இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் மட்டுமல்ல, ஆங்கிலேய காலனியாதிக்க வரலாற்றிலும் அழிக்க முடியாத கறை ஜலியான்வாலா பாக் படுகொலை. இன்றைக்கு ஜலியான்வாலா பாக் சென்றாலும், ராணுவ வீரர்கள் சுட்ட குண்டுகள் பாய்ந்து பெயர்ந்த செங்கல் தடங்கள் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால், ஜலியான்வாலா பாக் துயரத்தை முழுமையாக உணர்ந்திருக்கிறோமா? அங்கே உயிர் துறந்தவர்களின் கனவு அடுத்துவந்த தலைமுறைகளில் நிறைவேற்றப் பட்டிருக்கிறதா?
முதலாவதாக ஜலியான்வாலா பாக்கில் கொல்லப்பட்டவர்கள் திட்டவட்டமாக எத்தனை பேர் என்றே தெரியாது. அந்த எண்ணிக்கையோ, பெயர்களோ முறைப்படி ஆவணப்படுத்தப்படவில்லை. அடுத்ததாக ஜலியான்வாலா பாக்கில் பலியானவர்களின் வாரிசுகள், தங்கள் முன்னோர்களைப் பற்றி என்னவாகத் தங்கள் மனத்தில் வடித்துக்கொண்டிருப்பார்கள்? அந்தப் படுகொலை நிகழ்விலிருந்து அவர்கள் பெற்றுக்கொண்டது என்ன? அந்தப் படுகொலையின் நினைவுகளாக நாம் எதைப் பாதுகாத்துவைத்துள்ளோம்? நமது நிகழ்காலத்துடன் ஜலியான்வாலா பாக் படுகொலை உறவாடுகிறதா? – இப்படிக் கேள்விகள் நீளுகின்றன. இந்தக் கேள்விகள் எழுவதற்குக் காரணமாக இருந்தது ஒரு புத்தகம்.
சென்னையில் பிறந்த சுசித்ரா விஜயன், அடிப்படையில் ஒரு வழக்குரைஞர். எழுத்தாளர், இதழாளரும்கூட. சர்வதேச அகதிகள் நலனுக்காகச் செயல்பட்டுவருகிறார். ஐ.நா.வின் போர்க் குற்றத் தீர்ப்பாயத்தில், இராக் அகதிகளுக்கு மறுகுடியேற்ற சட்ட உதவித் திட்டத்தை நிறுவியவர். அவர் எழுதி கடந்த ஆண்டு வெளியான ‘Midnight's Borders: A People's History of Modern India’ என்கிற நூலில் ஜலியான்வாலா பாக் குறித்து விரிவாகப் பேசப்பட்டுள்ளது. இந்த நூலின் இறுதி அத்தியாயமாக இந்தப் பகுதி இடம்பெற்றுள்ளது. நம் முன் கட்டமைக்கப்பட்டுள்ள வரலாறு இதுவரை பல கேள்விகளுக்குப் பதில் தரவில்லை. கேட்கப்படாத அந்தக் கேள்விகளைத் தனிநபர்களின் வரலாறுகளின் அடிப்படையில் சுசித்ரா விஜயன் எழுப்பியிருக்கிறார்.
வரலாற்றில் இடம் தரப்படாதவர்கள்
நியூயார்க்கில் வாழும் தனது தோழி நடாஷா ஜாவெத்தை, சுசித்ரா விஜயன் சந்தித்துப் பேசுகிறார். நடாஷா பாகிஸ்தானைச் சேர்ந்தவர். நடாஷாவின் பாட்டியின் தாத்தா ஜலியன்வாலா பாக் நிகழ்வில் படுகொலை செய்யப்பட்டவர். அந்தத் தகவலே நூறாண்டுகள் கழித்துத்தான் தெரியவந்திருக்கிறது. நடாஷாவின் அம்மா மனோ ஜாவெத், அவர்களுடைய குடும்ப வரலாற்றைப் பற்றிப் பெரிதாக வாய் திறந்ததே கிடையாது. எதிர்பாராத ஒரு தருணத்தில்தான் ஜலியான்வாலா பாக்கில் பாட்டியின் தாத்தா பலியானது நடாஷாவுக்குத் தெரியவந்தது. அவர் பலியானதற்குப் பிந்தைய நான்கு தலைமுறைப் பெண்களிடம் ஒருவித அசாதாரண மௌனம் நிலவிவந்திருக்கிறது. “எனது பாட்டியும் சின்னபாட்டியும் ஜலியான்வாலா பாக்கில் அவர்களுடைய தந்தையைப் பலிகொடுத்ததில் இருந்துதான் இது எல்லாமே தொடங்கியிருக்கிறது” என்று மனோ ஜாவெத் குறிப்பிட்டிருக்கிறார்.
