சிறப்புக் கட்டுரைகள்

சுதந்திரச் சுடர்கள் | ஆளுமை: கற்பி, ஒன்று சேர், புரட்சி செய்!

செய்திப்பிரிவு

ஆங்கிலேய அரசுக்கு எதிராக ஒரு பகுதி இந்தியர்கள் போராடிக் கொண்டிருந்தபோது, இன்னொரு பகுதி இந்தியர்கள் சாதியக் கொடுமைகளுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருந்தார்கள்.

அவர்களில் அம்பேத்கரும் ஒருவர். கல்வி ஒன்றே தம்மை உயர்த்தும் என்பதை உணர்ந்திருந்தவர், கடினமான பொருளாதாரச் சூழலிலும் சிறப்பாகக் கல்வி பயின்றார். பரோடா மன்னரின் உதவியால் அமெரிக்காவில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி குறித்து ‘The problem of the Rupee: Its Origin and Solution' என்ற முக்கியமான ஆய்வு நூலை 1923இல் வெளியிட்டார். 1934இல் கில்டன் ஆணையத்திடம் அம்பேத்கர் கூறிய கருத்துகளின் அடிப்படையில் 'இந்திய ரிசர்வ் வங்கி' உருவாக்கப்பட்டது. இவை பொருளாதாரத்தில் அம்பேத்கருக்கு இருந்த நிபுணத்துவத்துக்கான சான்றுகள்.

மகாராஷ்டிரத்தின் மகத் நகரில் இருந்த பொதுக்குளத்தில் பட்டியலினத்தவர்கள் நீர் எடுக்க அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து 1927இல் அம்பேத்கர் சத்தியாகிரகப் போராட்டத்தை நடத்தினார். நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு 1937 இல் மகத் குளத்தை அனைவரும் பயன்படுத்துவதற்கான உரிமையை பம்பாய் உயர் நீதிமன்றம் வழங்கியது.

சமூகத்திலும் பொருளாதாரத்திலும் ஒடுக்கப்பட்ட மக்களின் கைகளில் அதிகாரம் கிடைக்க வேண்டும் என்றால், ‘கற்பி, ஒன்று சேர், புரட்சி செய்’ என்ற முழக்கத்தை அம்பேத்கர் முன்னெடுத்தார்.

இரண்டாம் வட்ட மேஜை மாநாட்டில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் குறித்து விவாதிக்கப்பட்டது. பட்டியலினத்தவர்களுக்குத் தனி வாக்குரிமையும் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டும் என்று அம்பேத்கர் வலியுறுத்தினார். இதன் விளைவாக இரட்டை வாக்குரிமை வழங்கப்பட்டது.

இதை காந்தி எதிர்த்தார். 1932இல் காந்திக்கும் அம்பேத்கருக்கும் இடையில் ‘பூனா ஒப்பந்தம்' ஏற்பட்டது. இதன் மூலம் தனி வாக்குரிமைக்குப் பதிலாக, தனித் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அனைவரும் வாக்களித்தனர்.

சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகப் அம்பேத்கர் பொறுப்பேற்றார். அவர் தலைமையில் அரசமைப்பை உருவாக்கும் பணி நடைபெற்றது. பிரதமர் நேருவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 1951 இல் பதவியை அம்பேத்கர் ராஜினாமா செய்தார். ‘பாரதிய பௌத்த மகாசபா'வை 1955இல் அவர் தோற்றுவித்தார்.

ஆறு லட்சம் இந்துக்கள் அம்பேத்கர் தலைமையில் பௌத்தத்தைத் தழுவினார்கள். ‘புத்தரும் அவரின் தம்மமும்’ என்ற நூலை எழுதிய சில நாட்களில் 1956இல் அம்பேத்கர் மறைந்தார். இந்திய மக்களிடையே செல்வாக்கு அதிகரித்துவரும் தலைவராக பாபாசாகேப் அம்பேத்கர் மட்டுமே இருக்கிறார்!

- ஸ்நேகா

SCROLL FOR NEXT