சிறப்புக் கட்டுரைகள்

சுதந்திரச் சுடர்கள் | குற்றங்களைக் களையும் ‘குலாபி கேங்’

ப்ரதிமா

பெண்களின் பொறுமை எல்லை கடந்தால் என்னவாகும் என்பதற்கு விடையாக அமைந்தது ‘குலாபி கேங்’. உத்தரப் பிரதேச மாநிலம் பாண்டா மாவட்டத்தில் உள்ள பதௌசா கிராமத்தைச் சேர்ந்தவர் சம்பத் பால் தேவி.

பெண்கள் மீதான வன்முறை, குழந்தைத் திருமணம், ஆள் கடத்தல் என்று பல்வேறு குற்றச் செயல்கள் மலிந்திருக்கும் மாநிலத்தில் பெண்கள் பெற்றுள்ள எழுத்தறிவு விகிதமும் குறைவு. சாதி வேறுபாடுகளும் அதன் காரணமாக நிகழும் ஒடுக்குமுறையும் அதிகமுள்ள இடத்தில் பெண்கள் மீதான ஒடுக்குமுறைக்குக் குறைவில்லை.

தன் மனைவியை அடித்துக் கொண்டிருந்த ஒருவரைப் பார்த்த சம்பத் தேவி அதைத் தடுக்க முயன்றார். ஆனால், அந்த ஆண் சம்பத் தேவியையும் சேர்த்துத் தாக்கினார். மறுநாள் ஐந்து பெண்களுடன் கையில் மூங்கில் கழியோடு வந்த சம்பத் தேவி, அந்த நபரைத் தாக்கினார். இந்தச் செய்தி காட்டுத்தீ போல் அந்தப் பகுதியில் பரவியது. தங்களுடைய கணவருக்கும் அதேபோன்ற தண்டனையைத் தரும்படி சம்பத் தேவியை பெண்கள் பலர் அணுகினர். சம்பத் தேவியுடன் இணைந்து செயல்படப் பலர் விரும்பினர்.

சம்பத் பால் தேவி

தன்னுடன் குழுவில் இணைந்த பெண்களின் எண்ணிக்கை அதிகரித்ததும் தங்களுக்கென்று தனி அடையாளம் இருக்க வேண்டும் என சம்பத் தேவி முடிவெடுத்தார். சகோதரத்துவத்தையும் பெண்களின் ஆற்றலையும் வெளிப்படுத்தும் வகையில் இளஞ்சிவப்பு நிறச் சேலை சீருடையாகத் தேர்ந்தெடுக்கப் பட்டது. 2006இல் ‘குலாபி கேங்’ என்கிற பெயருடன் செயல்படத் தொடங்கினர்.

அகிம்சை கைகொடுக்காத இடங்களில் கையில் ஆயுதமேந்த இவர்கள் தயங்குவதில்லை. பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கபட்ட பெண்ணுக்கு ஆதரவாகப் போராட்டம் நடத்திய வர்களைக் காவல்துறை கைதுசெய்தது. காவல் நிலையத்துக்குள் அதிரடியாக நுழைந்த ‘குலாபி கேங்’ பெண்கள், கைது செய்யப்பட்டவர்களை மீட்டதுடன் பெண்ணை வல்லுறவுக்கு ஆளாக்கியவர்கள் மீது புகார் பதிவுசெய்ய வலியுறுத்தினர். பெண்கள் பொருளாதாரரீதியாக முன்னேற்றம் அடையும் வகையில் குடிசைத் தொழிலில் ஈடுபடவும் இந்தக் குழு வழிகாட்டுகிறது. சுயஉதவிக் குழுக்கள் அமைக்கவும் உதவுகிறது.

- ப்ரதிமா

SCROLL FOR NEXT