நடாஷாவின் பாட்டியின் தாத்தா மிர் அப்துல் ரஹிம் காஷ்மீரிலிருந்து அமிர்தசரஸில் குடியேறியவர். முதல் உலகப் போரின்போது கடுமையான அடக்குமுறைச் சட்டங்களை இயற்றிய பிரிட்டன், இந்திய விடுதலைப் போராட்டம் செல்லும் திசையை மிகப் பெரிய ஆபத்தாகக் கருதி ரவுலட் சட்டத்தை நடைமுறைப்படுத்தியது. அப்போது இந்திய விடுதலைப் போராட்டத்தால் ஈர்க்கப்பட்ட ரஹிம், ஜலியான்வாலா பாக் கூட்டத்துக்குச் சென்றிருந்தார். அப்போது அவருடைய வயது 23.
அங்கே அவர் பலியான பிறகு, அவருடைய மனைவி, சின்னஞ்சிறுமிகளான மகள்களுக்கு எதுவுமே பாதுகாப்பாக இல்லை, எதுவுமே உத்தரவாதமாகக் கிடைக்கவும் இல்லை. அரச பயங்கரவாதம் மூலம் ஆங்கிலேய அரசு மக்களைப் படுகொலை செய்தபோது, இரண்டு சிறுமிகள் தங்கள் வாழ்க்கையைப் பாதுகாத்துக் கொள்வதற்கான அடிப்படை உரிமையை இழந்தார்கள். அந்தத் தருணத்திலிருந்து தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்வது ஒன்றே அவர்களது முதன்மை நோக்கமாக மாறியது. அதன் காரணமாக நடாஷாவினுடைய பெண் மூதாதையர்கள் முழுமையாக ஆண்களைச் சார்ந்திருக்கத் தொடங்கினார்கள். கடுமையான ஆணாதிக்க ஒடுக்குமுறைகளால் பாதிக்கப்பட்டார்கள்.
பெண்களின் பெரும் துயரங்கள்
ரஹிமின் திடீர் இறப்பு மூன்று பெண்களின் வாழ்க்கையைச் சீர்குலைத்ததுடன், இழப்பு-பயம்-பாதுகாப்பின்மையை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் கடத்தியது. அது ஒரு சமூகக் குணமாக மாறிவிட்டது. இது ஒரு ஆறாத ரணம் என்றால், ஜலியான்வாலா பாக் படுகொலைக்கு 28 ஆண்டுகள் கழித்து இந்தியப் பிரிவினையின்போது மற்றொரு பெரும்துயரம் நடந்தேறியது.
அப்போது நடாஷாவின் பாட்டி நுஸ்ஸத் அமிர்தசரஸிலிருந்து லாகூருக்கு இடம்பெயர வேண்டிய நெருக்கடி எழுந்தது; தனது வேர்களையும் மண்ணையும் முழுமையாகத் துறக்க வேண்டிவந்தது. இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது நிகழ்ந்த கலவரம், பெருமளவு பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டது, கும்பல் மனப்பான்மை ஆகியவற்றின் காரணமாக ஆண்களைக் குறித்த பெரும் பயம் பெண்களிடையே வலுவடைந்திருக்க வேண்டும். இப்படி ஒரு பெண்ணின் மனத்தில் படியும் பயம், அடுத்தடுத்த தலைமுறைப் பெண்களுக்கும் கடத்தப்படுகிறது.
