அகமதாபாத்தில் காந்தியின் உரையைக் கேட்டு, வழக்கறிஞர் தொழிலைக் கைவிட்டுச் சுதேசி இயக்கத்தில் சேர்ந்தவர் வல்லபபாய் படேல். கேடா மாவட்டத்தில் ஏற்பட்ட பஞ்சத்தின் காரணமாக, மக்கள் வரிவிலக்குக் கேட்டுப் போராடினார்கள்.
ஆங்கி லேய அரசு செவிசாய்க்கவில்லை. காந்தியும் படேலும் ‘வரி கொடா’ இயக்கத்தைப் பெரிய அளவில் நடத்தியதன் காரணமாக வரி ரத்துசெய்யப்பட்டது. இது படேலுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கை அதிகரித்தது.
1920இல் குஜராத் காங்கிரஸ் கமிட்டியின் தலைவரானார் படேல். ஒத்துழையாமை இயக்கத்துக்காக மாநிலம் முழுவதும் பயணித்து, மூன்று லட்சம் மக்களைத் திரட்டினார். தீண்டாமை, சாதிப் பாகுபாடு, மதுபானம் ஆகியவற்றுக்கு எதிராகப் போராடினார். பெண்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்ற பரப்புரையிலும் ஈடுபட்டார்.
மகாத்மா காந்தி சிறையில் அடைக்கப்பட்டபோது, இந்தியக் கொடியை ஏற்றுவதைத் தடைசெய்யும் ஆங்கிலேய சட்டத்திற்கு எதிராக, நாக்பூரில் சத்தியாகிரகப் போராட்டத்தை நடத்தும்படி படேல் கேட்டுக்கொள்ளப்பட்டார்.
காந்தியும் படேலும் எரவாடா சிறையில் 1932இல் இருந்தபோது, இருவருக்கும் நெருக்கமான நட்பு உருவானது. அடுத்த சில ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியில் படேலின் செல்வாக்கு அதிகரித்தது. சோசலிசத்தை ஏற்றுக்கொள்வதாக காங்கிரஸ் அறிவித்தபோது, அது விடுதலையைத் தாமதப்படுத்தும் என்று நேருவுடன் படேல் முரண்பட்டார்.
அகமதுநகரில் உள்ள கோட்டையில் 1942 முதல் 1945 வரை முழு காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினர்களுடன் சிறையில் அடைக்கப்பட்டார் படேல். அங்கிருந்துகொண்டே போராட்டக்காரர்களுக்கு நம்பிக்கை அளித்துக்கொண்டிருந்தார்.
தேசப் பிரிவினையை ஏற்றுக்கொண்ட தலைவர்களில் படேலும் ஒருவர். 1947இல் சுதந்திர இந்தியாவின் முதல் துணைப் பிரதமராகவும் முதல் உள்துறை அமைச்சராகவும் படேல் பொறுப்பேற்றுக்கொண்டார். இந்தியாவில் பிரிந்து கிடந்த 500க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒன்றிணைக்கும் மாபெரும் பணியைத் திறம்படச் செய்து முடித்ததால், இந்தியாவின் 'இரும்பு மனிதர்' என்று அழைக்கப்பட்டார்.
காந்தியை நாதுராம் கோட்சே சுட்டுக் கொன்றதால், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைத் தடைசெய்தார். சில நிபந்தனைகளின் பெயரில் அடுத்த ஆண்டு அந்த இயக்கத்துக்கான தடை நீக்கப்பட்டது. 1950இல் மறைந்த படேல், ‘குடிமைப் பணிகளின் தந்தை'யாக நினைவுகூரப்படுகிறார்.
- ஸ்நேகா