்பட்டார்.

நரேந்திர மோடி, லாகூர் சென்று நவாஸுக்குப் பிறந்த நாள் வாழ்த்து கூறியபோது நவாஸுக்கு ஏதும் நேராமல் இருக்க வேண்டுமே என்று நினைத்தோம். முதலில் குருதாஸ்பூரிலும் பிறகு பதான் கோட்டிலும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதல்களைப் பற்றி விசாரணை நடத்த உத்தரவிட்ட நவாஸ், ஜெய்ஷ்-இ-முகம்மது மீதான நடவடிக்கைக்குத் தயாரானார். அதையடுத்து காஷ்மீர் பள்ளத்தாக்கில் நிலைமை மோசமானது. அதேசமயம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வலுவைப் பெற்றது, முஷாரஃப்பை அதிகார வட்டத்தில் இருந்து விலக்கியது, அதிபர் ஆசிப் அலி ஜர்தாரியுடன் ஒத்துழைத்து சமரசம் கண்டது போன்ற காரணங்களால், இந்தியாவுடனான உறவையும் வலுப்படுத்த முடியும் என்று நவாஸ் உற்சாகமடைந்தார்.

1965 மற்றும் 1971 போர்களில் சிறப்பாகச் செயல்பட்ட ராணுவ தளபதிகளின் குடும்பத்தைச் சேர்ந்த ரஹீல் ஷெரீஃபைத் தேர்வு செய்து ராணுவத்தின் தலைமைத் தளபதியாக நியமித்தார் நவாஸ். இதற்குப் பிறகு முஷாரஃப் மீது தேசத்துரோக வழக்கைத் தீவிரப்படுத்தினார். ராணுவத்தால் இதை சகித்துக் கொள்ள முடியவில்லை. முஷாரஃப் தண்டனை பெறாமல் தப்பிக்க ராணுவம் வழி ஏற்படுத்தித் தந்தது. நவாஸும் இதற்குச் சம்மதிக்க நேர்ந்தது.

எதிர்க்கட்சி வரிசையில் உள்ள இம்ரான் கானும், தாஹிர் உல் காத்ரியும் தங்களுடைய விருப்பப்படியே அரசுக்கு எதிராக நினைத்தபோதெல்லாம் தலைநகரில் கிளர்ச்சி நடத்த முடிகிறது. ராணுவம் அவர்களுக்கு அனுமதி தருகிறது. பெஷாவர் நகரில் ராணுவ அதிகாரிகளின் குழந்தைகளைப் பள்ளிக்கூடத்தில் புகுந்து சுட்டுக் கொன்ற பயங்கரவாதிகளுக்கு எதிராக ராணுவம் தாமாகவே தாக்குதலைத் தொடுத்தது. கராச்சி நகரில் முகாஜிர் குவாமி இயக்கத்தின் தலைவர் அல்தாஃப் உசைன் மீதும் அவர்களுடைய ஆயுதம் தாங்கிய மாஃபியாக்கள் மீதும் அரசு அனுமதி பெறாமல் தன்னிச்சையாகவே ராணுவம் தாக்குதல் நடத்தியது. நவாஸுக்குக் கட்டுப்பட ராணுவம் மறுக்கிறது.

நவாஸ் ஷெரீஃப் இப்போது மூன்றாவது முறையாக பிரதமர் பதவி வகிக்கிறார். இதற்கு முன்னால் இரு முறையும் முழு பதவிக்காலமும் பதவியில் இருக்க முடியாமல் ராணுவம்தான் அவரை வீட்டுக்கு அனுப்பியது. இந்த முறை அவரை பொம்மையாக வைத்திருக்க ராணுவம் முயல்கிறது. இந்த நிலையை சகித்துக் கொண்டு அடுத்த 3 ஆண்டுகள் அவர் பதவியில் இருக்க மாட்டார் என்றே நம்புகிறேன்.

‘சர்வதேச அரங்கில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்படாமல் இருக்க வேண்டுமானால் நம்முடைய தோட்டத்தில் பாம்புகளுக்கு (பயங்கரவாத அமைப்புகள்) பால் வார்க்காதீர்கள்’ என்று நவாஸ், ஷாபாஸ் ஷெரீப் சகோதரர்கள் ராணுவத் தலைமையிடம் கூறியதாக வரும் தகவல்களை நம்பாமல் இருக்க முடியவில்லை.

1993, 1999-ல் நவாஸை எளிதில் பதவியிலிருந்து அகற்ற முடிந்தது. 2016-17-ல் கூட ராணுவத்தின் திடீர் புரட்சி காரணமாக ஆட்சிக் கவிழ்ப்பு சாத்தியமாகும். ஆனால் அப்படி நடக்காது என்று நவாஸ் நம்புகிறார். அணு ஆயுதத்தைத் தயாரித்து வைத்திருக்கும் பாகிஸ்தானில் ஏதேனும் கலவரம் நடந்து ஐ.எஸ். ஆதிக்கம் பெருகிவிட்டால் துணைக் கண்டத்தின் ராணுவ சமன் நிலைமையில் பாதிப்பு ஏற்படும். அரபு நாடுகள், ஈரான், சீனா ஆகியவை கூட அதை விரும்பாது. பாகிஸ்தான் ராணுவத்துக்கு முக்கிய ஆதரவாகத் திகழும் அமெரிக்காவும் நவாஸைத்தான் இப்போதைக்கு ஆதரிக்கும்

1993-ல் ராணுவத்தின் ஆதரவுடன் அப்போதைய அதிபர் குலாம் இஸ்ஹாக் கான், நவாஸ் ஷெரீபைப் பதவியிலிருந்து அகற்றினார். அதற்குப் பிறகு இரண்டாவது முறை பிரதமரானபோது ராணுவத்தின் அதிகாரத்தையும் செல்வாக்கையும் கட்டுப்படுத்த முயன்றார். அவருக்கே தெரியாமல் கார்கிலில் ராணுவம் ஊடுருவி போர் மூண்டது. பிறகு அவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். அங்கிருந்து வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்று தலைமறைவாக இருக்க நேர்ந்தது. இப்போது மூன்றாவது முறையாகப் பிரதமர் ஆகியிருக்கிறார். இப்போதும் அதேபோல நடந்துகொள்ள ராணுவம் முயல்கிறது. ராவணனைப்போல அவர் சர்வாதிகாரியும் அல்ல, தீமையானவரும் அல்ல. பாகிஸ்தான் ராணுவத்தை அடக்கும் வேலையில் இறங்கியிருக்கிறார் என்பதே உண்மை.

- சேகர் குப்தா, மூத்த பத்திரிகையாளர், இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்னாள் முதன்மை ஆசிரியர், இந்தியா டுடே முன்னாள் துணை தலைவர். தொடர்புக்கு: shekhargupta653@gmail.com

தமிழில் சுருக்கமாக: ஜூரி.

SCROLL FOR NEXT