சிறப்புக் கட்டுரைகள்

சுதந்திரச் சுடர்கள் | தமிழ்நாடு: மீனவ சமூகத்திலிருந்து ஒரு பெண் அமைச்சர்

மிது

இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு தமிழகத்தில் ஒரு பெண் முதல்வ ராக 41 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. 1988இல் ஜானகி ராமச்சந்திரன் பதவியேற்றதன் மூலம் இது நடந்தது. இடைப்பட்ட காலத்தில் பெண்கள் பலர் மாநில அமைச்சர்களாக இருந்திருக்கிறார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் லூர்தம்மாள் சைமன்.

நாகர்கோவிலைச் சேர்ந்த லூர்தம்மாள் அந்தப் பகுதியில் பிரபலமானவராக விளங்கினார். ஒய்.எம்.சி.ஏ. அமைப்பின் செயலாளர், கஸ்தூரி பாய் மாதர் சங்க உறுப்பினர், ரோட்டரி, லயன்ஸ் உறுப்பினர், செவித்திறன் இழந்தோர், வாய் பேச முடியாதோர் சங்கத்தின் தலைவர் என்று நாகர்கோவிலில் பல பரிமாணங்களில் சமூகப் பணியாற்றிவந்தார்.

இவருடைய கணவர் சைமன், கேரள அமைச்சராகவும் பின்னர் தமிழக ஆளுநராகவும் இருந்த ஏ.ஜெ.ஜானின் நெருங்கிய நண்பர். 1957இல் மதராஸ் மாநிலத்துக்கான பொதுத் தேர்தல் நடைபெற்றபோது, தகுதி வாய்ந்த பெண் வேட்பாளரை நிறுத்த காமராஜர் விரும்பினார்.

அப்போது லூர்தம்மாளை காமராஜருக்கு அறிமுகப்படுத்தினார் ஏ.ஜெ. ஜான். லூர்தம்மாளின் பன்மொழிப் புலமையும் அறிவுத் திறனும் காமராஜரைக் கவரவே, குளச்சல் தொகுதியில் வேட்பாளராக அவரை நிறுத்தினார். தேர்தலில் வென்று காமராஜர் இரண்டாவது முறை முதல்வராகப் பதவியேற்றபோது, அவருடைய அமைச்சரவையில் 7 பேர் இடம்பெற்றனர்.

அப்போது லூர்தம்மாளுக்கு உள்ளாட்சித் துறையும் மீன்வளத் துறையும் ஒதுக்கப்பட்டது. லூர்தம்மாள், மீனவ சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

லூர்தம்மாளுக்கு முன்பாக சென்னையில் சமூக சேவைக்காக அறியப்பட்ட ஜோதி வெங்கடாசலம் 1953இல் ராஜாஜி அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தார்.

ஜோதி வெங்கடாசலம் சட்ட மேலவை உறுப்பினராக இருந்து அமைச்சரானார். லூர்தம்மாள் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அமைச்சரானவர். அதன்மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் அமைச்சர் என்ற சிறப்பை லூர்தம்மாள் பெற்றார்.

- மிது

SCROLL FOR NEXT