சுதந்திர இந்தியாவின் தொடக்க காலத்தில் தலைசிறந்த தடகள வீரராக உருவானவர் மில்கா சிங். 1935இல் பஞ்சாபின் கோவிந்த்புராவில் (இன்றைய பாகிஸ்தானில் உள்ளது) பிறந்தவர்.
1947 இல் இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது ஏற்பட்ட கலவரத்தில் மில்கா சிங்கின் பெற்றோர் கொல்லப்பட்டனர். தன் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு பாகிஸ்தானிலிருந்து இந்தியா வந்துசேர்ந்தார் மில்கா சிங். டெல்லியில் தங்கியிருந்த காலத்தில் பல கஷ்டங்களை அனுபவித்தார்.
ராணுவத்தில் சேர்ந்த பிறகுதான், மில்கா சிங்கின் வாழ்க்கை மாறியது. ராணுவத்தில் இருந்தபோது ஓட்டப்பந்தயங்களில் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. ராணுவத்தில் பணியாற்றிக்கொண்டே ஓட்டப் பயிற்சிகளை மேற்கொண்டுவந்தார்.
பிரிட்டனில் உள்ள கார்டிப் நகரில் 1958 காமன்வெல்த் போட்டி நடைபெற்றது. 400 மீ. ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற மில்கா சிங் இந்தியாவுக்கு முதன்முறையாகத் தங்கப் பதக்கத்தைப் வென்றுகொடுத்தார். அதே ஆண்டில் டோக்கியோவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியிலும் 200 மீ., 400 மீ. ஓட்டப்பந்தயங்களில் மில்கா சிங் தங்கப் பதக்கம் வென்றார்.
1960இல் பாகிஸ்தானில் நடைபெற்ற ‘அழைப்பு ஓட்டப் போட்டி’யில் அப்துல் காலிக் என்ற பிரபல பாகிஸ்தான் வீரரைத் தோற்கடிக்க மில்கா சிங் ஓடிய ஓட்டத்தைப் பார்த்து, அந்நாட்டு அதிபர் அயூப் கான் வியந்தார். மில்கா சிங்கை ‘பறக்கும் சீக்கியர்’ என்று அவர் பெருமைப்படுத்தினார்.
1960 ரோம் ஒலிம்பிக்கில் 400 மீ. ஓட்டப்பந்தயத்தின் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்ற மில்கா சிங் நான்காமிடத்தைப் பிடித்து பதக்கம் வெல்லும் வாய்ப்பைத் தவறவிட்டார். அதே நேரம், 1962 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று அசத்தினார். சுதந்திர இந்தியாவில் தடகள விளையாட்டுகளுக்குத் தனி அடையாளம் ஏற்படுத்தித் தந்தவர் மில்கா சிங்.
- மிது