நடாஷாவின் பாட்டி நுஸ்ஸத் பிரிவினை குறித்துப் பெரிதாக எதுவுமே பேசியதில்லை. அவ்வளவு ரத்தம் சிந்தப்பட்ட பிறகு, பேரிழப்புகளுக்குப் பிறகு தான் வஞ்சிக்கப்பட்டதாகவே அவருக்குத் தோன்றியது. இந்தப் பின்னணியில் இந்தியத் திரைப்படங்கள், பாடல்கள், கலைகளைத் தனக்கான வடிகாலாக நடாஷாவின் பாட்டி தேர்ந்தெடுத்துக்கொண்டார். இது பொழுதுபோக்கு சார்ந்த ஆர்வமாகப்பொதுவாகப் பார்க்கப்படும். ஆனால், அது வெறும் பொழுதுபோக்கு அல்ல. பிரிவினையின் காரணமாக அவர்களிடமிருந்து பிரித்தெடுக்கப்பட்ட வாழ்க்கையுடன் ஏதோ ஒரு வகையில் தொடர்புகொள்வதற்கான முயற்சி அது. தாங்கள் சென்றடைய முடியாத நிலத்துக்கு, சென்றடைய முடியாத காலத்துக்கு ஒரு பதிலீடாக இந்தியத் திரைப்படங்கள் பாகிஸ்தானியர்களுக்குத் திகழ்ந்தன.
பாகிஸ்தானிலேயே வளர்ந்த நடாஷாவின் அம்மா மனோ ஜாவெத்தால் யாருடனும் ஓட்ட முடியவில்லை. காரணம் அவருடைய நேரடி உறவினர்கள் யாரும் அங்கில்லை. தனது குடும்பத்துக்கு ஏற்பட்ட இழப்பைப் போல் வேறு யாருக்கும் ஏற்பட்டதாக அவர் நினைக்கவில்லை. அவருடைய வலிக்கு மருந்தும் கிடைக்கவில்லை.
பெற்றது என்ன?
பிரிவினையின் காரணமாக இரண்டு கோடி பேர் பாதிக்கப்பட்டார்கள். அவர்கள் மனங்களில் வன்முறையும் மனக்காயமும் ஆழமாகப் பதிந்திருக்கின்றன. இந்தக் காயங்களுக்கு எந்த மருந்தும் இதுவரை இடப்படவில்லை. ஆனால், அதே நேரம், 1947 வரை ஒரே மண்ணைப் பகிர்ந்துகொண்டிருந்த மக்கள் கூட்டம், கடந்த 75 ஆண்டுகளாக ஜன்ம எதிரிகளாக ஏன் பார்க்கப்பட வேண்டும்?
ஜலியான்வாலா பாக் படுகொலையில் மிர் அப்துல் ரஹிம் பலியானது, இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின்போது நடாஷாவின் பாட்டி நுஸ்ஸத் தன் தாய்மண்ணைத் துறந்தது என்று அடுத்தடுத்து நிகழ்ந்த பெருந்துயரங்களால் அந்த வம்சத்தின் குணாம்சமே மாறிவிட்டது. ஆனால், ஒரு நாட்டின் விடுதலைக்குப் போராடிய, சுதந்திர தேசத்துக்கு ஆசைப்பட்டவர்களின் இன்றைய வாரிசுகள் தங்கள் மூதாதையர்களை என்னவாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள்? ஜலியான்வாலா பாக் படுகொலையும் இந்தியா-பாக். பிரிவினையும் பாடப்புத்தகங்களில் படிப்பதற்கான வெறும் வரலாற்றுத் தகவல்கள் மட்டும்தானா? அவற்றிலிருந்து நாம் பெற்றுக்கொண்டதும் கற்றுக்கொண்டதும் என்னென்ன?
தொடர்புக்கு: valliappan.k@hindutamil.co.in